ரயிலைப் பற்றிய பாடல்களுக்கும், ரயிலில் படமாக்கப்பட்ட பாடல்களுக்கும் இந்திய சமூகத்தில் எப்போதுமே வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. சாதி பேதமில்லாமல் அனைத்து சாதியினரையும் ரயில் சுமந்து செல்கிறது என ரயிலை சமத்துவ கண்ணோட்டத்தில் அணுகி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் புனைந்த திரைப்பாடல்தான் ரயில் குறித்தப் பாடல்களிலேயே தலையானது.
மணிரத்னத்தின் உயிரே படத்தில் இடம்பெற்ற சைய சையா... பாடல் ரயிலில் படமாக்கப்பட்ட பாடல்களில் மிகச்சிறப்பான ஒன்று. அஜித்தின் காதல் கோட்டை வெளியான போது, அதில் இடம்பெற்ற ரயில் பாடலான, வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய் ரசிகர்களால் அதிகம் விரும்பி கேட்கவும், பார்க்கவும்பட்டது.
அதேபோல் 1971 இல் சிவாஜியின் தங்கைக்காக வெளியான போது ரசிகர்களால் விரும்பப்பட்ட ரயில் பாடல், அங்கமுத்து தங்கமுத்து...
பிக்னிக்கிற்கு ரயிலில் செல்லும் நாகேஷும் அவரது நண்பர்களும் ஆடிப்பாடுவது போல் ஒரு பாடல் தங்கைக்காக படத்தில் இடம்பெற்றது. அதனை கண்ணதாசன் எழுதினார்.
கல்லூரி மாணவர்களின் கலாட்டாவும், சமூகத்து நிலையும், எதிர்கால நம்பிக்கையும் மாணவர்களின் மொழியில் அமைய வேண்டும். இந்த நான்கு சவால்களுடன் கண்ணதாசன் சிரமமே இல்லாமல் தமிழ், ஆங்கிலம் கலந்து எழுதினார்.
''அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்ட வந்தாளாம்
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்ட வந்தாளாம்
நீலக் குங்கும பாமா உன் சேலை விலகலாமா
நீளக் கூந்தல் மீனா அதில் பாதி இரவல் தானா
ஒன் பாயும் கேலும் மீட்டு அதில் டேயும் நைட்டும் ஹீட்டு
ஒன் பாயும் கேலும் மீட்டு அதில் டேயும் நைட்டும் ஹீட்டு
ஓ பாய்ல பாய்ல பாய்ல ஓ பாய்ல பாய்ல பாய்ல
ஆபரேஷன் இல்லாமலே ஆம்பளை பொம்பளையானான்
கோ ஆப்ரேஷன் தேடிகிட்டு கோடம்பாக்கம் போனான்
கார்ப்பரேஷன் லாரி ஒன்று கட்டியிருக்குது ஸாரி
ஆசை கொஞ்சம் மீறி இவ ஆறு மாசம் கேரி
ஓ பாய்ல பாய்ல பாய்ல ஓ பாய்ல பாய்ல பாய்ல
- இப்படி செல்லும் பாடலில், அப்போதைய திமுக அரசை சீண்டியிருந்தார் கண்ணதாசன். திமுக அனுதாபியாக இருந்து, அறுபதுகளின் இறுதியில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்தார் கவிஞர். அந்த சிவகாமி மகனிடம் போய் சேதி சொல்லடி, அவனை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி... என பாடல் வரிகளில் கமாராஜருக்கு கவிஞர் தூதும் அனுப்பினார். 1971 இல் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
அதனை இடித்துரைத்து, இவன் காலேஜுக்கு போகாமலே கல்வி மந்திரி ஆனான். இவன் காப்பி ஹோட்டல் வச்சிருந்தவன் உணவு மந்திரி ஆனான்- என எழுதினார். அப்போது இந்தி எதிர்ப்பு மனநிலை மாணவர்களிடையே இருந்தது. அதையும் பாடலில் குறிப்பிட்டு, திமுக ஆட்சி அகன்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்ற தனது மனவிருப்பத்தையும் பாடலில் சேர்த்துக் கொண்டார்.
தமிழ்ப் படிக்கும் எங்களுக்குத்
தமிழிலேதான் பக்தி - அதைத்
தடுக்க வந்தால் திரண்டு எழும்
மாணவர்கள் சக்தி...
பொருளியலும் படிப்போம்
நாட்டில் புது வழியும் படைப்போம்
அரசியலை மதிப்போம் இந்த
ஆட்சியையும் பிடிப்போம்
எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்
எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்ட வந்தாளாம்
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்ட வந்தாளாம்
கவிதைத் தமிழில் மட்டுமல்ல, கலப்பட தமிழிலும் பாடல் புனைய முடியும் என்பதை கண்ணதாசன் பல பாடல்களில் நிரூபித்திருக்கிறார். அதில் அரசியல் நிலைப்பாட்டையும் சொல்ல முடியும் என்பதற்கு சான்று இந்தப் பாடல்.
அங்கமுத்து தங்கமுத்து பாடல் இடம்பெற்ற தங்கைக்காக திரைப்படம், 52 வருடங்களுக்கு முன், 1971 பிப்ரவரி 6, இதே நாளில், கே.பாலசந்தரின் நான்கு சுவர்கள் படத்துடன் வெளியானது. படம் 12 வாரங்கள் ஓடி கமர்ஷியலாக வெற்றி பெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema