ரூ.180 கோடி மோசடி... தயாரிப்பாளர் கருணாகரன் மீது லைகா புகார்!

ரூ.180 கோடி மோசடி... தயாரிப்பாளர் கருணாகரன் மீது லைகா புகார்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 26, 2019, 6:43 PM IST
  • Share this:
ரஜினி, விஜய், கமல், சிம்பு, நயன்தாரா என முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து மெகா பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனம் தான் லைகா.  2.0 படம்  இவர்களின் மிக முக்கிய தயாரிப்புகளில் பிரதான படமாகும்.

இந்த நிறுவனத்தில் மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐங்கரன் கருணாமூர்த்தி மீது குற்றச்சாட்டை முன்வைத்து லைகா இயக்குநர் நீலகண்ட் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

எப்படி நடந்தது 180 கோடி ரூபாய் மோசடி?


இலங்கையைச் சேர்ந்த சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவரின் நிறுவனம் லைகா மொபைல். இதன் துணை நிறுவனம் தான் லைகா சினிமா தயாரிப்பு நிறுவனம். இது 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சினிமா துறையில் புதிதாக கால் பதித்ததால் பல ஆண்டுகளாக சினிமாத் துறையில் இருந்த இலங்கையைச் சேர்ந்த ஐங்கரன் கருணாமூர்த்தியை ஆலோசகராக நியமித்தது லைகா. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்கள் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தையும் கருணாமூர்த்தியிடமே வழங்கியது

இதன்படி விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 2014ஆம் ஆண்டு கத்தி படத்தை தயாரித்து லைகா நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன்' உள்ளிட்ட படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்தது. 'கத்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன்' ஆகிய படங்களின் வெளிநாட்டு உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமையில் 90 கோடி ரூபாயை குறைத்து காட்டி ஐங்கரன் மோசடி செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் லைகா நிறுவனத்தின் வழக்கறிஞர் சரண்யா.மேலும் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, தியா, இப்படை வெல்லும் படங்களின் உரிமங்களை விநியோகஸ்தர்களுக்கு கொடுத்ததிலும் பதிமூன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

லைகாவிற்கு தெரியாமலேயே நடிகர் சிம்புவை வைத்து 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை, எடுத்து 14 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டை லைகா நிறுவனத்தின் வழக்கறிஞர் சரண்யா கூறியுள்ளார்

கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' என்ற படத்தை எடுக்கும் விஷயமே தங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ள லைகா நிறுவனம், இதன் மூலம் நான்கரை கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கருணாமூர்த்தி மீது குற்றம்சாட்டியுள்ளது. மேலும் லைகா சினிமா தாயரிப்பு நிறுவனத்தின் 25 கோடி ரூபாய் பணத்தை, தங்களுக்கே தெரியாமல் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கடனாக கொடுத்தும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கருணாமூர்த்தி மீது லைகா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை பயன்படுத்தி 180 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதை பெற்றுத் தருமாறும் ஐங்கரன் கருணாமூர்த்தி மற்றும் லைகா நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் பானு மீது நிறுவனத்தின் இயக்குநர் நீலகண்ட் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அறிய ஐங்கரன் கருணாமூர்த்தியைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மெகா பட்ஜெட்டில் மெகா ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் லைகா நிறுவனத்தில் நடைபெற்றுள்ள மெகா மோசடி திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வீடியோ பார்க்க: என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading