ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

65 வருடங்களை நிறைவு செய்யும் எல்.வி.பிரசாத்தின் பாக்கியவதி

65 வருடங்களை நிறைவு செய்யும் எல்.வி.பிரசாத்தின் பாக்கியவதி

பாக்கியவதி

பாக்கியவதி

சிவாஜி நடித்த பாக்கியவதி திரைப்படத்தின் கதை, வசனத்தை ரா.வே. எனப்படும் ரா. வேங்கடாச்சலம் எழுதினார். படத்தை ஏ.சி.பிள்ளை என்பவர் தயாரித்தார். அடிப்படையில் வங்கி ஊழியரான இவர் சினிமா மீது கொண்ட விருப்பத்தால் பாக்கியவதியை தயாரித்தார். விஜயா வாகினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

1959 ஆம் ஆண்டு, டிசம்பர் 27 இதே நாளில் எல்.வி.பிரசாத்; இயக்கிய பாக்கியவதி திரைப்படம் திரைக்கு வந்தது. சிவாஜி கணேசன், பத்மினி, ராகினி, எம்.என்.ராஜம், கே.வி.தங்கவேலு, கே.சாரங்கபாணி என பலர் நடித்திருந்தனர். தட்சிணாமூர்த்தியின் இசையில் மருதகாசி பாடல்கள் எழுதினார். வெண்ணிலவின் ஒளி தனிலே... பாடலை மட்டும் சுப்பு ஆறுமுகம் எழுதினார்.

இனிக்க இனிக்க குடும்பக் கதைகளையும், சிரிக்கச் சிரிக்க நகைச்சுவை படங்களையும் தந்தவர் இயக்குனர் எல்.வி.பிரசாத். இன்று தமிழ் சினிமாவின் போஸ்ட் புரொடக்ஷனில் பங்களிப்பு செலுத்தி வரும் பிரசாத் ஸ்டுடியோ உள்பட அந்தப் பெயரில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் உருவாக்கியவர் இவர். சினிமா மீதுள்ள காதலால் உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்துறைகளில் தடம் பதித்தவர்.

எல்.வி.பிரசாத்தின் பூர்வீகம் ஆந்திரா. சினிமா மீதுள்ள பேரார்வத்தால் சினிமா கற்றுக் கொள்ள மும்பைக்கு வண்டியேறினார். வாட்ச்மேன் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் செய்து, சினிமாவின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்தார். 1931 இல் வெளிவந்த இந்தியின் முதல் பேசும்படமான ஆலம் ஆராவில் நடித்தார். அந்த வருடம் வெளியான மௌனப் படம், கமார் அல் ஸமான் உள்பட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 1938 இல் வெளியான இந்திப் படம் ஸ்த்ரீயில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தார். 1946 இல் ஆந்திரா திரும்பி படங்கள் இயக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவருடன் நண்பராக இருந்தவர் சிவாஜியின் வசந்த மாளிகை உள்பட பல வெற்றிப் படங்களை பிற்காலத்தில் இயக்கிய பிரகாஷ்ராவ். மும்பையில் நண்பர்களான இருவரும் தெலுங்கில் படங்கள் இயக்கினர். எல்.வி.பிரசாத் இயக்கிய துரோகியில் பிரகாஷ் ராவும், பிரகாஷ் ராவ் இயக்கிய கிரகலட்சுமியில் எல்.வி.பிரசாத்தும் நடித்தனர்.

அன்று தெலுங்கு, மலையாள, கன்னடப் படங்களும் சென்னையில்தான் தயாராகின. அதனால், மலையாளம், தெலுங்கு, கன்னட இயக்குனர்களும் தமிழைக் கற்று தமிழர்கள் அளவுக்கு நம்மொழியில் புலமையும் பெற்றிருந்தனர். இதனால், ஒரு வசதி. ஒரு படத்தை தமிழில் எடுக்கும் போதே, அவர்களின் தாய் மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்க முடியும். அப்படி எல்.வி.பிரசாத்தின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரான கல்யாணம் பண்ணிப்பார், கடன் வாங்கிக் கல்யாணம், மிஸ்ஸியம்மா படங்கள் பிரமாண்ட வெற்றிகளை பெற்றன. இதில் மிஸ்ஸியம்மா படத்தினால் கவரப்பட்ட ஏவிஎம் செட்டியார் படத்தின் இந்தி உரிமையை விஜயா புரொடக்ஷன்ஸ் நாகிரெட்டியாரிடமிருந்து வாங்கி இந்தியில் தயாரித்தார். இந்திப் படத்தையும் எல்.வி.பிரசாத்தே இயக்கினார். படம் அங்கும் வெற்றி பெற, தொடர்ந்து பல இந்திப் படங்களை இயக்கினார்.

சிவாஜி நடித்த பாக்கியவதி திரைப்படத்தின் கதை, வசனத்தை ரா.வே. எனப்படும் ரா. வேங்கடாச்சலம் எழுதினார். படத்தை ஏ.சி.பிள்ளை என்பவர் தயாரித்தார். அடிப்படையில் வங்கி ஊழியரான இவர் சினிமா மீது கொண்ட விருப்பத்தால் பாக்கியவதியை தயாரித்தார். விஜயா வாகினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

பாக்கியவதியில் பத்மினி பாக்கியம் வாய்க்காத யுவதியாக நடித்தார். இவரது கணவர் சிவாஜி கணேசன். திருட்டு, உருட்டு என அனைத்து குற்றச் செயல்களையும் செய்கிறவர். சிறை செல்வது அவருக்கு சாதாரணம். கணவனிடம் கோபித்து, அம்மா வீட்டில் அடைக்கலம்புகும் பத்மினி சிவாஜியை எப்படி திருத்துகிறார் என்பதை தனது அனுபவ இயக்கத்தில் காட்டியிருந்தார் எல்.வி.பிரசாத். இதற்கு இணையாக இதேபோல் ஒரு கிரிமினல் கதையை வைத்தது படத்துக்கு எதிர்மறையாகப் போய், பாக்ஸ் ஆபிஸில் படம் சுணங்கியது. ஆனாலும் வாங்கியவர்களின் கையை கடிக்கவில்லை என்கிறார்கள் அன்றைய விமர்சகர்கள். படத்தில் இடம்பெற்ற எட்டு பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன.

1959, டிசம்பர் 27 வெளியான பாக்கியவதி இன்று 65 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.

Also read... தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படமும், பரிசுத்த நாடாரின் யாகப்பா திரையரங்கும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sivaji