லுபின்: த்ரில்லர் ரசிகர்களுக்கான ஃப்ரெஞ்சு வெப் சீரிஸ்!

லுபின் வெப் சீரிஸ்

நெக்லஸ் ஒன்று காணாமல் போக, அவர் மீது திருட்டு குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு அங்கேயே தற்கொலை செய்து கொள்கிறார்.

  • Share this:
திருட்டை பற்றிய கதைகள் தனி சுவாரஸியம் கொண்டவை. திருட்டுக்கு எப்படி திட்டமிடுகிறார்கள், அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள், கடைசிநேர துரோகங்கள், அதை மீறி எப்படி திருடுகிறார்கள், அவர்கள் தவறவிடும் தடயத்தை நூல் பிடித்து திருடியவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என சுவாரஸியங்களை பல அடுக்குகளாக கொண்டவை இவ்வகை படங்கள். யாரிடம் திருடுகிறார்கள், எதைத் திருடுகிறார்கள் என்பதும் கடைசிநேர அதிர்ச்சியை தரக்கூடியவை. இவற்றுடன் பழி வாங்கலும் சேர்ந்தால் அதுதான் லூபைன் வெப் சீரிஸ்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1905) Arsène Lupin என்ற அதிபுத்திசாலியான திருடன் கதாபாத்திரத்தை பிரெஞ்ச் எழுத்தாளர் Maurice Leblanc உருவாக்கி, அந்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி சிறுகதைகளும் சுமார் 17 நாவல்களும் எழுதினார். பிறகு இவை காமிக்ஸ்களாக வெளிவந்தன. இந்த கற்பனை திருடர் கதாபாத்திரத்தை ஆதர்ஸமாகக் கொண்ட நிகழ்கால திருடன் அஸானே தியோப். மனைவியும் ஒரு மகனும் உண்டு, தொழில் திருட்டு. பாரிஸின் லோக்கல் ரவுடிகளுக்கு தர வேண்டிய கடன் பாக்கிக்காக ஒரு திருட்டை நடத்த முன் வருகிறார். மியூஸியத்தில் இருக்கும் 20 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நெக்லஸ் ஒன்று ஏலத்துக்கு வரவுள்ளது. ஏலம் நடக்கும் அன்று அந்த நெக்லஸை திருடுவது தான் திட்டம்.

வெற்றிகரமாக நெக்லஸை திருடிய பின் கடைசி நேரத்தில் ரவுடிகள் டபுள் கிராஸ் செய்து அஸானேயை ஏமாற்றுகிறார்கள். ஆனால், திருட்டு நடந்த சில நிமிடங்களில் தங்களின் அமெச்சூர்த்தனத்தால் ரவுடிகளும், நெக்லஸும் போலீஸ்வசமாகிறது. அஸானே தப்பிக்கிறார். இந்த கடைசி நேர துரோகத்தை அஸானே எதிர்பார்த்திருந்ததும், நெக்லஸை திருடும் திட்டமே ரவுடிகளின் இந்த துரோகத்தை மையமாக வைத்து அவர் உருவாக்கியதும் அடுத்தடுத்த காட்சிகளில் தெரிய வருகிறது. போலீசிடம் சிக்கியது டூப்ளிகேட் நெக்லஸ், அஸானேயின் தயாரிப்பு.

ஆனால், கதை இத்துடன் முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பிக்கிறது. அஸானேயின் குடும்பம் செனகலிருந்து பிரான்சில் குடியேறியவர்கள். அஸானேயின் தந்தை மிகப்பெரிய மில்லியனிரிடம் டிரைவராக இருப்பவர். ஒருநாள் நெக்லஸ் ஒன்று காணாமல் போக, அவர் மீது திருட்டு குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு அங்கேயே தற்கொலை செய்து கொள்கிறார். இது நடக்கையில் அஸானே சிறுவன். தந்தை ஒரு திருடர் என்பதால் அவர் மீது மகனுக்கு வெறுப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தந்தை திருடியதாகச் சொல்லப்படும் அந்த நெக்லஸைதான் அஸானே திருடியது. அதனை ஏலத்தில் கொண்டு வந்தவர், அவனது தந்தை யாரிடம் டிரைவராக பணிபுரிந்தாரோ அந்த மில்லியனர். தந்தை மீது பொய்யாக குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். அதனை நிரூபிக்க அஸானே முயல்கையில் எதிர்பாராத இடங்களுக்கு பயணப்பட வேண்டியிருக்கிறது. முன்பின் அறியாத பலரை சந்திக்க வேண்டியதாகிறது. ஆனாலும், அந்த மில்லியனரை நெருங்க முடியவில்லை. அஸானேயால் உண்மையை கண்டறிய முடிந்ததா, மில்லியனர்தான் குற்றவாளியா...?

இந்த சீரிஸின் முதல் பத்து எபிசோடுகளை முதலில் எடுத்தனர். இந்த வருட ஜனவரியில் அதில் ஐந்தை மட்டும் ஒளிபரப்பினர். அஸானேயின் மகனை கடத்துவதுடன் ஐந்தாவது எபிசோட் நிறைவுபெறும். வெறும் ஐந்து எபிசோடுகள் என்பதால், பாதி சாப்பாட்டில் இலையை பிடுங்கிய மனநிலை பார்வையாளர்களுக்கு. இன்று அடுத்த ஐந்து எபிஸோடுகளை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இத்துடன் முடியவில்லை. அடுத்த சீஸனும் வரவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

திருட்டைப் பற்றிய ஸ்லீக்கான தொடர் இது. நம்பி பார்க்கலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: