Home /News /entertainment /

காதல் கொண்டேனும்... இயக்குனர் செல்வராகவனின் திரைக்காதல்களும்

காதல் கொண்டேனும்... இயக்குனர் செல்வராகவனின் திரைக்காதல்களும்

இயக்குனர் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன்

அறவுணர்ச்சியும், பாரஸ்பர புரிதலும், மரியாதையும் இல்லாத அனைத்துக் காதல்களும் வெடிகுண்டைப் போன்றவை. எப்போது வேண்டுமானாலும் அது கொலையாகவோ, ஆசிட் வீச்சாகவோ வெடிக்கலாம்.

காதல் கொண்டேன் 19 வருடங்களுக்கு முன் 2003, ஜூலை 4 இதே நாளில் வெளியானது. தனுஷின் இரண்டாவது படம். துள்ளுவதோ இளமையை இயக்கியிருந்தாலும் அதில் பெயர் போடவில்லை என்பதால் செல்வராகவனைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாக அவரது முதல் படம்.



பொதுவாக இதுபோன்ற முதல், இரண்டாம்பட இயக்குநர், ஹீரோவின் படங்களுக்கு ஈயடிக்கும். காதல் கொண்டேன் வெளியான போது டீன்ஏஜ்களால் தியேட்டர்கள் நிரம்பியது. படம் ஆரம்பித்தது முதல் முடியும்வரை ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தார்கள். அதுவரை திரையில் அவர்கள் பார்த்து வந்த போலி தெய்வீக காதலுக்குப் பதில் காமம் சொட்டும் காதலை காதல் கொண்டேன் காட்டியது.



காதல் கொண்டேன் என்றில்லை,  செல்வராகவனின் பிற படங்களிலும் காதலுக்கு ஒரு பேட்டர்ன் இருப்பதைப் பார்க்கலாம். காதலை அவர் விடலைத்தனத்திலிருந்து தொடங்கி தெய்வீகத்தில் முடித்து வைப்பார். இதில் காதலுனுக்கும், காதலிக்கும் வரையறை செய்யப்பட்ட பாத்திரங்கள் உண்டு.

கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்! 

காதல் கொண்டேனில் நாயகன் அனாதை. அனைவராலும் ஒதுக்கப்படுகிறவன். அவனிடம் கனிவு காட்டுகிற நாயகி மீது மையல் கொள்கிறான். ஆனால், அவளோ வேறொருவனை காதலிக்கிறான். உயிர் தியாகம் மூலம் தனது காதலை தெய்வீக தளத்துக்கு உயர்த்துகிறான்.



7 ஜி ரெயின்போ காலனியின் நாயகன் முந்தையவனைப் போல அத்தனை அப்பாவி அல்ல. கொஞ்சம் பொறுக்கி. நாயகிக்கு அவனை பிடிப்பதில்லை. அவள் வேறொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள். ஒருகட்டத்தில் அவளும் இவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். காதல் கொண்டேன் போன்ற உயிர் தியாகம் இல்லையென்றாலும் கிட்டத்தட்ட அப்படி சித்தரிக்கப்பட்ட நாயகியின் மரணத்தின் மூலம் அவர்களின் காதல் தெய்வீக நிலையை அடைகிறது.



மயக்கம் என்ன படத்தின் நாயகன் திறமையிருந்தும் துலங்காதவன். அவன் காதலிப்பவள் அவன் நண்பனின் காதலி. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்கிறார்கள். நாயகனின் அத்தனை பலவீனங்களையும்  தாங்கிப் பிடித்து அவனை ஜெயிக்க வைப்பதன் வழியாக தங்களின் காதலை நாயகி தெய்வீக நிலை அடையச் செய்கிறாள்.



பொதுவாக கையில் இருக்கும் பொம்மையைவிட ஷோகேஸில் இருக்கும் பொம்மைக்குதான் அதிக ஈர்ப்பு இருக்கும். செல்வராகவன் படங்களில் வரும் நாயகிகள் எல்லாம் இந்த ஷோகேஸ் பொம்மைகளைப் போன்றவர்கள். அவர்கள் நாயகனின் உடைமையல்ல. அவர்கள் வேறொருவனுக்கு சொந்தமானவர்கள்.

புஷ்பா தி ரூல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி?

காதல் கொண்டேனில் வேறொருவனின் காதலி, 7 ஜி யில் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள், மயக்கம் என்னயில் நண்பனின் காதலி, புதுப்பேட்டையில் வேறொருவன் தாலி கட்டப்போகும் பெண். இப்படி இன்னொருவனுக்கு உடமையாக இருப்பவளை நாயகன் காதலிக்கிறேன் என்பதே செல்வராகவன் திரைக்காதல்களின் முதல் ஈர்ப்பாக இருக்கிறது. இரண்டாவது, நாயகனின் காதலில் காமம் எப்போதும் சொட்டிக் கொண்டேயிருக்கும். மனதையும், உடலையும் செல்வராகவன் பிரிப்பதில்லை.



காதல் கொண்டேனில் நாயகி தனது காதலனுடன் தொலைபேசி கூண்டுக்குள் சரசம் செய்வதை, அவள் இயல்பாக  பிராவை சரி செய்வதை நாயகனின் பார்வை தொடர்ந்து கொண்டேயிருக்கும். 7 ஜி ரெயின்போ காலனியில் நாயகனின் பார்வை இன்னும் துல்லியமாக நாயகியின் மார்பை தீண்டிக் கொண்டிருக்கும். அவன் பார்க்கையில் துப்பாட்டாவை போடுவாள் அல்லது அதை சரி செய்வாள்.



வேறொருவனை காதலிக்கும் நாயகி நாயகனை காதலிக்க முற்படும் இடங்கள் முக்கியமானவை. நாயகியின் விருப்பத்தை மீறி அவளது காதலன் பொது இடங்களில் அத்துமீறுவதே பெரும்பாலும் நாயகன் மீது நாயகிக்கு காதல் தோன்ற காரணமாக இருக்கும். கண்ணியமில்லாதவன், அவனைவிட நாயகனே அவளுக்கு ஏற்றவன் என்ற எண்ணத்தை இந்தக் காட்சிகள் பார்வையாளனுக்குள் ஏற்படுத்தும், காதல் கொண்டேனில் நாயகியின் காதலன் பொது இடத்தில் அவளிடம் அத்துமீறுகையில் இந்த உணர்வையே பார்வையாளன் அடைகிறhன். 7 ஜி ரெயின்போ காலனியில் நாயகன் அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான். அவளோ தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் அவனது காதலை ஏற்க மறுக்கிறாள். ஆனால், அந்த வருங்கால கணவனோ அவளது விருப்பத்தை மீறி பாலியல் தொந்தரவு தருகிறான். அதனை நாயகன் பார்க்கும் போது நாயகி கூசிப் போகிறாள். அதற்கு மேலும் அவளால் நாயகனை புறக்கணிக்க முடியாமல் அவன் மீது அவளது மனம் சாயத் தொடங்குகிறது.



மயக்கம் என்ன படத்திலும் பொது இடத்தில் நாயகியை தொந்தரவு செய்வதை அவளது காதலன் ஒரு பழக்கமாக கொண்டிருப்பதை பார்க்கலாம்.
இதன் அடுத்தக்கட்டம் இவர்களின் காதல் வெறும் காதலோ காமமோ சார்ந்தது அல்ல என்பதை காட்டுவது. காதல் கொண்டேனில் நாயகியின் நட்பே நாயகனுக்கு வாழ்வின் ஒரே வெளிச்சமாக இருக்கிறது. 7 ஜி ரெயின்போ காலனியில் காதலியின் முயற்சியால்தான் நாயகன் தனது தனித்திறமையை கண்டுபிடிக்கிறான், அதன் மூலம் கௌரவமான வேலையைத் தேடிக் கொள்கிறான். மயக்கம் என்ன படத்திலும் நாயகியின் அர்ப்பணிப்பால்தான் நாயகனின் திறமை வெளிச்சத்துக்கு வந்து, அவனது வாழ்க்கையில் ஒளி பிறக்கிறது.



கடைசிக்கட்டம் தெய்வீகத்தன்மை. காதல் கொண்டேனில் நாயகனின் மரணமும், 7 ஜி ரெயின்போ காலனியில் நாயகியின் மரணமும், மயக்கம் என்னயில் நாயகியின் தியாகமும் இந்த தெய்வீகத்தன்மையை சாத்தியமாக்குகின்றன. விடலைக் காதல் டூ தெய்வீகக் காதல் என்ற பயணத்தை செல்வராகவனின் திரைக்காதல்கள் பெரும்பாலானவற்றில் நாம் பார்க்க முடியும். நடைமுறையில் இந்தப் பயணம் அனேகமாக சாத்தியமில்லை. விடலைக் காதல் விடலைக் காதலாகவே எஞ்சும். அதுவொருவகை ஈவ்டீஸிங். அதற்கு மேல் அதற்கு எந்த மரியாதையுமில்லை.



செல்வராகவன் படத்திலும்கூட காதல் கொண்டேன் நாயகன் அனாதை, கழிவிரக்கத்தில் இருப்பவன். அதனால் அவன் நாயகியிடம் அத்துமீறிவதில்லை. 7 ஜியில் வருபவன் பொறுக்கி. அதனால், காதல் கொண்டேன் நாயகனைவிட அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வான். புதுப்பேட்டையில் வருகிறவன் ரவுடி. யாரையும் கேட்காமல் தாலிகட்டப் போகும் நேரத்தில் மணமகளை கவர்ந்து கொள்வான். நாயகனின் பலம் பலவீனம்தான் அவன் நாயகியிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதை தீர்மானிக்கிறது. இங்கு பரஸ்பர புரிதல், அடுத்தவர் உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுத்தல் என்பதற்கெல்லாம் இடமேயில்லை. இந்த விடலைக்காதலை நாம் கொண்டாடக் காரணம் இதன் பிற்பகுதியில் வரும் தியாகம். விடலைக் காதலின் அதீத உணர்ச்சியைப்போன்றதே இந்த தியாகமும். இரண்டுமே அறிவோ, அறவுணர்ச்சியோ அற்றவை. இந்த இரண்டும் இல்லாத அதீதி உணர்ச்சிகரத்தை கொண்ட மனிதர்களால்தான் காதல் கொலைகளும், ஆசிட் வீச்சுகளும் நடக்கின்றன.

அறவுணர்ச்சியும், பாரஸ்பர புரிதலும், மரியாதையும் இல்லாத அனைத்துக் காதல்களும் வெடிகுண்டைப் போன்றவை. எப்போது வேண்டுமானாலும் அது கொலையாகவோ, ஆசிட் வீச்சாகவோ வெடிக்கலாம்.
Published by:Musthak
First published:

Tags: Director selvaragavan

அடுத்த செய்தி