Balu Mahendra: ஒளி ஓவியன் பாலுமகேந்திரா!

பாலு மகேந்திரா

பாலுமகேந்திராவையும் அவரின் படைப்புகளையும் சொல்லும்போது, இளையராஜாவைக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.

  • Share this:
தமிழ் சினிமாவின் சிற்பிகளில் இவர் ஒருவர். இவரின் திரைப்படைப்புகள் பல தமிழ் சினிமாவின் காவியங்கள் ஆகின. அவரின் பெயர் கூட தமிழ் திரை இயக்குனர்களின் அடையாளம் ஆகின. அந்த பெயர்தான் பாலுமகேந்திரா.. ஈழ நாட்டில் பிறந்து மலையாள திரையுலகில் வாழ்ந்து தமிழில் முத்திரை திரைப்படங்களை விதைத்த வித்தக இயக்குனர் தான் பாலுமகேந்திரா.

கவிதையை வெள்ளித்திரையிலும் சிற்பத்தை கேமிராவிலும் வடித்த கேமரா கவிஞர் என இவரை கொண்டாடியது தமிழ் சினிமா. தான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சிலோனில் ஒரு ஆங்கில சினிமா படப்பிடிப்பில் அங்கு இயக்குனராக வேலை பார்த்துக் கொண்டிருந்த டேவிட்லீனின் ஆளுமையை பார்த்து தானும் இயக்குனராக வேண்டும் என்னும் உந்துதலில் 1966 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா வந்து இணைந்த இடம் புனேவில் உள்ள Film and Television Institute of India. ஆனால் அங்கு தனக்கு பிடித்தமான இயக்குனர் துறையை செய்ய முடியாமல் வேறுவழியின்றி ஒளிப்பதிவு துறையை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் பாலுமகேந்திரா. அங்கு பல வெளிநாட்டு படங்களின் அறிவும், அதிலிருந்து கற்றுக் கொள்ள விஷயங்களும் பாலுமகேந்திராவை கூர் தீட்டி தங்க மெடலோடு வெளியே வந்தார்.

புனேவில் படிக்கும் பொழுது அவர் எடுத்த “A View from the Fort” என்ற குறும்படத்தின் வெற்றி அவருக்கு மலையாள திரையுலகில் ”நெல்லு” என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்று தந்தது.. ஆனால் பாலும்கேந்திரா ஒளிப்பதிவில் முதலில் வெளியான திரைப் படம் 1972ல் வெளிவந்த “சாஸ்த்திரம் ஜெயிச்சு மனுஷ்யன் தொட்டு” என்ற திரைப்படம்தான். பின்னாளில் 1974ல் வெளியான ”நெல்லு” திரைப்படம் கேரள அரசின் மாநில விருதை பெற்றது.
பின்னர் 1975ம் ஆண்டு “ப்ரயணம்” “ச்சுவன்னசந்த்யாக்கள்” ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு மாநில அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினை பெற்று தனது ஆளுமையை அழுத்தமாக பதித்தார் பாலுமகேந்திரா
தொடர்ந்து 7 வருடங்கள் ஒளிப்பதிவாளராக 20 திரைப்படங்களில் பணியாற்றிய பின்புதான் தனது முதல் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அத்திரைப்படம் கன்னடத்தில் வெளியான ”கோகிலா”. 1977ல் வெளியான இத்திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கர்நாடக அரசின் மாநிலவிருதை பெற்றார். கன்னட திரையுலகம் இவரை, ஆரத்தழுவி வரவேற்று கொண்டது..பாலுமகேந்திராவுக்கு மட்டுமல்லாமல் .. பலருக்கு "முதல்" என்ற பட்டத்தை தாங்கி வந்தது ’கோகிலா’ திரைப்படம்.... மோகன், கமல், ஷோபா என அறிமுகங்கள் கன்னட உலகை திரும்பி பார்க்க வைத்தது.. இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு, தமிழில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.மலையாள....கன்னட சினிமா உலகில் இருந்து உணர்வுகளையும்,.. அனுபவத்தையும் பெற்று வந்த இந்த மகேந்திரா, தமிழ் திரையுலகில் வந்து இன்னொரு மகேந்திரனோடு சேர்ந்து மலர்ந்தது. ஆம் அந்த திரைப்படம்தான் 1978ல் வெளிவந்த “முள்ளும் மலரும்”. இயக்குனர் மகேந்திரனோடு இணைந்து தமிழில் ஓளிப்பதிவாளராக அறிமுகமானார் பாலுமகேந்திரா.ரஜினிகாந்தின் புதிய பரிணாமத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது முள்ளும் மலரும். இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவும் ஒரு கதாபாத்திரமாகவே இருந்தது என தமிழ் சினிமா உலகம் மெச்சியது.. நாம் நேரில் காண்கிற காட்சியை போலவே எதார்த்த நிறங்களை கண்ணுக்குள் நுழைத்து பார்வையாளர்களை முழுவதுமாக சினிமாவுக்குள் ஊடுறவ வைத்தார் பாலுமகேந்திரா..தன்னை ஒரு படைப்பாளியாக ஆக்கிகொள்ளவேண்டும் என்ற ஆசை அவரிடம் அழியாமலேயே இருந்தது என சொன்னது தமிழில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1979ல் வெளிவந்த “அழியாத கோலங்கள்” திரைப்படம். அதுவரை வந்த தமிழ் சினிமாக்களிலிருந்து சற்று வித்தியாசபட்டு வேறு ஒரு மனநிலையை சொன்ன அக்கதை விமர்சனத்துக்குள்ளக்கப்பட்டது. விடலை பருவத்தின் வெகுளித்தனங்களை காற்றில் அலையும் பஞ்சை போல மிக மெல்லியதாக சொல்லியிருந்தார் பாலுமகேந்திரா. இக்கதை தன் பால்யகாலத்து அனுபவமும் கூட என்றும்..... மேலும் 1971ல் வெளிவந்த “Summer of 1942” என்ற அமெரிக்க திரைப்படத்தின் தாக்கத்திலிருந்து எழுதினேன் என்ற உண்மையை நேர்மையாகவும் திரையுலகிற்கு சொன்னார் பாலுமகேந்திரா.தமிழ் சினிமாவின் 70களில் இயக்குனர்கள் தங்கள் கதையின் களங்களை வேறு தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கும் தேவைக்கும் தள்ளப்பட்டனர். அந்த இடத்தில் எல்லா இயக்குனர்களும் தொட்ட ஒரு கதைக்களம் தான் இழையோடிய காமம். அந்த வகையில் பாலுமகேந்திரா கையாண்ட அவரின் அடுத்த திரைப்படம்தான் ”மூடுபனி”. 1980ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் பிரதாப்போத்தன் மற்றும் ஷோபா நடித்திருந்தனர். ஹிட்ச்ஹாக் இயக்கி 1960ல் வெளிவந்த ”சைக்கோ” படத்தின் உந்துதலில் பாலுமகேந்திரா எடுத்த இத்திரைப்படம் சிறந்த த்ரில்லர் வகை சினிமாவில் முக்கிய இடம் பிடித்தது. அதுவரை வெவ்வேறு இசை அமைப்பாளர்களிடம் பணியாற்றிய பாலுமகேந்திரா இந்த முறை இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். இதன் பாடல்கள் ஒவ்வொன்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கதையின் நாயகன் பிரதாப் போத்தன் ஒரு கட்டத்தில் வில்லன் என தெரியவந்து கடைசியில் அக்கதாபாத்திரம் தான் செய்த தவறை ஓப்புக் கொண்டு உருகி அழும் போது, அதுவரை வில்லனாக நம் கண்முன் பயணித்த அப்பாத்திரம் இளையராஜாவின் மெய்சிலிர்க்கும் பின்னணி இசையின் வாயிலாக ஒருபரிதாபத்துக்கு உரிய ஒரு ஆன்மாவாக மாற்றி நம்மை உருகவைத்து விட்டிருப்பார் பாலுமகேந்திரா.

அடுத்து பாலுமகேந்திரா இயக்கிய ஒரு திரைப்படம் இந்திய சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத தடமாகிபோனது. கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் 1982ல் வெளிவந்த ”மூன்றாம் பிறை” திரைப்படம்தான் அது. கமல்ஹாசனின் நடிப்பும்.... ஸ்ரீதேவியின் நடிப்பும் அனைவராலும் உருகி கொண்டாடப்பட்டது. தன் அசாத்திய நடிப்பினால் தேசியவிருதை தட்டிச் சென்றார் ஸ்ரீதேவி. அதுமட்டுமல்லாமல் பாலுமகேந்திராவுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது.நடிகை ஷோபாவின் திடீர் மறைவு ஏற்படுத்திய தாக்கத்தினால் தான் எழுதிய கதைதான் மூன்றாம் பிறை என்பதை பின்னாளில் பகிரங்கமாக அறிவித்தார் பாலுமகேந்திரா. ஷோபாவின் நினைவில் அவர் இயக்கிய இப்படத்தின் இறுதிக்காட்சி திரை ரசிகர்களின் கண்களில் கண்ணீரை கசிய செய்து கைதட்டல் பெற வைத்தது.

சினிமா என்பது முதலில் ஓர் வணிகமே. வணிகத்துக்கும் கலைக்கும் இடையே நடக்கும் போட்டிதான் சினிமா என. வணிக சினிமாவில் விருப்பமில்லாத பாலுமமேந்திரா எப்போதும் ஒரு மெல்லிய நீரோடை போல செல்லும் ஒரு திரைக்கதையையே கையாண்டார். பாலுமேந்திராவிடம் ஒரு கமர்ஷியல் ஹிட் படம் வேண்டும் என தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தொந்தரவு பண்ணிக் கொண்டேயிருக்க, ஒரு கோபத்தில் திரைக்கதையை தயார் செய்து இதுதானே நீங்கள் கேட்ட படம் என கோபத்தில் அவர் தலைப்பு வைத்து வெளிவந்த திரைப்படம்தான் “நீங்கள் கேட்டவை”. தியாகராஜன், பூர்ணிமா, அர்ச்சனா, பானுசந்தர் ஆகியோர் நடிப்பிலும், இளையராஜா இசையிலும் வெளிவந்த இத்திரைப்படம் வெற்றி பெறவில்லையென்றாலும் ரசிகர்களை ரசிக்க வைத்து பாடல்கள் பெரும் வெற்றியை பெற்றது.

தமிழ் திரையில் அப்போது உச்சத்தில் இருந்த ரஜினிகாந்தை வைத்து பாலுமகேந்திரா “உன் கண்ணில் நீர்வழிந்தால்” திரைப்படத்தை இயக்கினார். எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அத்திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறவில்லை. பின் தொடர்ந்து மலையாளத்தில் மம்முட்டியை வைத்து ”யாத்ரா” என்ற படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. 1987 ஆம் ஆண்டு மோகன், ராதிகா, அர்ச்சனா நடிப்பில் துல்லியமான உணர்வை, கொஞ்சம் துள்ளலாக பாலுமகேந்திரா கையாண்ட திரைப்படம் “ரெட்டைவால்குருவி”. இரண்டு மனைவிகள் விஷயத்தை, பாலுமகேந்திரா அளவிற்கு பி.ஹெச்டி பண்ணியது எவருமில்லை என சொல்ல முதல் புள்ளி வைத்த திரைப்படம் தான் ‘ரெட்டைவால் குருவி’பாலுமகேந்திராவையும் அவரின் படைப்புகளையும் சொல்லும்போது, இளையராஜாவைக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. அந்தளவு பாலு மகேந்திரா படங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் இசையைக் கொடுத்தார் இளையராஜா. பாலுமகேந்திராவுக்கு இவர் ஸ்பெஷலாக டியூன் போடுகிறார் என்று சொல்லும் அளவிற்கு இசையும் பாடல்களும் அமைந்தது இவர்களது கூட்டணியில். பாலுமகேந்திராவே கூட, ‘இளையராஜாவின் இசைக்கு ரசிகன் நான். அவர் இசை இல்லாமல் நான் படமே எடுக்கமாட்டேன்’ என வெளிப்படையாகவே சொன்னது பாலுமகேந்திராவும் இளைராஜாவும் இணைந்த கைகள் என சொல்லியது.

எதார்த்தங்கள் மட்டுமே தன் சினிமா மொழி என சொன்ன பாலுமகேந்திரா தன் சினிமா வாழ்க்கையில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் நிறைய சந்தித்தார். 1995ல் கமல்ஹாசன், ரமேஷ்அரவிந்த் நடிப்பில் “சதிலீலாவதி” திரைப்படம் அவர் இயக்கத்தில் வெளியானது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.சினிமாவுக்குவந்து 15 வருடங்கள் ஆன பின்பும் தனது கொள்கையில் எப்போதும் மாறாத பாலுமகேந்திரா தன் வாழ்நாளில் பெயர் சொல்லும் ஒரு திரைப்படத்தை எடுத்து அனைவரையும் திகைக்கவைத்தார். இன்று வரை அந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என சொல்லலாம். . சினிமாவில் Commercial Cinema, Parallel Cinema என இரண்டு வகை சினிமாக்கள் உண்டு. அதில் எப்போதும் பேரலல் சினிமாவையே விரும்பி 1988ல் அவர் எடுத்த திரைப்படம் தான் “வீடு”. அத்திரைப்படத்தின் கதானாயகன் ஒரு 60 வயது முதியவர். தனக்கு ஒரு வீடு கட்ட அவர் படும் கஷ்டமே அத்திரைப்படம். அந்த படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் பின்னணி இசை சிம்பொனி அளவில் பேசப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்பின் 1989ல் அவர் எடுத்த ”சந்தியாராகம்” படமும் விமர்சன ரீதியாக பேசப்பட்ட படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்களும் முறையே அவர் தன் தாய், தந்தைக்கு சமர்ப்பணம் செய்வதாக குறிப்பிட்டது வரலாறானது.
அந்தகாலக்கட்டத்தில் அவருடைய படங்கள் வணிக ரீதியாக சரியாக வெற்றி பெறாத சூழ்நிலையில், கமர்ஷியல் எடுத்துக் கொண்டிருந்த கலைப்புலி எஸ்.தாணு அவரை வைத்து தைரியமாக தயாரித்து 1992ல் பிரஷாந்த் நடித்து வெளிவந்த “வண்ணவண்ணபூக்கள்” 100 நாட்கள் ஓடி வசூலையும் வாங்கி, சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

பாலுமகேந்திராவின் நாயகிகள் மண் மனம் சார்ந்த நாயகிகளாகவே இருப்பது அவரது ஆளுமையையும் ரசிப்பு தன்மையையும் சொன்னது. ஷோபா, ஈஸ்வரிராவ், அர்ச்சனா, வினோதினி, மவுனிகா என இந்த பட்டியல் நீள்வதை பார்க்கலாம். பின் பாலிவுட்டில் தன் திரைப்படங்களை ரீமேக் செய்யும் வேலைகளில் ஈடுபட்டார் பாலுமகேந்திரா. ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பது யார் கையிலும் இல்லை. அது முழுக்க முழுக்க கால சூழ்நிலையை சார்ந்ததே ஆகும். மேலும் ஒரு கலைஞனாக ஒரு படைப்புக்கு நேர்மையாக இருப்பது மட்டுமே நமது உண்மையான வெற்றியாகும் என்பதே தன் தத்துவமென சொன்னார் பாலுமகேந்திரா. அந்தவகையில் அவர் இயக்கத்தில் 1997ல் வெளிவந்த ”ராமன்அப்துல்லா” திரைப்படம் தலைப்பிலேயே சர்ச்சையை ஏற்படுத்த கதையும் பாடலும் கைதட்டலை பெற செய்தது.காலச்சக்கரம் 5 ஆண்டுகள் ஓடிய நிலையில் 2003 ஆம் ஆண்டு சரிதா, ஜெயராம் நடித்த ”ஜூலிகணபதி” என்ற த்ரில்லர் படத்தை இயக்கி அனைவரையும் வியக்க வைத்தார் பாலுமகேந்திரா. பின் 2005 ல் தனுஷை வைத்து “அது ஒரு கனாக்காலம்” என்ற திரைபடத்தை இயக்கிய பாலுமகேந்திரா தனுஷின் நடிப்பை பார்த்து ’இவர் ஒரு அட்சய பாத்திரம்,... இவர் போகும் தூரம் மிக நீளமானது’ என தனுஷை அன்றே புகழ்ந்திருந்தார் இன்று அது உண்மையாகி இருப்பதை பார்க்கலாம்.

புது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ’கதைநேரம்’ என்ற தலைப்பில் ஒரு தொலைக்காட்சிக்கு சுஜாதாவின் கதைகளை திரைக்கதையாக்கி இயக்கி கொண்டிருந்தார். பின்னர் ஒரு திரைப்படக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து அதில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என மூன்று வகுப்புகளை எடுத்தார். 2013ல் கடைசியாக “தலைமுறைகள்” என்ற திரைப்படத்தை இயக்கி தன்னை ஒரு நடிகனாகவும் பரிணமித்து கொண்டார் பாலுமகேந்திரா. ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடக்கும் கதையில் இரண்டு தலைமுறைக்கான சிக்கல்களை அழகாக கையாண்டிருந்த. இந்த படமும் தேசிய விருதின் ஒரு பிரிவில் விருதினை பெற்றது.

தன் வாழ்க்கையில் பாதி நேரத்தை சினிமாவிற்கே செலவிட்டு, அதிலும் எந்த சமரசமும் இல்லாத ஒரு படைப்பாளியாக எந்த வெற்றி தோல்விக்குள்ளும் தன்னை அடக்கி கொள்ளாமல் பயணம் ஒன்றே சிறந்தது என சொன்ன பாலுமகேந்திராவின் ஆன்மா ஓர் நாளில் காற்றில் கலந்தது. அவர் விட்டு சென்ற அவரது பணியை இன்று தமிழ் சினிமா முழுவதும் ஆளுமைகளாக இருக்கும் அவருடைய சீடர்களான பாலா, சீனுராமசாமி, ராம், வெற்றிமாறன், போன்ரோர் செய்தார்கள். இனியும் செய்வார்கள் என்பதே பாலுமகேந்திராவுக்கு தமிழ் சினிமா செய்யும் பதில் மரியாதை என உறுதியாக சொல்லலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: