முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரே படத்துக்கு 2 பெயர்.. பக்திக்கு பாடம் எடுத்த சினிமா.. 83 வருஷம் கடந்தும் அடடே போடவைக்கும் மூவி!

ஒரே படத்துக்கு 2 பெயர்.. பக்திக்கு பாடம் எடுத்த சினிமா.. 83 வருஷம் கடந்தும் அடடே போடவைக்கும் மூவி!

அம்பரீஷன் சரித்திரம்

அம்பரீஷன் சரித்திரம்

பக்தி இலக்கியங்கள் என்பவை, ஒரு மானுடன் கடவுளின் மீது எத்தகையை பக்தியை கொண்டிருந்தான் என்பதை சித்தரிப்பதேயாகும். ஆண்டாள், மீரா, கண்ணப்பர் வரிசையில் பக்திக்காக உதாரணம் சொல்லப்படுகிறவன் அம்பரீஷன்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

1940 இல் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று, ''பக்தி அல்லது அம்பரீஷனின் சரித்திரம்''. அன்று இப்படி இரண்டு பெயர்கள் வைப்பது அவ்வப்போது நடக்கும். இதுவும் புராணக் கதைதான்.

பக்தி இலக்கியங்கள் என்பவை, ஒரு மானுடன் கடவுளின் மீது எத்தகையை பக்தியை கொண்டிருந்தான் என்பதை சித்தரிப்பதேயாகும். ஆண்டாள், மீரா, கண்ணப்பர் வரிசையில் பக்திக்காக உதாரணம் சொல்லப்படுகிறவன் அம்பரீஷன்.

அயோத்தி ராமனின் முன்னோர்களில் ஒருவர் வைவஸ்வத மனு. அவருக்குப் பிறந்த பத்து பிள்ளைகளில் ஒருவன் நபகன். அவனது மகன் நாபாகன். அவனது மகன் அம்பரீஷன். வைணவன். விஷ்ணு மீது தீராத பக்தி கொண்டவன். மொத்த பூமியையும் ஆட்சி செய்து வந்த அம்பரீஷனின் பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு அவனுக்கு தன்னுடைய சக்கராயுதத்தை பரிசாக தந்திருந்தார்.

அம்பரீஷன் அனைத்து விரதங்களையும் முறையாக கடைபிடிப்பவன். முக்கியமாக விஷ்ணுவுக்கு உகந்த ஏகதாசி விரதத்துக்கு முதல் நாள் இரவே உண்ணாமலிருந்து, மறுநாள் ஏகதாசியும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, அதற்கு அடுத்தநாள் துவாதசியன்று விஷ்ணுவை பூஜித்து, அதன் பிறகுதான் உணவு உட்கொண்டு விரதத்தை முடிப்பான். விவரம் தெரிந்த நாள் முதல் இதுதான் அவனது வழக்கம்.

ஒருமுறை ஏகதாசிக்கு மறுநாள் துவாதசியன்று விரதத்தை முடிக்க இருக்கையில் துர்வாச முனிவர் விஜயம் தருவார். துர்வாசர் மூக்கு நுனியில் கோபத்தை கொண்டு திரிகிறவர். சாதாரண மனிதர்களுக்கு ஆறிப்போன உணவை பரிமாறினால், கொஞ்சம் சூடு பண்ணி தரக்கூடாதா என்பார்கள். துர்வாச முனிவர் சபித்து அந்தக் கணமே பஸ்பமாக்கிவிடுவார். துர்வாசர் மட்டுமில்லை, பல்லாயிரம் வருடங்கள் தியானமும், தவமும் இருந்து முனிவர்களாக மாறியவர்கள் அனைவருமே இப்படி முன்கோபக்காரர்களாக இருப்பது ஒரு நகைமுரண். அம்பரீஷன் விரதத்தை முடிக்கவிருப்பதை அறிந்த துர்வாச முனிவர், நானும் யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன், சேர்ந்து விரதத்தை முடிக்கலாம் - அதாவது சேர்ந்து உணவருந்தலாம் என்று சொல்லிப் போவார்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. துர்வாச முனிவர் இன்னும் நீராடித் திரும்பவில்லை. விரதத்தை உரிய நேரத்தில் முடித்தாக வேண்டும். முனிவரைவிட்டு விரதத்தை முடித்தால், பஸ்பமாக்கிவிடுவார். என்ன செய்வது என்று அறிஞர், தவயோகிகளுடன் அம்பரீஷன் ஆலோசிக்க, துளசி தீர்த்தத்தை குடித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம், போஜனத்தை துர்வாசர் வந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என பரிந்துரைக்க, அதன்படி நாக்கில் நான்குச் சொட்டு தண்ணீர்விட்டு அம்பரீஷன் விரதத்தை முடித்துக் கொள்வான். இதனை ஞான திருஷ்டியால் கண்டுணரும் துர்வாசர், நான்கு சொட்டுதானே என்று விட்டுத் தள்ளாமல் கடுங்கோபம் கொண்டு, என்னை அவமதித்து விட்டாய் அம்பரீஷனா என்று சடையை அவிழத்து அதிலிருந்து ஒருகற்றை முடியெடுத்து, க்ருத்யை என்ற துர்தேவதையை உருவாக்கி, அம்பரீஷன் மீது ஏவி விடுவார்.

அதோடு அம்பரீஷன் அழிந்தான் என்றே துர்வாசர் நினைத்தார். அங்கேதான் ஒரு திருப்பம். விஷ்ணு வழங்கிய சக்கராயுதம் சுழன்று வந்து துர்தேவதையை சம்காரம் செய்து. அடுத்தது யார் என்று துர்வாசரை துரத்த ஆரம்பித்தது. துர்வாசர் ஈரேழு உலகங்களுக்கும் ஓடினார். பிரம்மா, சிவன் என்று பிற கடவுள்களிடம் தஞ்சமைடைய முயன்றார். அனைவரும் கையை விரிக்க, கடைசியில் வைகுண்டம் சென்று விஷ்ணுவின் காலடியைப் பற்ற, நீ பிடிக்க வேண்டியது என்னுடைய கால் அல்ல, என்னுடைய பக்தன் அம்பரீஷனின் கால் என்று சொல்ல, துர்வாசர் அம்பரீஷனைத் தேடிச் செல்வார்.

இப்படி துர்வாசர் ஒருமுறை ஓடி வருவதற்குள் ஓராண்டு முடிந்து, அடுத்த ஏகதாசி வந்திருக்கும். துர்வாசருக்காக அம்பரீஷன் உணவருந்தாமலே காத்திருப்பான். இந்தமுறை போனமா வந்தமா என்பது போல் துர்வாசர் யமுனையில் நீராடிவர, அவரும் அம்பரீஷனுமாக உணவருந்தி விரதத்தை முடிப்பார்கள். பக்தியுடன் ஏகதாசி விரதம் இருக்கும் பக்தன் காலை துர்வாசரே பிடிப்பார் என பக்தியின் மேன்மையை சொல்ல புனையப்பட்ட புராண கதைதான் இது.

இதனை 1940 இல் 'பக்தி அல்லது அம்பரீஷன் சரித்திரம்' என்ற பெயரில் படமாக எடுத்தனர். டி.ஜி.குனே இயக்கிய இந்தப் படத்தில் எம்.வி.சுப்பையா நாயுடு, ஆர்.நாகேந்திர ராவ், பி.ஜி.வெங்கடேசன், லக்ஷ்மிபாய், கமலாபாய் ஆகியோர் நடித்தனர். வேல் பிக்சர்ஸ் எம்.டி.ராஜன் படத்தை தயாரித்தார்.

தமிழில் ஆரம்பத்தில் வெளியான பலநூறு திரைப்படங்கள் குறித்த செய்திகளோ, படப்பிரதியோ இல்லை. அப்படி படப்பிரதி இல்லாத படங்களுள் ஒன்று அம்பரீஷன் சரித்திரம். 1940 மார்ச் 2 வெளியான திரைப்படம் இன்று 83 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema