Home /News /entertainment /

KPAC Lalitha: மலையாளத்தின் நவரச நாயகி கேபிஏசி லலிதா காலமானார்

KPAC Lalitha: மலையாளத்தின் நவரச நாயகி கேபிஏசி லலிதா காலமானார்

கேபிஏசி லலிதா

கேபிஏசி லலிதா

KPAC Lalitha: கேபிஏசி லலிதா நடித்தப் படங்களை குறிப்பிட்டு அவரது நடிப்பை பேச ஆரம்பித்தால் அது நெடுந்தொடரைவிட நீளமாகும். பாலியல் தொழிலாளி, பாசமிக்க அம்மா கண்டிப்பான மனைவி, காரியக்கார தாய், கோள் சொல்லும் பெண்மணி என்று அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் அவர் வாழ்ந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
கேபிஏசி லலிதா மலையாள சினிமாவின் மகுடங்களில் ஒருவர். மலையாள சினிமா சரித்திரத்தில் அவரது இடம் முக்கியமானது. தவிர்க்க முடியாதது. அவரைத் தவிர்த்து மலையாள சினிமா சரித்திரத்தை ஒருவரால் எழுதிவிட முடியாது. அப்படியான கலையின் தலைமகளை மலையாள சினிமா இழந்திருக்கிறது.

கேபிஏசி லலிதா காயங்குளத்தில் 1948 பிப்ரவரி 25 ஆம் தேதி பிறந்தார். ஐந்து குழந்தைகளில் இவர் மூத்தவர். அவருடைய தந்தை ஒரு புகைப்படக் கலைஞர். அவரது குடும்பம் காயங்குளத்திலிருந்து கோட்டயத்தில் உள்ள சங்கனாச்சேரிக்கு இடப்பெயர்வு செய்தது. அங்கு அவர் நடனம் கற்றுக்கொண்டார். அவரது கலை உலக வாழ்க்கைக்கான முதல் திறப்பாக இது அமைந்தது. முதலில் செல்லப்பன் பிள்ளை மாஸ்டரிடம் அதன்பிறகு கலாமண்டலம் கங்காதரன் மாஸ்டரிடமும் அவர் நடனம் பயின்றார்.

10 வயது இருக்கும்போது அவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது முதல் நாடகம் கீதையுடெ பலி. நவீன மலையாள சினிமாவின் சிற்பிகளில் ஒருவரான இயக்குநர் கேஎஸ் சேதுமாதவன் படத்தில் இவர் முதலில் அறிமுகமானார். சேதுமாதவன் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. 1969 இல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான கூட்டுக்குடும்பம் படத்தில் கேபிஏசி லலிதா அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. தமிழில் வெற்றி பெற்ற நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் மலையாள ரீமேக்கான ஹிருதயம் ஒரு ஷேத்திரம் படத்தில் பிரதான வேடத்தில் நடித்தார்.



1977 இல் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கொடியேற்றம் முக்கியமான திரைப்படமாகும். இதில் நாயகன் கொடியேற்றம் கோபியின் அப்பாவி மனைவியாக லலிதா நடித்திருந்தார். இதுபோன்ற வெள்ளந்தி வேடங்களில் அவர் குறைவாகவே நடித்துள்ளார். 1978 இல் பத்மராஜன் எழுத்தில் பரதன் இயக்கிய ரதிநிர்வேதம் திரைப்படத்தில் நடித்தார். ஜெயபாரதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அப்படம் மலையாள சினிமாவில் மென்பாலியல் கதைகளை சொல்லும் படங்களுக்கு அடித்தளமிட்டது. அந்த வருடம் லலிதா பரதனை திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்பே பொன்னாபுரம் கோட்டா, மாதவிக்குட்டி போன்ற பரதன் கலை இயக்குனராக பணிபுரிந்த படங்களில் லலிதா நடித்திருந்தார்.



எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் என மலையாள சினிமாவில் சீரிய பங்காற்றிய பத்மராஜன் 1979 இல் பெருவழியம்பலம் என்ற தனது முதல் படத்தை இயக்கினார். மலையாள சினிமாவின் தனித்துவமான படைப்புகளில் ஒன்றாக அது அமைந்தது. அந்தப் படத்தில் லலிதா பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். எம்டி வாசுதேவன்நாயர் திரைக்கதையில் உருவான சதையம் திரைப்படத்திலும் பாலியல் தொழிலாளியாக நடித்தார். பாலியல் தொழிலாளிகளுக்கேயுரிய நாசூக்கும், சிரிப்பும், போலி கரிசனமுமாக பாலியல் தொழிலாளி என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற சித்திரத்தை அப்படம் உருவாக்கியது. அதன் பிறகு பல படங்களில் அதுபோன்ற வேடங்கள் அவருக்கு அமைந்தன.

கேபிஏசி லலிதா நடித்தப் படங்களை குறிப்பிட்டு அவரது நடிப்பை பேச ஆரம்பித்தால் அது நெடுந்தொடரைவிட நீளமாகும். பாலியல் தொழிலாளி, பாசமிக்க அம்மா கண்டிப்பான மனைவி, காரியக்கார தாய், கோள் சொல்லும் பெண்மணி என்று அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் அவர் வாழ்ந்தார்.

அடுர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய எழுத்தாளர் பஷீரின் மதிலுகள் திரைப்படத்தில் நாராயணி என்ற கதாபாத்திரத்தில் லலிதா நடித்தார். நடித்தார் என்றால் அவரது குரல் மட்டும். ஆண்கள் சிறையை அடுத்து பெண்கள் சிறை. இரண்டுக்கும் நடுவே ஒரேயொரு சுவர் மட்டும். உயர்ந்த அந்த மதிலுக்கு இந்தப் பக்கம் பஷீர் (மம்முட்டி) அடைக்கப்பட்டிருப்பார். அவர் சுவருக்கு அந்தப்பக்கம் இருக்கும் நாராயணியுடன் பேசுவார். நாராயணிக்கு குரல் கொடுத்தது லலிதா. படத்தில் அவரது குரல் மட்டுமே கேட்கும். மலையாளிகள் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும், ஆராதிக்கும், அன்பு செலுத்தும் குரலாக அது  மாறியது.



கேபிஏசி லலிதா நடிக்க ஆரம்பித்த பிறகு அவரது பங்களிப்பு இல்லாமல் எந்த வருடமும் நகர்ந்தது இல்லை. வயதான பிறகு அம்மா கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடித்தார். மலையாளத்தில் அம்மா என்றால் மூன்று பேர். மறைந்த சுகுமாரி, கவியூர் பொன்னம்மா, கேபிஏசி லலிதா. இதில் கடைசி இருவருக்கும்தான் போட்டி. ஆனால், தனது நவரச நடிப்பால் எப்போதும் லலிதாதான் முதலிடத்தில் இருந்தார்.



நடிப்பே அவருக்கு மூச்சாக இருந்தது. இறக்கும்வரை நடிக்க வேண்டும் அல்லது நடித்துக் கொண்டிருக்கையிலேயே மரணத்தை தழுவ வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அவர் நடித்த தட்டியும் முட்டியும் நகைச்சுவை தொடரில் அனைவரையும் சிரிக்க வைத்தார். சமீபத்தில் வெளியான ஹோம் படத்திலும் அவர் நடித்திருந்தார். மார்ச் 3 வெளியாகும் மம்முட்டியின் பீஷ்ம பர்வத்திலும் நடித்துள்ளார். தமிழில் வெளிவரவிருக்கும் விஜய் சேதுபதியின் மாமனிதன், வீட்ல விசேஷங்க படங்களிலும் நடித்துள்ளார். இவை தவிர அவரது நடிப்பில் வெளிவர வேண்டிய படங்கள் மட்டும் பத்துக்கு மேல் இருக்கும். நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் எண்ணைக்கும் அதேயளவுக்கு வரும்.

Also read... சர்கார் கதை பிரச்சனையில் செல்வமணி போர்ஜரி செய்ததாக பாக்யராஜ் குற்றச்சாட்டு

கேபிஏசி லலிதா அமரம், சாந்தம் படங்களுக்காக இருமுறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். நான்குமுறை மாநில அரசின் விருதை பெற்றிருக்கிறார். பிற விருதுகள் ஏராளம். இந்தியாவின் எந்தவொரு நடிகருக்கும் இணையான பங்களிப்பை செய்திருக்கும் கேபிஏசி லலிதாவுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் மிகக்குறைவானது. ஒரு கலைஞனுக்கு பாரத ரத்னாவரை கொடுக்கும் இந்திய அரசாங்கம், அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத திறமையும், பங்களிப்பும் செலுத்திய கேபிஏசி லலிதா போன்றவர்களுக்கு பத்ம விருதுகூட அளிக்காமல் புறக்கணிப்பது வருத்தத்துக்குரியது. ஆனால், மலையாள சினிமா உள்ளவரையில், மலையாளிகள் இருக்கும்வரையில் லலிதாவும் இருப்பார். கலைஞர்களின் ஆகக்கடைசி விருப்பமும் அதுதானே.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி