தனது கடை விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளுடன் நடனமாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர் லெஜெண்ட் சரவணன். இதனையடுத்து ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜெண்ட் படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். முதல் படத்திலேயே ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு என பெரிய தொழல்நுட்பக் கலைஞர்களுடன் கைகோர்த்து திரையுலகினரை ஆச்சரியத்தை ஆழ்த்தினார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வெளியாகியிருந்தது. பெரிய நடிகர்களே தயங்கிக் கொண்டிருக்கும்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பேன் இந்தியன் படமாக வெளியிட்டு திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்தார்.
விஞ்ஞானி சரவணன் தனது சொந்த கிராமத்துக்கு திரும்பி மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார். அப்போது அவரது நண்பர் சர்க்கரை வியாதியால் அவதிப்படுவது தெரிகிறது. நாட்டில் சர்க்கரை வியாதி பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதை அவர் உணர்கிறார். இதனையடுத்து சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்க முயல்கிறார். அவரை மாஃபியா கும்பல் எதிர்க்கிறது. அவர்களை சமாளித்து தனது முயற்சியில் எப்படி வென்றார் என்பது கதை.
கோபுரம் சினிமாஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் பார்க்கும் ஆர்வத்தை விட ஒரு நடிகராக சரவணன் எப்படி நடித்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பே மக்களிடையே நிலவியது. பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகளில் ஓரளவுக்கு சரியாக செய்திருந்த அவர், நடிகராக இன்னும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கலாம் என்ற விமர்சனங்களே கிடைத்தன.
நீங்கள் அனைவரும் காணும் வகையில் ‘தி லெஜண்ட்’ விரைவில்…#TheLegend #LegendSaravanan pic.twitter.com/RbIzAbC3dw
— Legend Saravanan (@yoursthelegend) January 1, 2023
இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதேலா நடிக்க, மறைந்த நடிகர் விவேக் லெஜண்ட் சரவணனின் நண்பனாக நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இதுவரை எந்த ஓடிடியிலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரும் காணும் வகையில் 'தி லெஜெண்ட் விரைவில்' என பதிவிட்டுள்ளார்.
ஓடிடியால் வெளியாகிறதா அல்லது டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறதா என்பது குறித்து சரவணன் பதிவிடவில்லை. சமீபத்தில் அடுத்தப் படம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சரவணன் தெரிவித்திருந்தார். மேலும் மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.