பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என பிரதமர்
மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் பல மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டவர். பழம் பெரும் பாடகியான இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், நேற்று மாலை மீண்டும் மோசமானது. தொடர்ந்து, இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரைத் தொடர்புக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆறுதல் கூறினார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.
நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பியவர் லதா மங்கேஷ்கர்.
இந்திய கலாசாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக எதிர்காலத்தில் நினைவுக்கூறப்படுவார். லதா மங்கேஷ்கரின் மெல்லிய குரல் மக்களை மயக்கும் ஈடு இணையற்ற திறனைக் கொண்டிருந்தது. அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.