லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு உரிமையாளர் ராமன் தற்கொலை - பாடகர் எஸ்.பி.பி, மனோ உருக்கம்!

லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு உரிமையாளர் ராமன் தற்கொலை - பாடகர் எஸ்.பி.பி, மனோ உருக்கம்!
  • Share this:
லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு உரிமையாளர் ராமன் உடலுக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, இசையமைப்பாளர்கள் தேவா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இசை கச்சேரிக்கு பெயர் பெற்ற குழு லஷ்மன் ஸ்ருதி. இந்த இசைக் குழுவை ராமன் - லஷ்மன் என்ற இரட்டையர்கள் தொடங்கி இதுவரை 7,800 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். சென்னையில் திருவையாறு என்ற பெயரில் கர்நாடக இசை கலைஞர்களை வைத்து கடந்த 15 வருடங்களாக வெற்றிகரமாக இசை கச்சேரி நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்று வரும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்த ராமன் பாதியிலேயே வீட்டிற்கு திரும்பிவிட்டார்.


இரவு 9 மணியளவில் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த போது அவரது அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளார் ராமன். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

பின்னர் அசோக் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது உடல் அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலக்காக வைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், மனோ, வேல்முருகன் உள்ளிட்டோர் ராமனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசைக் கலைஞராக இல்லாமல் பல இசைக் கலைஞர்களுக்கு வாழ்வு கொடுத்தவர் ராமன் லக்ஷ்மணன். ராமன் என்று சொன்னாலே நினைவுக்கு வருவது அவர் மிகுந்த ஒழுக்கமானவர்.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய இசை குழு என்றாலே அது லஷ்மன் ஸ்ருதி தான். யாருடைய ஆதரவும் இல்லாமல் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள். அண்ணன் தம்பி இருவரும் நிஜத்திலும் ராமன் லட்சுமணன். தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இசைக் கச்சேரி நடத்தியவர் ராமன். இசைக் கலைஞராக இல்லாமல் பல இசைக் கலைஞர்களுக்கு வாழ்வு கொடுத்தவர்” என்று உருக்கமான குரலில் கூறினார்.

பாடகர் மனோ கூறுகையில், இன்று மேடையில் பாடும் குழுக்களில் லஷ்மன் ஸ்ருதியை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ராமன் - லஷ்மன் குழு ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை என்னைப்போன்ற எத்தனையோ கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதியைச் சேர்ந்தவர்கள் லக்ஷ்மன் ஸ்ருதியால் பயனடைந்துள்ளார்கள்.

மிகவும் கடுமையாக உழைத்து இன்று சென்னையில் திருவையாறு வரை உயர்ந்து இசைக்குப் பெருமை சேர்த்த, ஒரு இசைப்ரியராக விளங்கிய ராமன் அந்த நிர்வாகத்தின் மூளையாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி அவர் லஷ்மன் ஸ்ருதிக்கு கண்ணாக மட்டுமல்ல மூச்சாகவும் விளங்கினார். ஆனால், இன்று ராமன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இசைக்கு அவர் செய்த சேவையை மறக்க முடியாது. இசைக்கலைஞர்கள் எல்லோருக்கும் வாய்ப்பளித்த ராமனின் இழப்பை ஏற்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

Also see:

First published: December 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading