Laabam Review: விஜய் சேதுபதியின் ‘லாபம்’ லாபமா நஷ்டமா?

விஜய் சேதுபதி

விவசாயம் குறித்த புரிதல் இல்லாமல் வரும் திரைப்படங்களோடு ஒப்பிடுகையில், விவசாயத்தின் அடிப்படை கோட்பாட்டையும், அதன் கட்டமைப்புகளையும் லாபம் திரைப்படம் விரிவாகப் பேசியுள்ளது.

  • Share this:
    விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

    மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் லாபம் திரைப்படம் உருவாகியுள்ளது. நாடோடியாக விவசாய அறிவு தேடி, உலகம் சுற்றி மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு வரும் விஜய் சேதுபதி, கிராமத்தில் உள்ள மக்களை ஒன்று திரட்டி கூட்டுப்பண்ணை விவசாயம் தொடங்குகிறார்.

    விவசாய சங்கத்தை விஜய் சேதுபதி கைப்பற்றி மக்களின் லாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட, ஏற்கனவே விவசாய சங்கத்தின் தலைவராக இருந்து மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள், விஜய் சேதுபதியின் செயல்களுக்கு எதிரான சதியில் ஈடுபடுகின்றனர். இந்த சதிகளை முறியடித்து கூட்டு பண்ணை விவசாய திட்டத்தை விஜய்சேதுபதி எப்படி வெற்றிகரமாக நடத்தி மக்களுக்கு லாபம் ஈட்ட சொல்லித் தருகிறார் என்பதை படத்தின் அடிப்படையாக வைத்து, விவசாய பொருளாதாரத்தின் தேவையை மக்களுக்கு விளக்க இயக்குனர் எஸ் பி ஜனநாதன் முயன்றுள்ளார்.

    ஆங்கிலேயர்கள் ஏழை மக்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலங்கள் எவ்வாறு பெரும் முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதையும், பஞ்சமி நிலங்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் படத்தில் விஜய் சேதுபதியை வைத்து எஸ்பி ஜனநாதன் பேசியுள்ளார். மேலும் பண பயிரான பருத்தி, விவசாயம் செய்யும் ஏழைகளுக்கு லாபம் தராமல், இடையிலுள்ள வியாபாரிகளுக்கு லாபம் தருவதையும், பருத்தியின் லாபத்தை ஏழை விவசாயிகள் அனுபவிக்க தொடங்கினால் விவசாயிகள் வாழ்வில் செல்வம் கொழிக்கும் என்பதையும் இந்தப் படத்தின் மூலம் படக்குழுவினர் உணர்த்த முயன்றுள்ளனர்.

    விவசாயம் குறித்த புரிதல் இல்லாமல் வரும் திரைப்படங்களோடு ஒப்பிடுகையில், விவசாயத்தின் அடிப்படை கோட்பாட்டையும், அதன் கட்டமைப்புகளையும் லாபம் திரைப்படம் விரிவாகப் பேசியுள்ளது. ஆனாலும் படம் முழுக்க வகுப்பெடுக்கும் பிரச்சார நெடி அடிப்பது திரைப்படமாக பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் கதையில் ஆங்காங்கே வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும், லாபம் என்பது சாபம் என்பதை வசனங்களாக பேச முயற்சித்துள்ள போதும் படத்தின் கதை, திரைக்கதையை அல்லாமல் வெறும் வசனங்களால் நகர்த்தப்படுவது திரைக்கதையின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.



    விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்தை எதார்த்தமாக நடித்துள்ள போதும் படம் முழுக்க விஜய் சேதுபதி தத்துவங்களாக பேசிக்கொண்டிருப்பது நடிக்கும் வாய்ப்பை குறைத்துள்ளது. ஸ்ருதி ஹாசன் சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றினாலும், அவரின் கதாபாத்திரம் படத்திற்கு எந்த வகையிலும் உதவாமல் போவது நீண்ட நாட்களாக நடிக்காமல் ஓய்வில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசனுக்கு மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பிலும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இமானின் இசை படத்திற்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. பாடல் காட்சிகளின் பிரம்மாண்டத்தை கூட்டவும், காட்சிகளை பின்னணி இசையால் சுவாரசிய படுத்தவும் இமான் பெருமளவு உதவியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு திரை அரங்கிற்கு செல்லும் ரசிகர்களுக்கு திருவிழா விருந்தாக இல்லாமல் ஒரு அரசியல் பொருளாதார பாடமாக அமைந்துள்ளது லாபம் திரைப்படம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: