KV Anand: நாவல்களின் அட்டைப் படத்தை மாற்றிய கே.வி.ஆனந்த்!

KV Anand:  நாவல்களின் அட்டைப் படத்தை மாற்றிய கே.வி.ஆனந்த்!

கே.வி.ஆனந்த்

கனா கண்டேன் தொடங்கி, கவண்வரை கே.வி.ஆனந்தின் அனைத்துப் படங்களுக்கும் கதாசிரியராக சுபா பணியாற்றினர்.

  • Share this:
    கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கும், பகிரப் பகிர ஊறும் நினைவுகளை கொண்டதாக கே.வி.ஆனந்தின் வாழ்க்கை உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு அவரை இயக்குநராகவே தெரியும். அதற்கடுத்து அவரை சிறந்த ஒளிப்பதிவாளர் என்பார்கள். அதற்கப்பால், அவர் ஒரு அரிய புகைப்பட கலைஞர். நாவல்கள் அட்டைப்படத்தில் ஒரு புரட்சியை உருவாக்கியவர். ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்துக்கும், இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்தவர், அறிப்படாத புகைப்பட கலைஞர் கே.வி.ஆனந்த் என்பது முக்கியமானது.

    லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்த பிறகு அவர் நேராக திரைத்துறைக்கு வரவில்லை. புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அப்போது பிரபலமாக இருந்த ஒருசில பப்ளிகேஷனில் விவேக் பப்ளிகேஷன்ஸும் ஒன்று. ராமு அதன் நிர்வாகி. சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களின் நாவல்களை தொடர்ச்சியாக ராமு தனது பப்ளிகேஷனில் வெளியிட்டு வந்தார். பிற்காலத்தில் பாலகுமரன், ரமணிச்சந்திரன் என பலருடைய நாவல்களை தொடர்ச்சியாக ராமு வெளியிட்டார். ரமணிச்சந்திரன் எழுதிவரும் மங்கையர் நாவலும் இவருடையதே.

    அப்பொழுது குடும்ப நாவல்களுக்கு பெரும்பாலும் ஓவியங்கள் மற்றும் சினிமா நடிகைகளின் படங்களை பயன்படுத்தினார்கள். துப்பறியும் க்ரைம் நாவல்களுக்கு அதிகமும் ஓவியங்கள் அல்லது வெளிநாட்டு பத்திரிகை புகைப்பட கட்டிங்குகள். ராமு தனது விவேக் பப்ளிகேஷன்ஸ் சார்பாக சூப்பர் நாவல் என்ற ஒன்றை தொடங்குகிறார். சுபாவின் நாவல்கள் மட்டும் அதில் வெளியாகும். அந்த சூப்பர் நாவல்களின் அட்டைப் படத்துக்கு புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார் கே.வி.ஆனந்த். மாடல்களை வைத்து, அவராகவே க்ரைம் சீன்களை வடிவமைத்து, அதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். சாக்கு மூட்டையில் பிணத்தை வைத்து சைக்கிளில் கொண்டு செல்வது, அரிவாளுடன் வெட்டுவதற்காக கோபத்துடன் பாய்வது, துப்பாக்கியுடன் போஸ் கொடுப்பது என சினிமா காட்சி போன்று விதவிதமான புகைப்படங்கள் எடுத்தார். அவை சூப்பர் நாவலின் அட்டைப் படங்களாயின. ஒவ்வொரு மாதமும் இந்த அட்டைப் படங்களைப் பார்ப்பதற்கென்றே வாசகர்கள் உருவாகினர். நாவல் அட்டைப் படத்தில் கே.வி.ஆனந்த் ஒரு புதுப்பாணியை உருவாக்கினார்.

    அந்த நேரம் சுபாவும் (சுரேஷ், பாலகிருஷ்ணா), பட்டுக்கோட்டை பிரபாகர் மூவரும் இணைந்து ஆத்மா என்ற பப்ளிகேஷனை ஆரம்பித்தனர். உங்கள் ஜுனியர், உல்லாச ஊஞ்சல் நாவல்கள் அதிலிருந்து வெளிவந்தன. உங்கள் ஜுனியரில் சுபா எழுதும் நாவல்கள் வரும். உல்லாச ஊஞ்சலில் பட்டுக்கோட்டை பிரபாகரின் நாவல்கள். இந்த இரு நாவல்களுக்கும் கே.வி.ஆனந்த் அட்டைப்பட புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். அப்போது ஏற்பட்ட நெருங்கிய நட்பின் காரணமாக, கனா கண்டேன் தொடங்கி, கவண்வரை கே.வி.ஆனந்தின் அனைத்துப் படங்களுக்கும் கதாசிரியராக சுபா பணியாற்றினர். கடைசிப் படம் காப்பானில் பட்டுக்கோட்டை பிரபாகர்.

    கே.வி.ஆனந்துக்குப் பிறகு, நாவல் அட்டைப் படங்களுக்கு என்று புகைப்படம் எடுக்கும் மரபு வழக்கொழிந்தது. அந்த மரபை தொடங்கிய கே.விஆனந்துடனே அந்த மரபு அழிந்தது வருத்தத்துக்குரியது. அன்று தனது சொந்த ஆர்வத்தில், வளர்த்துக்கொண்ட புகைப்பட கலையே காப்பான் வரை அவரை கொண்டு சேர்த்தது. இயக்குநராக அவர் திறமைசாலி என்றால் புகைப்படக் கலைஞராக அவர் ஒரு மாஸ்டர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: