தமிழகத்திற்கு கேரளா தந்த கனவு தேவதைகளில் ஊர்வசி ஒரு நடிப்பு ராட்ஷசி. தன் யதார்த்த நடிப்பால், சக நடிகர், நடிகைகளை மிரளவைத்தது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மகிழ்வித்த 80-களின் கதாநாயகி.
இயக்குனர் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் கால் பதித்த ஊர்வசி, அதன் பிறகு பல வெற்றி படங்களில் கதாநாயகியாக ஜொலித்து பின் நகைச்சுவை அவதாரம் எடுத்தும், குணச்சித்திர நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
'முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்கு பிறகு விளையாட்டாக நடிக்க ஆரம்பித்த ஊர்வசியின் கால்ஷீட் டைரியின் பக்கங்கள் நிரம்பியது. இயல்பிலேயே காமடி சென்ஸ் அதிகமுள்ள ஊர்வசி, காமெடி கலந்த கதாநாயகி பாத்திரங்களில் விரும்பி நடித்தார். அதில் குறிப்பிடத்தக்க திரைப்படம் பாண்டியராஜன் மனோரமாவுடன் ஊர்வசி நடித்த ‘பாட்டி சொல்ல தட்டாதே’.
'மாயா பஜார்’, ’இரட்டை ரோஜா’ போன்ற திரைப்படங்கள் ஊர்வசியின் நடிப்பு திறமையை சொல்லியது. பொதுவாக வழக்கமான தமிழ் கதாநாயகிகள் செய்யும் மரத்தை சுற்றிய டூயட் பாடல்களில் அதிகம் விருப்பம் இல்லாத ஊர்வசி, டூயல் ரோல்களை விரும்பி செய்தார். குறிப்பாக கேயார் இயக்கத்தில் வெளிவந்த ‘வனஜா கிரிஜா’ திரைப்படத்தில் வெரைட்டி பர்பார்மன்ஸில் ரசிகர்களை மகிழ்வித்திருப்பார் ஊர்வசி.
கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம், ஊர்வசியின்
திரை வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்த திரைப்படமானது. காமேஸ்வரன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ஊர்வசியின் உடல் மொழியும், பேச்சு மொழியும் அவரை நடிப்பின் ஊர்வசி என சொல்ல வைத்தது.
ஊர்வசியின் திரை இன்னிங்ஸில் வுமன் ஆப் தி மேட்ச் வாங்கி கொடுத்த மற்றொரு
திரைப்படம் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த ’மகளிர் மட்டும்’ திரைப்படம். தான் வேலை செய்யும் கம்பெனி முதலாளியான நாசரை மூக்கன் என சொல்லும் இடத்திலும், நாகேஷின் இறந்த உடலை மருத்துவமனையில் இருந்து கொண்டுவரும் காட்சிகளிலும் நடிப்பை மறந்து இயல்பாய் வாழ்ந்திருப்பார் ஊர்வசி.
தற்போது அக்கா, அம்மா
வேடங்களில் நடித்து கொண்டிருக்கும் முன்னாள் கதாநாயகிகளில் முன்னணி நடிகையுமானார் ஊர்வசி. ’சிவா மனசுல சக்தி’, ‘பேராண்மை’. ‘ மலைக்கோட்டை’ , ‘பஞ்ச தந்திரம்’, ‘உன் சமையலறையில்’, ’கடவுள் இருக்கான் குமாரு’ ‘சிவலிங்கா’, ‘உத்தம வில்லன்’, ‘மூக்குத்தி அம்மன்‘ போன்ற தமிழ் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து அதிலும் பாராட்டைப் பெற்று ’தன் வாழ்க்கை என்றும் சினிமாதான்’ என இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிப்பின் ராட்ஷசி ஊர்வசி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.