80-களின் தமிழ் சினிமாவில் இளைய நிலாவை பொழிய வைத்த திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. இத்திரைப்படம் வெளிவந்து 40 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் அப்படத்தை பற்றிய ஒரு தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம்.
80-களில் தமிழக வீதியெங்கும் ஒலித்தது ‘இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது’ என்ற பாடல். அப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்தான் பயணங்கள் முடிவதில்லை. மோகன் மற்றும் பூர்ணிமா நடிப்பில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
கவிதை போன்று அழகான நாயகி பூர்ணிமா ஒரு கவிதையை எழுத அந்த காகிதமோ காற்றில் பறந்து அருகில் இருக்கும் மோகனின் வீட்டில் விழ, அந்த வரிகளை மோகன் கிடார் வாசித்து கொண்டே ‘இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது’ என பாடும் காட்சியில் சிலிர்த்தது
திரையரங்கம்.
பாடல்களால் மட்டுமே பசியாறும் மோகனுக்கு பூர்ணிமா தனது அப்பாவின் மூலம் கோயிலில் பாட வாய்ப்பு வாங்கி தர, முதன் முதலில் ஒரு மேடையில் பாடப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் மோகனுக்கு இடி விழுந்தாற் போல் மழை பெய்து கூட்டத்தை கலைத்து விட, அவரது கண்ணீர் மழையும் சேர்ந்தது. இருந்தாலும் தன் முதல் வாய்ப்பை தவற விடக் கூடாது என ‘ராக தீபம் ஏறும் போது புயல் மழையோ’ என அழுது கொண்டே மோகன் பாடும் காட்சியில் காதல் மழையும் பொழிந்து தள்ளியது.
33 வருடங்களை நிறைவு செய்யும் ரஜினியின் ராஜாதி ராஜா - சுவாரஸ்ய தகவல்கள்!
காதல் தன் காதலுக்காக எதையும் செய்யும் என்பதை உறுதி செய்வது போல் மோகனின் வளர்ச்சிக்கு பூர்ணிமாவின் உழைப்பைக் கண்டு அசந்தனர் ரசிகர்கள். ஒரு கட்டத்தில் சினிமா பாடகனாகி விட்ட மோகன் பூர்ணிமாவுடனான காதலை உதறித் தள்ள அதிர்ச்சியில் உறைந்தது பூர்ணிமா மட்டுமல்ல ரசிகர்களும் தான்.
விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு மன்சூர் அலிகான் அட்டகாச நடனம்!
மோகனின் அந்த முடிவுக்கு காரணம் அவருக்கு உண்டான புற்றுநோய்தான் என்பது பூர்ணிமாவுக்கு பின்னர் தெரியவரும் காட்சியில் கலங்கி கதறும் பூர்ணிமா விஷம் அருந்தி உயிரை மாய்க்க மோகனின் உயிரும் அணைந்து அமைதியாகும் காட்சியில் உறைந்து போயினர் ரசிகர்கள். ‘பாதை முடிந்தபின்னும் பயணம் முடிவதில்லையே...’ என நா.முத்துகுமார் சொன்னது போல் 40 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் நெஞ்சத்தை கணக்க செய்யும் ’ பயணங்கள் முடிவதில்லை’.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.