மிக இளம் வயதில் தமிழ் சினிமாவின் இயக்குனராகி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளவர் இயக்குனர் அட்லீ. அவரைப் பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு திரைப்படங்களில் உதவி இயக்குனராக திரைப்பயணத்தில் அடியெடுத்து வைத்த அட்லீ, 2013-ஆம் ஆண்டு ’ராஜா ராணி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். தன் முதல் திரைப்படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைத்தபோது திரையுலகமே யார் இந்த அட்லீ என திரும்பிப் பார்த்தது. புதுமையாகவும் இளமையாகவும் இருந்த இத்திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, சிறந்த வசனத்திற்காக மாநில விருதையும், சிறந்த புதுமுக இயக்குனருக்கான எடிசன் விருதையும் தட்டிச்சென்றார்.
முதல் படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்து தமிழ் திரையுலகை ஆச்சரியப்பட வைத்த அட்லீ, தன் இரண்டாவது படத்திலேயே, கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்று தமிழ் திரையுலகை அதிர வைத்தார். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய ‘தெறி’ திரைப்படம் விஜயின் ரசிகர்களை தெறிக்க விட்டது என்றே சொல்லலாம், தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத மிடுக்கான போலீஸ் அதிகாரியாக விஜய், அழகு தேவதைகளாக சமந்தா – ஏமிஜாக்சன், வில்லனாக இயக்குனர் மகேந்திரன், என நட்சத்திர பட்டாளத்தால் திரைப்படத்தை மிளிர்ந்தது.
தெறியின் அமோக வெற்றி மீண்டும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு பெற்று தந்தது. படத்தின் தலைப்பான மெர்சல் என்ற வார்த்தையே விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகை மிரள வைத்தது. விஜய் மூன்று கெட் அப்பில் நடித்த மெர்சல் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. இதில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. மேலும் ’ஆளப்போறான் தமிழன்’ பாடல் உலகெங்கும் ஒலித்து பல சாதனைகளை படைத்தது.
தனுஷின் ட்வீட்டை லைக் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! மீண்டும் இணைய க்ரீன் சிக்னல்?
தன் அடுத்த திரைப்படத்திலும் விஜய்யுடன் கூட்டணி வைத்த அட்லீயை பார்த்து திரையுலகமே வியந்தது. இம்முறை அட்லீ கையில் எடுத்த திரைக்களம் பெண்களுக்கான கால்பந்து போட்டி. பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச் மற்றும் தந்தை ராயப்பன் என இரண்டு கெட்டப்புகளில் விஜய் அசத்தியிருந்த இத்திரைப்படம் தாறுமாறான வெற்றியை பெற்றது. குறிப்பாக ராயப்பன் கதாபாத்திரம் சொல்லும் ‘கப்பு முக்கியம் பிகிலு’ வசனம் ஏகத்திற்கும் பிரபலமாகி பட்டி தொட்டியெங்கும் பிகிலை கொண்டு சேர்த்தது.
வடிவேலுவுக்கு மாபெரும் வரவேற்பு அளித்த மாமன்னன் படக்குழு!
இந்நிலையில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது 54-வது பிறந்தநாள் அன்று தன் அடுத்த படத்தின் இயக்குனர் அட்லீ என அறிவித்தபோது மொத்த இந்திய சினிமா உலகின் பார்வை அட்லீ மீது குவிந்தது. கோலிவுட்டில் கலக்கிவிட்டு பாலிவுட்டிலும் கால் பதித்து ’ஆளப்போறன் தமிழன்’ என சொல்லாமல் சொன்ன அட்லீ, தமிழ் சினிமாவின் அதிசயமே.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.