Home /News /entertainment /

Kuruthi Review: குருதி - மத வெறுப்பு அரசியல் குறித்த மகத்தான ஆவணம்!

Kuruthi Review: குருதி - மத வெறுப்பு அரசியல் குறித்த மகத்தான ஆவணம்!

குருதி

குருதி

இதுபோன்ற படத்தை தயாரித்து, நாயகன் கதாபாத்திரத்தை இன்னொருவருக்கு தர கலாரசனை வேண்டும்.

  பிருத்விராஜ் தயாரித்து நடித்திருக்கும் குருதி இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இது நேரடி ஓடிடி வெளியீடு. அறிமுக இயக்குனர் மனு வாரியர் படத்தை இயக்க, அனிஷ் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.

  நாம் பொறாமை கொள்கிற மாதிரி மாதத்துக்கு ஒரு படமாவது மலையாளத்தில் வெளியாகிறது. ஒரு கட்சியின் பெயரை, சில அரசியல் சம்பவங்களை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் பதிவு செய்தாலே, அதனை அரசியல் படம் என்று கொண்டாடுகிற காலத்தில், மத வெறுப்பு அரசியலை (இன்னும் எதற்கு பூடகமான வார்த்தைகள்) இந்து, முஸ்லீம் மத வெறுப்பை, அது எப்படி சாமானிய மனிதர்களின் மனசுவரை ஊடுருவி விஷமேற்றி வைத்துள்ளது என்பதை கன்னத்தில் அறைந்து உணர்த்துகிறது இந்தப் படம்.

  இப்ராஹிம் நடுத்தர வயது இளைஞன். மனைவி, மகளை நிலச்சரிவில் பறி கொடுத்து, தனது துயரத்துக்கான மீட்சியை ஆன்மிகத்தில் தேடிக் கொண்டிருப்பவன். வீட்டில் அவனும், நோயாளி தந்தையும், மதம் சார்ந்த கோபத்துடன் திரியும் தம்பி என மூன்று பேர். அவர்களின் பக்கத்து வீட்டு பிரேமனும் நிலச்சரிவில் மனைவியை பறி கொடுத்தவன். அவனுடைய ஒரே தங்கை சுமா. இப்ராஹிம் மீது காதலுடன், அந்த குடும்பத்துக்காக அனைத்தும் செய்து தருகிறவள்.

  Kuruthi Review Rating, kuruthi prithviraj release date, kuruthi amazon prime, kuruthi malayalam movie ott release date, kuruthi ott, kuruthi movie release date, kuruthi release platform, kuruthi malayalam movie director, kuruthi director, குருதி விமர்சனம், குருதி அமேசான் பிரைம், குருதி மலையாளம் திரைப்படம், பிரித்விராஜ் குருதி திரைப்படம்
  குருதி


  ஒருநாள் இரவில் இப்ராஹிமின் வீட்டிற்குள் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு கைதியுடன் அத்துமீறி நுழைகிறார். அதன் பிறகு எல்லாமே மாறிப்போகிறது. போலீஸ்காரர் கைது செய்து அழைத்து வந்தது விஷ்ணு என்கிற இந்து இளைஞன். முஸ்லீம் பெரியவர் ஒருவரை கொன்றதுக்காக அவனை கைது செய்து அழைத்துச் செல்கையில், கொல்லப்பட்டவரின் மகன் லயிக்கும், அவனது ஆள்களும் விஷ்ணுவை கொலை செய்ய முயற்சிக்க, அவர்களிடமிருந்து தப்பித்து இப்ராஹிமின் வீட்டிற்கு வந்திருக்கிறார். வெளியே சென்றால் இரண்டு பேருமே கொல்லப்படலாம். அவர் வந்திருப்பதோ முஸ்லீம் வீடு. அவர்கள் வெளியே தகவல் கொடுத்தாலும் ஆபத்து. இந்நிலையில் சுமா உணவு எடுத்து வர, அவளையும் அங்கேயே தங்கச் சொல்கிறார் போலீஸ் அதிகாரி.

  சற்று நேரத்தில் லயிக்கும், அவன் ஆள்களும் வருகிறார்கள். விஷ்ணுவை மட்டும் விட்டுக் கொடுத்தால் போதும், அவர்கள் அங்கிருந்து சென்று விடுவார்கள். விஷ்ணு தப்பித்து போய்விட்டான் என்று சொன்னால் மட்டும் போதும். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த இக்கட்டான சூழலில் மனித மனம் எப்படியெல்லாம் மாறுகிறது, அவர்கள் மத நம்பிக்கை எப்படி வெறுப்பாகி மனிதர்களை பழிவாங்குகிறது என்பதை பதைபதைப்புடன் விவரிக்கிறது படம்.

  மத அரசியலை கையிலெடுப்பது கரண்டை கையில் பிடிப்பதற்கு சமம். கச்சிதமான ஒரு சூழலை உருவாக்கி, கதைமாந்தர்களுக்கு பொருத்தமான பின்னணியை உருவாக்கி அட்டகாசமான அனுபவத்தை தந்திருக்கிறார்கள் எழுத்தாளர் அனிஷும், இயக்குனர் மனு வாரியரும். இப்ராஹிமாக ரோஷன் மேத்யூ நடித்துள்ளார். மகள் சொர்க்கத்துக்கு போயிருப்பாள். சொர்க்கத்துக்குப் போனால் மகளைப் பார்க்கலாம். ஆனால், பல சந்தர்ப்பங்களில் அல்லாவின் விருப்பம் எது என தெரியவில்லையே என மருகும் கதாபாத்திரம். அவனை கழுத்தில் குத்துவதற்கும், என்னை வயிற்றில் குத்தியதற்கும் என்ன வித்தியாசம் என்று லயிக் கேட்கையில் ஏற்படும் ரோஷனின் அதிர்ச்சி, காட்சியை தாண்டி பல விஷயங்களை உணர்த்துகிறது.

  லயிக்காக பிருத்விராஜ் நடித்துள்ளார். படம் தொடங்கி முக்கால் மணி நேரம் கழித்தே வருகிறார். வில்லன் சாயல் கொண்ட வேடம். இதுபோன்ற படத்தை தயாரித்து, நாயகன் கதாபாத்திரத்தை இன்னொருவருக்கு தர கலாரசனை வேண்டும். போலீசாக வரும் முரளி கோபியை பிருத்விராஜ் தாக்குகையில் பார்க்கிற நமக்கே பயம் வருகிறது. சுமாவாக ஸிருந்தா. காதலுக்காக மதம் மாறவும் தயாராக இருக்கிற ஒரு சராசரி பெண். இக்கட்டான சூழலில் மத நம்பிக்கை மத வெறுப்பாக வெளிப்படுகிற இடத்தில் திகைக்க வைக்கிறார். ஷைன் டாம் சாக்கோ, மணிகண்டன், நஸ்லன், சாகர் சூரியா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களில் இப்ராஹிமின் வாப்பாவாக வரும் மம்முக்கோயா அசத்தியிருக்கிறார். அவர் வழியாக மத வெறுப்பு எப்படிப்பட்டது, மனிதர்களை அது எப்படி சுட்டரித்துக் கொண்டிருக்கிறது என உறுத்தாமல் விளக்கியுள்ளார் இயக்குனர். அவர் பேசுகிற ஒவ்வொரு வசனமும் ஒரு பாடம்.

  ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம். இரவுக் காட்சிகளில் ஒரு காவியமே படைத்திருக்கிறது இவரது கேமரா. உறுத்தாத எடிட்டிங், காட்சியின் தீவிரத்தை உணர்த்தும் இசை.

  இயல்பான நிலையில், எம்மதமும் சம்மதம் என்றிருக்கும் சராசரி மனிதன், ஒரு சர்ச்சை எழுகையில், என் மதம்தான் உயர்ந்தது என தடுமாறி, ஒரு கலவரம் வெடிக்கையில், என் மதத்தினர் தவிர வேறு யாரும் உயிரோடு இருக்கக் கூடாது என்ற இழி நிலைக்கு செல்கிறான். இந்தியாவில் பலரும் இந்த மூன்றாவது நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களை அப்படி வைத்திருக்கவே இங்குள்ள மத வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். அந்த மத வெறுப்பு எத்தனை ஆபத்தானது, அது அன்றாடங்காய்ச்சிகள் வரை எப்படி ஊடுருவி பாழ்படுத்தியுள்ளது என்பதன் இரண்டு மணி நேர பாடம், இந்தப் படம். கண்டிப்பாக பார்த்து உணர வேண்டிய படம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Malayalam actor

  அடுத்த செய்தி