பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ராமேஸ்வரத்தில் முதல் ஷெட்யூல் எடுக்கப்படலாம் என்கின்றன தகவல்கள். இந்நிலையில் கதாநாயகி குறித்தும் தகவல் கசிந்துள்ளது.
நந்தா படத்தின் மூலம் சூர்யாவின் நடிப்பு திசையை திறந்து வைத்தவர் பாலா. அதன் பிறகு அவரது பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தார். அதற்குப் பிறகு பல வருடங்களுக்கு பின் இப்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நாயகியாக க்ருத்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஹிர்த்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தில் அறிமுகமானவர். உப்பன்னா, ஷ்யாம் சிங்கா ராய், பாங்கார்ராஜு என தெலுங்கில் அவர் நடித்த அனைத்துப் படங்களுமே ஹிட். தற்போது லிங்குசாமி தெலுங்கு, தமிழில் ராம் பொத்னியேனியை வைத்து இயக்கி வரும் தி வாரியர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலா படத்தில் அவர் நடிப்பது உண்மையானால் இது அவரது முதல் நேரடித் தமிழ்ப் படமாக இருக்கும்.
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரது முந்தைய இரு படங்களான சூரரைப்போற்று, ஜெய்பீம் அளவுக்கு எதற்கும் துணிந்தவன் நல்ல விமர்சனங்களை பெறவில்லை. எனினும் படம் லாபத்தை சம்பாதித்து உள்ளது.
அவர் அடுத்து நடிக்கும் பாலாவின் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது. பரதேசிக்கு பிறகு பாலாவின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. தனது பிதாமகன், நான் கடவுள் படங்களின் உச்சத்தை இந்த புதிய படத்தில் பாலா மீண்டும் தொடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.