முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குனர்களை இணைத்த கோல்ட் ஃப்ளேக் சிகரெட்

கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குனர்களை இணைத்த கோல்ட் ஃப்ளேக் சிகரெட்

கிருஷ்ணன் - பஞ்சு

கிருஷ்ணன் - பஞ்சு

இரட்டை எழுத்தாளர்கள், இரட்டை இயக்குனர்கள் என யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சண்டையிட்டு பிரிந்து செல்வது வழக்கமானது. ஆனால் பூம்பாவை முதல் பஞ்சு மரணமடைந்த 1984 வரை இருவரும் இணைந்தே இருந்தனர்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :

தமிழ் சினிமாவின் முதல் இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. இதில் கிருஷ்ணன் மூத்தவர். பஞ்சாபகேசன் என்ற பஞ்சு அவரைவிட ஆறு வயது இளையவர். 1944 இல் பூம்பாவை திரைப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இணைந்து இயக்கினார்கள். அதனைத் தொடர்ந்து கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுக்காக இயக்கிய திரைப்படம் பைத்தியக்காரன். லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற என் எஸ் கிருஷ்ணனுக்காகவும், அப்போது கடனில் இருந்த அவரது ட்ராமா ட்ரூப்புக்காகவும் இந்த படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினார்கள். கலைவாணரும் இதில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சி என் அண்ணாதுரை வசனத்தில் நல்லதம்பி திரைப்படத்தை இயக்கினார்கள்.  கலைஞரின் பராசக்தி திரைப்படத்தை இயக்கியவர்களும் இவர்கள்தான். சிவாஜி என்ற அற்புத நடிகர் இதன் மூலம் தமிழ்சினிமாவுக்கு கிடைத்தார். திருவாரூர் தங்கராசுவின் ரத்தக்கண்ணீர் நாடகத்தை எம் ஆர் ராதா நடிப்பில் அதே பெயரில் சினிமாவாக்கியவர்களும் இவர்கள்தான்.

இந்த ட்ராக் ரிக்கார்டை பார்க்கும் போதே கிருஷ்ணன்-பஞ்சு எத்தனை மகத்தான இயக்குனர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரியும்.  ஏவி மெய்யப்ப செட்டியார் இவர்களுடைய திறமையில் நம்பிக்கை வைத்து அவர்கள் தயாரித்த இந்திப் படங்களையும்  இவர்களை வைத்தே தயாரித்தார்கள்.

இரட்டை எழுத்தாளர்கள், இரட்டை இயக்குனர்கள் என யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சண்டையிட்டு பிரிந்து செல்வது வழக்கமானது. ஆனால் பூம்பாவை முதல் பஞ்சு மரணமடைந்த 1984 வரை இருவரும் இணைந்தே இருந்தனர். இவர்களை இணைந்தது இருவரின் புகைபிடிக்கும் பழக்கம். அப்போது கிருஷ்ணன் கந்தன் ஸ்டுடியோவில் லேபாரட்டரில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்த கந்தன் ஸ்டுடியோதான் பிற்காலத்தில் பட்சிராஜா ஸ்டூடியோவாக பெயர் மாற்றம் கொண்டது.

அந்த நேரத்தில் கந்தன் ஸ்டுடியோ ராஜா சாண்டோ இயக்கத்தில் மனுநீதிச் சோழனின் கதையை படமாக்கியது.  ஆராய்ச்சி மணி (அ) மனுநீதிச் சோழன் என்ற அந்தப் படம் சோழ மன்னன் தேர்க்காலில் கன்றை கொன்ற  தனது மகனை அதேபோல் கொலை செய்து நீதியை நிலைநாட்டும் கதையைக் கொண்டது. அதில் முக்கியமான கட்டம், கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடிப்பது. பசு மணியை அடிப்பதைப் பார்த்தே மன்னன் தனது மகன் செய்த தவறை தெரிந்து கொள்வார். பசு கயிற்றை இழுத்து மணியை அடிக்கும் காட்சியை ராஜா சாண்டோ எத்தனை முயன்றும் நினைத்தபடி எடுக்க முடியவில்லை. பசு தனது கொம்பில் கயிற்றை சுற்றி மணியை அடிக்க வேண்டும். கடைசிவரை அது நடக்கவில்லை.  ராஜா சாண்டோ கோபக்காரர் என்று பெயரெடுத்தவர். அவரிடம் நெருங்கி சென்று பேசவே பயப்படுவார்கள்.

காட்சி சரிவராத உக்கிரத்தில் இருந்த அவரிடம்,  அப்போது இளைஞர்களாக இருந்த கிருஷ்ணனும், பஞ்சுவும் தயங்கியபடி, தங்களின் ஐடியாவை சொல்லியிருக்கிறார்கள்.  கோபத்தில் இருந்த ராஜா சாண்டோ, நீங்க எதையும் சொல்ல வேண்டாம். இதோ கேமரா, நடிகர்கள் எல்லாம் இருக்காங்க.  எப்படி எடுக்கணும்னு சொல்றீங்களோ, அப்படியே எடுத்திடுங்க என்று பொறுப்பை அவர்களிடம் தந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.  இது நடக்கும் போது கிருஷ்ணன் லேபாரட்டரி அசிஸ்டண்ட், பஞ்சு எடிட்டிங் அசிஸ்டெண்ட்.

கிருஷ்ணன் - பஞ்சு சேர்ந்து அந்த காட்சியை எடுக்கிறார்கள். ராஜா சாண்டோ வந்து அதனை பார்க்கிறார்.  பசுவின் கொம்பில் கயிறு மாட்டி மணி அடிப்பதற்கு பதில்  பசு தனது  வாயில் கயிறை கவ்வி மணி அடிப்பது போல் அவர்கள் எடுத்திருந்தார்கள். ராஜா சாண்டோவுக்கு  காட்சி மிகவும் பிடித்துப் போகிறது. கோபம் இருக்கும் இடத்தில் தானே குணமும் கொட்டிக் கிடக்கும். இரண்டு பேரையும் கட்டி தழுவிக் கொள்கிறார். இனிமேல் நீங்க இரண்டு பேர் அல்ல கிருஷ்ணன்-பஞ்சு இரண்டு பேரும் ஒருவர் தான். என்னுடைய அடுத்த படம் பூம்பாவையை நீங்கள் தான் இயக்குகிறீர்கள்  என்று அப்பொழுதே அடுத்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்தார்.

Also read... 51 வயதில் மீண்டும் கதாநாயகியான விஜயகாந்த் பட நடிகை

கிருஷ்ணன்,  பஞ்சு இருவரது  பூர்வீகமும் தஞ்சாவூர். சொந்த ஊர்க்காரர்கள் என்ற  பாசம் இருந்தாலும் அவர்களை நண்பர்களாக இணைத்தது இருவரின் புகைபிடிக்கும் பழக்கம். இரண்டு பேரும் அப்போது உயர்ரக சிகரெட்டாக கருதப்பட்ட கோல்டு ஃப்ளேக்கின் பரம ரசிகர்கள். அன்று சாமானியமாக அந்த சிகரெட் கிடைத்து விடாது. வெளிநாட்டிலிருந்து வர வேண்டும். எப்போதும் தட்டுப்பாடு இருக்கும். ஒருவருக்கு சிகரெட் கிடைக்கையில் அதனை மற்றவருடன் பகிர்ந்து கொள்வார்கள். அப்படி சிகரெட்டும், புகையுமாக வளர்ந்த நட்பு அவர்களுடையது.

ராஜா சாண்டோவின் மனுநீதிச்சோழனில் ஆராய்ச்சி மணி அடிக்கும் காட்சியை இயக்கியதிலிருந்து கடைசிவரை  இந்த இரட்டையர்கள் பிரியவில்லை. மரணத்தால்தான் அது சாத்தியமானது.

நல்லதம்பி, பராசக்தி, ரத்தக்கண்ணீர், குங்குமம், சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், எங்கள் தங்கம் என்று நீண்டு செல்லும் இவர்களின் படப்பட்டியல் ஆச்சரியமானது. இன்றைய தலைமுறை நினைத்துக்கூட பார்க்க முடியாதது.

First published:

Tags: Entertainment