ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அதிக திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் திரைப்படங்கள்…

அதிக திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் திரைப்படங்கள்…

வெள்ளி விழா கொண்டாடிய தமிழ் படங்கள்

வெள்ளி விழா கொண்டாடிய தமிழ் படங்கள்

ரஜினிகாந்த், கே எஸ் ரவிக்குமார் கூட்டணியின் படையப்பா திரைப்படம் 1999 வெளியாகி அதுவரை வெளியான அனைத்துத் திரைப்படங்களின் வசூலையும் முறியடித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெள்ளிவிழா என்பது ஒரு திரைப்படத்தின் வெற்றியை சொல்லுகிற பென்ச் மார்க் ஆக தொன்று தொட்டு இருந்து வருகிறது. 25 வாரங்கள் அதாவது 175 தினங்கள் ஓடினால் அது வெள்ளி விழா என அழைக்கப்படுகிறது. தமிழில் அதிக திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடிய திரைப்படங்கள் 5.

1. திரிசூலம் (1979)

1979இல் பி.மாதவ இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா நடிப்பில் வெளியான திரிசூலம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக அமைந்தது. அதற்கு முன் 1973இல் வெளியான எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அதுவரை வெளிவந்த அனைத்துத் தமிழ் திரைப்படங்களின் வசூலையும் முறியடித்து இண்டஸ்ட்ரி ஹிட் என்ற சாதனையை படைத்தது.

அந்த சாதனையை ஆறு வருடங்களுக்கு பிறகு திரிசூலம் முறியடித்து புதிய இண்டஸ்ட்ரி ஹிட் ஆக அமைந்தது. இது சிவாஜியின் 200ஆவது திரைப்படம் ஆகும். கன்னடத்தில் ராஜ்குமார் நடிப்பில் வெளியான சங்கர் குரு திரைப்படத்தைத் தழுவி திரிசூலம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் தமிழகத்தில் 8 திரையரங்குகளில் 175 தினங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

2. முந்தானை முடிச்சு (1983)

ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் 1983இல் வெளியானது. ஊர்வசி இதில் நாயகியாக நடித்திருந்தார். கிராமம் ஒன்றுக்கு கைக்குழந்தையுடன் வரும் ஆசிரியர் மீது கிராமத்தில் உள்ள இளம் பெண் காதல் கொள்கிறாள். அவனை திருமணம் செய்து கொள்வதற்காக பொய்யாக சத்தியம் செய்து அவனை திருமணம் செய்கிறாள்.

இருவருக்கும் இடையிலான ஊடல் எப்படி கூடலாக மாறி சுபமாக முடிந்தது என்பதை தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் மென் காமமும் சார்ந்து முந்தானை முடிச்சு திரைப்படமாக பாக்யராஜ் எடுத்திருந்தார். படத்தின் காட்சிகளும் பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று  படம் வெள்ளி விழா கொண்டாடியது. இந்தத் திரைப்படமும் தமிழகம் முழுவதும் எட்டு திரையரங்குகளில் வெள்ளிவிழா ஓடி சாதனை படைத்தது.

3. சின்னத்தம்பி (1991)

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதாரவி, கவுண்டமணி, செந்தில் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் 1991இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிராமத்துப் பின்னணியில் தாய் பாசத்தை பிரதானமாகக் கொண்டு வெள்ளந்தியான இளைஞனை சுற்றி இந்தக் கதையை பி வாசு உருவாக்கியிருந்தார்.

இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்களும், கவுண்டமணியின் கலகலப்பான நகைச்சுவை காட்சிகளும் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கின. சின்னதம்பி தமிழகம் முழுவதும் எட்டு திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

4. உள்ளத்தை அள்ளித்தா (1996)

சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, ரம்பா, மணிவண்ணன், செந்தில் பிரதான வேடங்களில் நடிக்க 1996 இல் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் வெளியானது. சிவாஜியின் சபாஷ் மீனா உட்பட பல படங்களின் கதை காட்சிகளை ஒன்றாக சேர்த்து இந்தப் படத்தை சுந்தர் சி எடுத்திருந்தார்.

நகைச்சுவையும் காதலும் சரிவிகிதத்தில் இணைந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் லாபத்தை அள்ளி இறைத்த திரைப்படம் எட்டு திரையரங்குகளில் 175 தினங்கள் ஓடி சாதனை படைத்தது.

5. படையப்பா (1999)

ரஜினிகாந்த், கே எஸ் ரவிக்குமார் கூட்டணியின் படையப்பா திரைப்படம் 1999 வெளியாகி அதுவரை வெளியான அனைத்துத் திரைப்படங்களின் வசூலையும் முறியடித்தது. ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது. ரஜினியின் வயதான கெட்டப்பும், ஸ்டைலும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தன.

நாயகியாக நடித்த சௌந்தர்யாவை விட வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக பெயரும் புகழும் கிடைத்தன. இந்தத் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 8 திரையரங்குகளில் 175 தினங்களை கடைந்து ஓடி சாதனை படைத்தது.

இந்த ஐந்து திரைப்படங்கள் தவிர கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் திரைப்படம் எட்டு திரையரங்குகளில் 175 தினங்கள் ஓடியது. அதில் திருச்சி வெலிங்டன் திரையரங்கில் ஷிப்டிங் முறையில் ஓடியதால் தொடர்ந்து ஒரே திரையரங்கில் 175 தினங்கள் ஓடிய திரைப்பட வரிசையில் அதனை சேர்க்கவில்லை.

First published:

Tags: Kollywood