Yesudas: கான கந்தர்வன் யேசுதாஸ் 60..

யேசுதாஸ்

யேசுதாஸ்

Yesudas Completing 60 Years In Cinema : யேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 60 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

 • Share this:
  கேரளாவில் சென்று கான கந்தர்வன் என்றால் அது ஒருவரையே குறிக்கும், பின்னணிப் பாடகர் யேசுதாஸ். கேரளாவின் எந்த மூலையில் சென்று தாஸேட்டன் என்றாலும் அது ஒருவரையே குறிக்கும், யேசுதாஸ். மோகன்லால் சொல்வது போல் கடவுளின் சொந்த தேசத்தில் சங்கீதம் என்று சொன்னால் அவர்கள் யேசுதாஸ் என்பார்கள். அந்தளவு மலையாளிகளின் வாழ்வோடு கலந்தவை யேசுதாஸின் பாடல்கள்.

  1961 ஆம் ஆண்டு இதே நவம்பர் 14 ஆம் நாளில் யேசுதாஸ் சினிமாவில் தனது முதல் பாடலைப் பாடினார். பாடல் பதிவு நடந்தது சென்னை பரணி ஸ்டுடியோவில். இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன். கால்பாடுகள் (காலடிச்சுவடுகள்) என்ற படத்திற்காக யேசுதாஸ் தனது முதல் பாடலை பாடினார். அந்தப் பாடலின் ஆரம்பம் ஸ்ரீநாராயணகுருவின்  சாதி பேதம், மத துவேஷம் ஏதுமில்லாமல் சகலரும் சகோதரத்துவத்துடன் வாழ்கிற உதாரண தேசம்... என்ற புகழ்பெற்ற ஸ்லோகத்துடன் தொடங்கும். அந்த ஸ்லோகத்திற்கு நாமே உதாரணமாக மாறுவோம் என்று யோசுதாஸ் அன்று நினைத்திருக்க மாட்டார்.

  யேசுதாஸின் பூர்வீகம் கேரளாவில் உள்ள கொச்சி. தந்தை அகஸ்டின் ஜோசப் சாஸ்திரிய சங்கீதத்தில் நிபுணர். நாடக நடிகர். யேசுதாஸின் முதல் குருவும் அவரே. கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த யேசுதாஸ்தான் அதிகளவில் ஐயப்பன் பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவரது குரலில் ஹரிவராசனம் விஷ்வ மோகனம் பாடாமல் சபரிமலை ஐயப்பன் கண் விழிப்பதோ கண்துஞ்சுவதே இல்லை. அப்படிப்பட்டவரை சாஸ்திரத்தை காரணம் காட்டி குருவாயூர் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. கான கந்தர்வன்தான், தாஸேட்டன்தான்.. ஆனாலும், சனாதனம் அதற்கும் மேல்..

  எழுபதுகளின் இறுதியில் யேசுதாஸ் கேரளாவை நிறைக்க ஆரம்பித்தார். தமிழகத்தில் இளையராஜாவின் ஓவியம் எப்படி கேசட் கடைகளின் அடையாளமாக இருந்ததோ அதேபோல் கேரளாவில் யேசுதாஸின் படம். அவரது மெல்லிசைக் கச்சேரிக்கு எப்போதும் வழிகிற கூட்டம் உண்டு. மோகன்லால் முதலில் முகம் காட்டியது த்ரனோட்டம் படமாக இருந்தாலும், மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் படமே அவரது முதல் படமாக கருதப்படுகிறது. பாசில் இயக்கிய இந்தப் படத்தின் பல காட்சிகள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்பகுதியில் படமாக்கப்பட்டவை. அதில் யேசுதாஸின் குரலில் இடம்பெற்ற மிழியோரம் நனஞ்ஞொழுகும் முகில் மாலைகளோ.. என்ற பாடல் ஒரு கிளாஸிகல் ஹிட். இன்று அந்தப் பாடல் ஒலித்தாலும்; நின்று கேட்கிற மலையாளிகள் அனேகம். ஜெர்ரி அமல்தேவ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். 1980 ஆம் ஆண்டுக்களான சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருது அவருக்கு கிடைத்தது. யேசுதாஸும் சிறந்த பாடகருக்கான விருதை பெற்றார்

  also read : 43 வயதில் இப்படி ஒரு இளமையா ? மஞ்சு வாரியர் புகைப்படங்கள்..

  சிறந்த பின்னணிப் பாடகருக்கான கேரள அரசின் விருதை 25 முறையும், தேசிய விருதை 8 முறையும் யேசுதாஸ் பெற்றிருக்கிறார். 1987 இல் மோகன்லால் நடிப்பில் கமல் இயக்கிய படம் உண்ணிகளே ஒரு கத பறயாம். ஜான் பாலின் திரைக்கதையில் உருவான படம். இதில் வரும் உண்ணிகளே ஒரு கத பறயாம் எனத் தொடங்கும் பாடல் புகழ்பெற்றது. இந்தப் பாடலுக்கு யேசுதாஸுக்கு தேசிய விருது கிடைத்தது.

  பரதம் படத்தில் இடம்பெறும் ராமகதா மகத்தான கிளாஸிகல் பாடல். இதுவும் மோகன்லால் நடித்தது. சிபி மலையில் இயக்கம். மோகன்லால், ஊர்வசி, நெடுமுடிவேணு, கீதா என நடிகர்களை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்புக்கு கிளம்ப இருக்கையில் அவர்கள் படமாக்க இருக்கும் கதையின் சாயலில் ஒரு படம் வெளியாகிறது. மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி. இன்னும் ஒருவாரத்தில் படப்பிடிப்பு. என்ன செய்வது? அனைவரும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து புதிய கதை ஒன்றை எழுதுகிறார்கள். ரவீந்திரன் மாஸ்டர் அவசர அவசரமாக ட்யூன் கம்போஸ் செய்கிறார். கதை உருவாகிறது. கர்நாடக இசைப்பாடகனின் கதை. ரவீந்திரன் மாஸ்டரின் இசைக்கு யேசுதாஸ் பாடிய ராமகதா பாடல் உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட். படமும் வெற்றி. பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸுக்கும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது மோகன்லாலுக்கும் கிடைக்கிறது.

   

  also read: வடிவேலுடன் இணைந்து காமெடி செய்யும் ரெடின் கிங்ஸ்லி..

  மோகன்லால் - யேசுதாஸ் - ரவீந்திரன் மாஸ்டர் என்ற இந்த கூட்டணி அமைத்த பாடல்கள் பலவும் சாகாவரம் பெற்றவை. சாஸ்திரிய சங்கீதத்தில் ரவீந்திரன் மாஸ்டர் வித்தகர். யேசுதாஸ் அதில் நிபுணர். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா என்ற படம். இதுவும் சிபி மலையில் இயக்கம். திரைக்கதை லோகிததாஸ். தம்புரான் நெடுமுடிவேணுவை கொலை செய்ய அவரது உறவுக்காரர்கள் அழைத்துவரும் கொலையாளி மோகன்லால். உண்மையில் அவர் ஒரு முஸ்லீம். நம்பூதிரி என்று அரண்மனையில் தங்குகிறார். வெளியாள் அரண்மனையில் தங்குவதில் தம்புரானுக்கு உடன்பாடில்லை. தம்புரான் கொடுத்த கெடு முடிகிறது. மோகன்லால் வெளியேற வேண்டும் தம்புரானின் உறவுக்காரர்கள் ஏதாவது செய் என்று மோகன்லாலை நிர்ப்பந்திக்கிறார்கள். தம்புரானின் பலவீனம் அறிந்த மோகன்லால் ஒரு பாடலை பாடுவார். பிரமதவனம் வீண்டும் என்ற அந்தப் பாடலை வாழ்வில் ஒருமுறையேனும் ஒருவர் கேட்க வேண்டும். ரவீந்திரன் மாஸ்டர் தனது இசையிலும், யேசுதாஸ் தனது குரலிலும் அதனை காவியமாக்கியிருப்பார்கள். பாடலை கேட்கும் தம்புரான் அத்தோடு பிளாட். இங்கேயே தங்கியிரு என்பார். அதே படத்தில் சாஸ்திரிய இசையில் ஒரு போட்டிப் பாடல் உண்டு. சுமார் பத்து நிமிடங்கள் வரும். அந்தப் பாடலே ஒரு தனிக்கச்சேரி. இதன் ஒரு வெர்ஷனில் யேசுதாஸும், ரவீந்திரனும், ஷரீத்தும் பாடியிருப்பார்கள். இன்னொரு வெர்ஷனில் ரவீந்திரனுக்குப் பதில் எம்.ஜி.ஸ்ரீகுமார்

  also read : செம்ம அழகு! அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

  ஆறாம் தம்புரான் ஹார்ட்கோர் கமர்ஷியல் அடிதடி படம். சந்திரமுகி பார்த்திருந்தால் இந்தப் படத்தில் வரும் பாடலின் சிச்சுவேஷன் உங்களுக்கு தெரிந்திருக்கும். கர்னாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் நயன்தாராவை ரஜினி ஓட்டுவார் இல்லையா. சங்கீதம் குறித்து ரஜினிக்கு என்ன தெரியும் என்று நயன்தாரா லெக்சர் அடிக்க, ரஜினி பாடுவார். நயன்தாரா அசந்து போவார். இது ஆறாம் தம்புரான் படக்காட்சி. வாசு அப்படியே சுட்டு வைத்திருப்பார். ஒரே வித்தியாசம், ஆறாம் தம்புரானில் வருவது சிந்துபைரவி ராகத்தில் அமைந்த பாடல். ஹரிமுரளீரவம் எனத் தொடங்கும் அந்தப் பாடலில் நின்னேதேடி என்ற வரியில், தேடிஈஈஈ... என 16 நொடிகள் அந்த ஈயை உச்சஸ்தாயியில் நிறுத்துவார். அட்டகாசம்

  யேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 60 வருடங்கள் நிறைவடைவதையொட்டி மோகன்லால் அவரைக் குறித்து ஒரு நிகழ்ச்சி செய்துள்ளார். பாடல்களினூடே யேசுதாஸின் குரலை நினைவுகூரும் ஒரு பயணம். ஒரு பாடகனுக்கு ஒரு நடிகனின் ஆகச்சிறந்த நன்றியுரை. இதேபோல், பிரேம் நசீர், சத்யன், மது, சங்கர், மம்முட்டி என எண்ணற்ற நடிகர்கள், இசையமைப்பாளர்கள் வழியாகவும் தனித்தனியே யேசுதாஸின் பங்களிப்பை பேச முடியும். இசை ஒரு சாகரம் என்றால் அதன் முடிவுறாத அலைகளில் ஒன்று யேசுதாஸ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: