Home /News /entertainment /

முதல்வரை நேர்ல பாத்துட்டேன்... செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் பாடியது குறித்து கிடாக்குழி மாரியம்மாள்!

முதல்வரை நேர்ல பாத்துட்டேன்... செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்வில் பாடியது குறித்து கிடாக்குழி மாரியம்மாள்!

கிடாக்குழி மாரியம்மாள்

கிடாக்குழி மாரியம்மாள்

கர்ணனுக்கு அப்புறம் வாழ்க்கை கொஞ்சம் நல்லாருக்கு. நிகழ்ச்சிகள்ல பாடும் போது முன்ன விட பேமண்ட் கொஞ்சம் அதிகம் தர்றாங்க.

நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியைப் பற்றி தான் ஊரே பேச்சு. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைப்பெறவிருந்தது. ஆனால் உக்ரைன் மீதான போர் தாக்குதலில் தன் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த அந்நாட்டிற்கு, செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு நேரமில்லாமல் போனது.

ரஷ்யாவில் இல்லை என்றால், எந்த நாட்டில் செஸ் ஒலிம்பிக் போட்டி? என்ற எதிர்பார்ப்பு செஸ் ஆர்வலர்களிடையே தொற்றிக் கொண்டது. பின்னர் இந்தியாவில் நடத்துவது என முடிவானது. ஆனால் எந்த மாநிலமும் போட்டியை நடத்த முன்வராத நிலையில், பல விஷயங்களில் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழும் தமிழ்நாடு செஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டது. பொதுவாக சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய, ஒரு நாட்டிற்கு 18 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும். ஆனால் வெறும் நான்கு மாதங்களில் சர்வதேச போட்டிக்கான பெரும் ஏற்பாடுகளை செய்து, அனைவரிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

கடந்த 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. அதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள், இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி, தமிழர் வரலாறு குறித்து நடிகர் கமல் ஹாசன் குரலில் ஒலித்த தமிழ் மண், இணையத்தில் வைரல் ஹிட்டான என்ஜாய் எஞ்சாமி பாடல் என ஒலிம்பியாட் விழா களை கட்டியது.

இதில் பாடகி தீ-யுடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடலை அந்த மாபெரும் மேடையில் பாடியிருந்தார் நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மாள். கர்ணன் படத்தில் ’கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடலை பாடியிருந்தாரே? அவர் தான்.

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், 180-க்கும் மேற்பட்ட நாட்டினர், திரை நட்சத்திரங்கள் என அனைவரும் ஒன்று கூடியிருந்த சர்வதேச மேடையில் பாடிய அனுபவம் குறித்து கிடாக்குழி மாரியம்மாளிடம் கேட்டோம்...

”அந்த அனுபவம் ரொம்ப புதுமையா இருந்துச்சு. முதல்வரை எல்லாம் நாம நேர்ல பாத்துருவோமான்னு நினைச்சுட்டு இருந்தேன். இது மூலமா முதல்வரை நேரடியா பாக்குற வாய்ப்பு கிடைச்சது, பிரதமரை பாக்குற வாய்ப்பு கிடைச்சது. நான் பாத்ததை விட, அவங்க என்னை பாத்ததுல சந்தோஷம். மத்த நாட்களை விட அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

செஸ் ஒலிம்பிக் துவக்க விழா மேடைல பாடும்போது, உள்ளுக்குள்ள பயமும், பதட்டமும் நிறையவே இருந்துச்சு. என்ஜாய் எஞ்சாமி பாட்டை பாடின அறிவு வெளிநாட்ல இருந்ததால தான் தீ கூட சேர்ந்து நான் பாடினேன். இது அவருக்கு தெரியுமான்னு தெரில. தம்பி வெளிநாடு போய்ட்டாரும்மா, நீங்க பாடுங்கன்னு சந்தோஷ் சார் சொன்னாரு” என்றவர் தனது கலைப் பயணம் குறித்து மேலும் பேசினார்.“நான் 8 வயசுல இருந்தே பாடுறேன். தமிழ்நாட்ல முக்கியமான இடங்களுக்கு போய் பாடியிருக்கேன். ஆனா ஊர்கள்ல  (கிராமம்) நடக்குற நிகழ்ச்சிகள்ல பாடினது  தான் அங்கீகாரம் தந்தது. மத்தபடி பெரிய நிகழ்ச்சி எல்லாம் எனக்கு அதிகமா கிடைக்கல. நான் எதிர்பாத்து காத்திருந்த சர்வதேச மேடை எனக்கு இப்போ கிடைச்சுருக்கு.

எவ்வளவோ மேடைகளைப் பார்த்திருந்தாலும், சி.எம்மும், பி.எம்மும் சேர்ந்திருந்த மேடைல பாடுறது ரொம்பவே அரிதான வாய்ப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கூட அங்க இருந்தாங்க. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கின பாவனாவை நான் டிவி-ல கிரிக்கெட் பாக்கும் போது தான் பாத்திருக்கேன். அன்னைக்கு தான் நேர்ல பாத்தேன். நாங்க எல்லாரும் ஒரே ரூம்ல தான் சாப்பிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க - Vijay: ஏர்போர்ட் கியூ-வில் விஜய்... வைரலாகும் படம்!

சி.எம், பி.எம் எல்லாரும் வர்றாங்க, முன்னணி நடிகர்கள் கூட இருப்பாங்க, பெரிய மேடை... நீங்க பாப்பா (தீ) கூட சேந்து பாடுங்கன்னு சந்தோஷ் சார் சொன்னதும் எனக்கு பயமா இருக்குது சார்ன்னு சொன்னேன். ’நீங்க போய் பயப்படலாமான்னு?’ சந்தோஷ் சார், மீனாட்சி மேடம், தீ பாப்பா எல்லாரும் என்னை என்கரேஜ் பண்ணினாங்க. நான் கட்டியிருந்த சேலை கூட தீ, மீனாட்சி மேடம் செலக்‌ஷன் தான்.கர்ணனுக்கு அப்புறம் வாழ்க்கை கொஞ்சம் நல்லாருக்கு. நிகழ்ச்சிகள்ல பாடும் போது முன்ன விட பேமண்ட் கொஞ்சம் அதிகம் தர்றாங்க. எங்க போனாலும் என்னை அடையாளம் கண்டுக்குறாங்க. செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சி முடிஞ்சு ஊருக்கு வர்றதுக்காக, ஆலந்தூர்ல பஸ் ஏறுனேன். அங்க ஒரு ஹஸ்பண்ட்-ஒய்ஃப் என்னை பாத்துக்கிட்டே இருந்தாங்க. பேசலாமா வேணாமாங்குற தயக்கம் அவங்கக் கிட்ட இருந்தது. அப்புறம் மேடைல நான் பாடும் போது என் கம்மலை நோட் பண்ணி, ‘அம்மா உங்க கம்மலை வச்சு தான், அது நீங்கன்னு உறுதிப்படுத்திக்கிட்டோம்ன்னு’ அந்த பொண்ணு வந்து பேசுச்சு. கர்ணன் படத்துக்கு அப்புறம் எங்க போனாலும் ஈஸியா அடையாளம் கண்டு பிடிச்சிடுறாங்க. செல்ஃபி எல்லாம் எடுத்துக்குறாங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிடாக்குழி மாரியம்மாளிடம் தற்போது பாடியிருக்கும் பாடல்கள் குறித்து கேட்டோம்.

”இப்போ யுவன் சார் கிட்ட ஒரு பாட்டு பாடியிருக்கேன். விஷ்ணு விஷால் படம், சந்தானம் படம் மற்றும் கருணாஸ் படத்துலயும் பாடியிருக்கேன். பொதுவா நான் படம் பேரெல்லாம் கேட்டுக்குறது இல்ல. கர்ணன் படத்துல பாடும் போது கூட எனக்கு படம் பேரு தெரியாது. எங்க பிள்ளைங்க தான், தனுஷ் படத்துல பாடியிருக்கீங்க அம்மான்னாங்க. ஏய்.. போங்கப்பா, நான் போய் அவரு படத்துல பாட முடியுமான்னு கேட்டேன். பாட்டு வந்ததும் தான் நானே நம்புனேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனியும் இதே மாதிரி பெரிய வாய்ப்புகள் வரணும்ன்னு காத்திருக்கேன் என்றவர், அரசு அங்கீகாரம் தர்ற ’கலைமாமணி’ விருது வாங்கணும்ங்கறது தான் என்னோட ஆசை” என தன்னுடைய பெருங்கனவை வெளிப்படுத்தினார்.

கிடாக்குழி மாரியம்மாளின் கனவு நனவாக வாழ்த்தி விடைபெற்றோம்!
Published by:Shalini C
First published:

Tags: Chess Olympiad 2022, Tamil Cinema

அடுத்த செய்தி