கீர்த்தி சுரேஷ் கடைசியாக ஈஸ்வர் கார்த்திக்கின் இயக்கத்தில் 'பெண்குயின்' என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது வரவிருக்கும் படமான 'குட் லக் சகி' படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் கீர்த்தி தனது ட்விட்டரில் தனது கதாபாத்திரமான "சகி" தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் லக் சகி' கொரோனா ஊரடங்கின் முன்பே தொடங்கப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படத்தின் முக்கிய பகுதிகளை விகராபாத் மற்றும் புனேவில் எடுத்துள்ளனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் படத்தின் மூன்று மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. கீர்த்தி சுரேஷ் உடன் இந்தப் படத்தில் பணியாற்றிய பிரபல ஸ்டைலிஸ்டும், வடிவமைப்பாளருமான 'ஷ்ரவ்ய வர்மா', செப்டம்பர் 6-ம் தேதி படம் முழுவதுமாக முடிவு பெறுகிறது என்பதை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு 'ஷ்ரவ்யா'வின் பதிவை ரி ட்வீட் செய்த கீர்த்தி சுரேஷ், " 'குட் லக் சகி' எனக்கும் சிறப்பான படம்" என்றும், "இந்த அருமையான குழுவிற்கு மிக்க நன்றி! உங்கள் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. சகி, என்றென்றும் எந்தன் ஒரு பகுதி!" என்று பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று குட் லக் சகியின் டீஸர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளத்திலும் அதிகளவிலான கவனத்தை ஈர்த்தது. இந்த டீசரை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் பிரபாஸ், "'குட் லக் சகி' படத்தின் முழு குழுவிற்கும் எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த படத்தில், கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரமான சகி, அதிர்ஷ்டம் இல்லாத பெண் கதாபாத்திரமாக காணப்படுகிறார்.
மேலும் அவரது வருங்கால கணவர் திருமணத்திற்கு முன்னதாக ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். பின்னர் அவர் தேசிய அளவில் ஒரு சிறந்த துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்.
இதில் கீர்த்தி சுரேஷ் உடன் ஆதி பினிசெட்டி, ஜெகபதி பாபு, ராகுல் ராமகிருஷ்ணா, ராம பிரபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.