பணம் வாங்கிவிட்டு படம் இயக்க மறுப்பதாக லிங்குசாமி மீது ஞானவேல்ராஜா புகார்

ஞானவேல் ராஜா - லிங்குசாமி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலை வைத்து லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி 2 சுமாராகவே போனது.

 • Share this:
  அட்வான்ஸாக பெரும் பணம் வாங்கிவிட்டு, எங்களுக்கு படம் இயக்கி தராமல் தெலுங்குப் படம் இயக்குகிறார் என இயக்குனர் லிங்குசாமி மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார்.

  எப்போது உத்தம வில்லன் படத்தை தயாரித்தாரோ அப்போதே வேதாளமாக பிரச்சனைகள் லிங்குசாமி தோளில் தொங்க ஆரம்பித்தன. உத்தம வில்லனை வெளியிட சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்த ரஜினி முருகன் படத்தை பணயம் வைத்தார். நண்பர்களிடம் மானாவரியாக கடன் வாங்கினார். அந்த நேரத்தில் லிங்குசாமிக்கு கை கொடுத்தவர்களில் ஞானவேல்ராஜாவும் ஒருவர். வாங்கிய பணத்துக்கு எங்களின் ஸ்டுடியோ கிரீனுக்கு படம் இயக்கித்தர வேண்டும் என்று கூறியிருப்பார் போலிருக்கிறது. இங்குதான் மாட்டிக் கொண்டார் லிங்குசாமி.

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலை வைத்து லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி 2 சுமாராகவே போனது. தமிழில் அடுத்தப்பட வாய்ப்பு சிக்கலாக தெலுங்கில் ராம் பொத்னியேனியை வைத்து ஒரு படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டார். நேற்றுதான், 'படத்தின் இறுதி கதையை கேட்டேன். லிங்குசாமி சார் ஐ லவ் யூ. சூப்பர் டூப்பர்' என்று ராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்குள் பிரச்சனை ஞானவேல்ராஜா வடிவில் கதவை தட்டியிருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வாங்கிய அட்வான்சுக்கு எங்களுக்கு முதலில் படம் பண்ணித்தர வேண்டும். அதுவரை லிங்குசாமி படம் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என பல இடங்களில் புகார் தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா. தெலுங்கு ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஷின் தலைவர் இது குறித்துப் பேசுகையில், ஞானவேல்ராஜா எங்கள் சங்கத்து உறுப்பினர் கிடையாது. அதனால், நாங்கள் லிங்குசாமிக்கு தடை விதிக்க முடியாது. அவர் தென்னிந்திய ஃபிலிம் சேம்பரில் வேண்டுமானால் புகார் செய்யட்டும் என்று பதிலளித்துள்ளார்.

  லிங்குசாமி ராமை வைத்து படம் இயக்க முடியுமா முடியாதா என்பது ஒருபுறம் இருக்க, நண்பர்களாக இருந்தவர்கள் இடையே புகார் அளிக்கும் அளவுக்கு விரிசல் விழுந்திருப்பதுதான் லிங்குசாமி, ஞானவேல்ராஜா இருவருக்கும் பொதுவான நண்பர்களின் வருத்தமாக உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: