பாலா இயக்கத்தில் 2001-ம் ஆண்டு வெளிவந்த நந்தா படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானர் கருணாஸ். அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் மக்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்தின் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகராக உருவெடுத்தார். தொடர்ந்து காமெடி நடிகராக நடித்துவந்த அவர், 2008-ம் ஆண்டு
திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் கதாநாயகராக உருவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன்பின்னர், படங்களில் நடிப்பதைக் குறைத்த கருணாஸ், அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்திய அவர், 2016-ம் ஆண்டு அ.தி.மு.க கட்சி சார்பில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவு, அ.தி.மு.கவிலிருந்து சசிகலா வெளியேற்றத்துக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார் கருணாஸ்.
இந்தநிலையில், சினிமாவில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும், வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றவுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருடைய அறிவிப்பில், ‘கிராமிய கானா பாடகராக என் கலைவாழ்வைத் தொடங்கி இருந்தாலும் இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய் மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன்.
Jollyo Gymkhana: விஜய் குரலில் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். கடைசிவரை கற்றுக்கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக்கொண்ட வெற்றிக்கு என் நன்றி. தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் தமிழர் வீரத்தைப் பறைசாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிவதில் பெருமை கொள்கிறேன். போலி வியாபரா அரசியலை புறந்தள்ளிவிட்டு எனது கலைத்தாய் வீட்டுக்கு திரும்பி இருக்கிறேன். எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடி வாசலே வாசல் திறந்துவிட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.