தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பைத் தாண்டி பாடல் பாடுவது, இசையமைப்பது ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள், இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் சிம்பு முதல்முறையாக கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தில் ‘யாரையும் இவ்ளோ அழகா’ என்ற பாடலை பாடியுள்ளார்.
விவேகா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். ஏற்கெனவே ‘சண்டையில கிழியாத சட்டை இல்ல’ என்ற ‘சுல்தான்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் இரண்டாவதாக சிம்பு பாடியிருக்கும் பாடலை இன்று மாலை வெளியிட உள்ளது படக்குழு. கார்த்தியின் பாடலை சிம்பு பாடியிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ராஷ்மிகா மந்தனா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 5, 2021
ஏப்ரல் இரண்டாம் தேதி ‘சுல்தான்’ திரையரங்கில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கார்த்தி.