மாஸ்டர் படத்தின் வசூல் வேட்டைக்கு பின் தமிழகத் திரையரங்குகள் காற்று வாங்கி வந்த நிலையில் அந்தக் குறையை கார்த்தியின் சுல்தான் திரைப்படம் போக்கி உள்ளது.
மீண்டும் அதிகரித்த கொரோனா பரவல், அனல் பறக்கும் தேர்தல் களம் என பல நெருக்கடிகள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான கார்த்தியின் சுல்தான் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏற்கனவே பார்த்துப் பழகிய காட்சி அமைப்புகளால் இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவை வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் செய்த இப்படம் மூன்று நாட்களில் ரூ.16 கோடி வரை வசூல் செய்து கார்த்தியின் கேரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் தமிழில் மாஸ்டருக்கு பின் பெரிய ஓப்பனிங் பெற்ற படமாகவும் சுல்தான் உருவெடுத்துள்ளது.
ஒரு பக்கம் சுல்தான் என்றால் இன்னொரு பக்கம் ஹாலிவுட் படமான காட்ஸில்லா vs காங் படமும் தமிழில் சக்கை போடு போட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவே கொரோனா அச்சத்தால் துவண்டு போயிருந்த திரைத் துறையினருக்கு காட்ஸில்லா vs காங் படத்தின் வெற்றி புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க ரூ.1500 கோடிவரை வசூல் செய்திருக்கும் இப்படம் இந்தியாவில் ரூ.40 கோடிக்கு அதிகமாகவும் இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் ரூ.18 கோடி வரையும் வசூல் செய்து மிரட்டியுள்ளது.
இப்படி சுல்தான், காட்ஸில்லா vs காங் படங்கள் மிரட்டிக் கொண்டிருக்கும் சூழலில் வரும் வாரம் தனுஷின் கர்ணன் படமும் திரைக்கு வருவதால் துவண்டு போயிருந்த திரைத்துறையினர் மீண்டும் உற்சாகம் அடைய தொடங்கியுள்ளனர்.