மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வந்த இத்திரைப்படம் ஒருபக்கம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. இந்நிலையில் 1997-ல் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கொடியன்குளம் கலவரம் நடந்ததாக கர்ணனில் காண்பிக்கப்படுகிறது எனவும், இது வரலாற்றை திரித்து கூறும் செயல் எனவும் சில விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்தது சமூகவலைதளங்களில் பேசுபொருளானது
இந்நிலையில் இதுகுறித்து நேற்று ட்வீட் செய்திருந்த திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், “‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்று குறிப்பிட்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இயக்குநர் மாரி செல்வராஜுடன் பேசியதைத் தொடர்ந்து படத்தில் குறிப்பிடப்பட்ட ஆண்டு 90-களின் பிற்பகுதியில் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnan, Kollywood, Mari selvaraj, Udhayanidhi Stalin