ஒன்றிரண்டு வெற்றிப் படங்களை தவிர்த்துப் பார்த்தால், கடந்த சில வருடங்களாக இந்தி பாக்ஸ் ஆபிஸ் கலகலத்துப் போயுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்களின் படங்களும் ஓடுவதில்லை. அமீர் கான், சல்மான்கான் படங்கள் வெளியான முதல் நாளில் அனாயாசமாக 30 கோடிகளைத் தாண்டும். ஆனால் இப்போது ஒற்றை இலக்கத்தைத் தாண்டவே சிரமப்படுகின்றன. இந்த மாற்றம் ஏன், இந்தித் திரையுலகம் தொடர் தோல்விகளிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்தியில் ஒரு படம் வெற்றி பெற்றால், அந்த ஜானரிலேயே தொடர்ச்சியாக படங்கள் எடுப்பது, வாழ்க்கைக்கு மீறிய கற்பனை, சொந்த மண்ணைவிட்டு வெளிநாடுகளில் கதைக்களத்தை அமைப்பது என பல்வேறு விஷயங்களை இந்திப் படங்கள் ரசிகர்களை கவராமல் போனதற்கு காரணமாக கூறுகிறார்.
காந்தாரா, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் அந்தந்த மொழி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டு, அதன் சர்வதேசத்தன்மையான கதை மற்றும் தரத்தினால் பான் இந்தியா திரைப்படமாக பரிணமித்தன. ஆனால், முதலிலிலேயே பான் இந்தியா திட்டத்துடன் ஒரு படத்தை எடுக்கையில் அது யாருக்கும் பொருந்தாமல் எல்லாத் தரப்பு மக்களாலும் புறக்கணிக்கப்படுகிறது.
முப்பது வருடங்களுக்கு முன் மணிரத்னத்தின் ரோஜா மாநில எல்லைகளைக் கடந்து அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு இதுபோல் சிக்கல் எழுந்தது. அனைத்து மொழி மக்களுக்கும் பொதுவான கதைக்களத்தை நோக்கி போக ஆரம்பித்தார். அதில் பாம்பே வெற்றி பெற்றது. உயிரே மோசமான தோல்வியை தழுவியது. அதிலிருந்து மீள மணிரத்னம் முழுக்க தமிழ் பிராந்தியத்தை நம்பி அலைபாயுதே எடுக்க வேண்டியதானது.
இந்தியில் சாதாரணப் படங்களும் நியூசிலாந்து, லண்டன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் என வெளிநாடுகளில்தான் படமாக்கப்படுகின்றன. சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட விக்ரம் வேதா இந்திக்குப் போன போது அதில் வெளிநாட்டுக் காட்சிகள் சேர்க்கப்பட்டன. விக்ரம் வேதாவில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட அமீர்கான், கொரோனாவால் படத்தை ஹாங்காங்கில் ஷுட் பண்ண முடியாது என்பதால்தான் அதிலிருந்து விலகினார். அந்நிய நிலத்தில் நமது கதையை சொல்லும் போது அது ரசிகர்களுக்கு ஒட்டாமல் போகிறது. அதேநேரம் நமது நிலத்தில் ஒரு கதையை ரத்தமும், சதையுமாக சொல்லும் போது அது இந்தியா முழுமைக்கும் பிடித்துப் போகிறது.
பாலிவுட் பிரச்சனை குறித்து கருத்து கூறியிருக்கும் ராஜமௌலி, கார்ப்பரேட்டுகள் கலைஞர்களுக்கு அதிக சம்பளம் தருவதால் அவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற பசி இல்லாமல் போய்விடுகிறது என்கிறார். பார்வையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப படம் எடுப்பதே வெற்றிக்கான வழி என கூறியிருக்கும் அவர், தென்னிந்திய சினிமாவில் கிடைத்திருக்கும் வெற்றியைப் போன்ற ஒரு சூழல் இந்தி திரையுலகுக்கும் ஏற்பட வேண்டுமென்றால் அவர்கள் இன்னும் அதிகமாக நீந்த வேண்டும், இல்லையேல் மூழ்கிவிடுவார்கள் என கூறியுள்ளார்.
Also read... மூவரின் ஏமாற்றத்தில் உருவான எம்ஜிஆரின் ஒரு தாய் மக்கள்!
இந்த இரு இயக்குனர்களும் கூறியிருப்பவை கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சனைகள். அதேநேரம், மதரீதியாக இந்தித் திரையுலகில் நீண்ட பிளவு ஏற்பட்டுள்ளது. மத அரசியலை முன்வைத்து பலரது படங்கள் ஒதுக்கப்படுகின்றன. அந்தப் படங்களை யாரும் திரையிடக் கூடாது, பார்க்கக் கூடாது என மறைமுகமாக அச்சுறுத்தப்படுகின்றனர். பாய்காட் பாலிவுட் என்ற கோஷம் ஒருசில நடிகர்கள், இயக்குனர்களை முன்வைத்து பிரமாண்ட கும்பல் ஒன்றால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இதனை இவ்விரு இயக்குனர்களும் குறிப்பிடவில்லை. அதைச் சுட்டிக் காட்டினால் அவர்களது படங்களும் இந்த கும்பலால் டார்கெட் செய்யப்படும் என்பது இருவருக்குமே தெரியும்.
இந்தி சினிமா யதார்த்தத்துக்கு இறங்கி வர வேண்டும், மத அடிப்படையிலான வெறுப்புணர்வு நீங்க வேண்டும். இந்த இரண்டும் நடந்தால் பாலிவுட் பழைய பெருமையை மீண்டும் பெறும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.