தான் நடித்த திரைப்படங்களின் இயக்குனர்கள் எவரும் இயக்குநர் ஏ.எல்.விஜய் அளவிற்கு மரியாதையாக தன்னை நடத்தியதில்லை எனக்கூறி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கண்கலங்கினார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தலைவி திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்னா ரனாவத், எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் இன்று கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கங்னா ரனாவத், அரவிந்த்சாமி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர் ஏ.எல். விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கங்கனா ரணாவத், “ தலைவி திரைப்படத்திற்காக முதலில் தன்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியதாகவும் பிறகு இயக்குனர் விஜய் தன்னை ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு முக்கியமானது என குறிப்பிட்டார்.
அதோடு பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தனக்கு கொடுக்கப்பட்டது இல்லை எனவும் தலைவி படத்தில் இயக்குநர் விஜய் தன்னை மரியாதையுடன் நடத்தியதாகவும் குறிப்பிட்டு மேடையிலேயே கண் கலங்கினார்.
விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாகுபலி படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.