எம்.ஜி.ஆர் கெட்டப்புகளில் திரையில் தோன்றும் விஜய்... அடைமொழிகளால் அடிக்கடி ஷாக் கொடுக்கும் ரசிகர்கள்..

போஸ்டர்

மதுரையைத் தொடர்ந்து தற்போது சென்னை சுவர்களில் விஜய்யை எம்.ஜி.ஆர் அவதாரம் எடுக்க வைத்துள்ளனர் அவரது தீவிர ரசிகர்கள்.

  • Share this:
திரைப்பட நடிகர்கள் ரசிகர்கள் தங்களை மறந்து விடாமல் இருக்க எத்தனையோ முயற்சிகளை தினம் தினம் எடுத்து வருகிறார்கள். அதுவே நடிகர்கள் அரசியலுக்கு வரும் சூழல் உருவாகி விட்டால், கட்சி தொடங்கி பதவி வழங்கும் போது நடிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக ரசிகர்கள் செய்யும் பிரயத்தன முயற்சிகள் காண்போரை பலமுறை சத்தமாக சிரிக்க வைத்து விடுகிறது.

அந்தவகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் மதுரையில் துவங்கி வைத்த போஸ்டர் கலாச்சாரம் தற்போது தமிழகமெங்கும் கிளைபரப்பி சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் நாடே பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் அடங்கிக் கிடக்க விஜய்யின் திருமண நாளை, பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்த விஜய் ரசிகர்கள் விஜய் உருவத்தை எம்.ஜி.ஆர் ஆக சித்தரித்து புரட்சித்தலைவர் எனவும், விஜய்யின் மனைவி சங்கீதா உருவத்தை ஜெயலலிதாவாக சித்தரித்து புரட்சித்தலைவி எனவும் போஸ்டர் ஒட்ட இந்த போஸ்டர்கள் மதுரையில் உள்ள அதிமுக தொண்டர்களை ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்தன.இந்த போஸ்டர் பரபரப்பைக் கிளப்பியதால் இதனை ஒட்டிய கில்லி சிவாவை எச்சரித்துவிட்டனர் விஜய் மக்கள் மன்றத்தினர். அதிமுகவை ஆச்சரியப்படுத்திய கையோடு பாஜாகவையும் பதற வைத்தார்கள் விஜய் மதுரை விஜய் ரசிகர்கள். காவி உடையில் விஜய் விவேகானந்தர் தோற்றத்தில் இருக்கும் போஸ்டர்கள் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையில் நாளைய தமிழகமே, நாளைய முதல்வரே போன்ற போஸ்டர்களும் விஜய் ரசிகர்களின் கைவண்ணத்தில் அவ்வப்போது மதுரை குட்டி சுவர்களை அலங்கரித்தது. மதுரையை புரட்டியெடுத்த போஸ்டர் கலாச்சாரம் தற்பொழுது சென்னைக்கு புறப்பட்டு வந்து விட்டது. சென்னை காஞ்சிபுரம் எல்லையில் ஒட்டப்பட்டுள்ள மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக என்ற போஸ்டர்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி எம்.ஜி.ஆர் போட்ட கெட்டப்புகளில் விஜய்யை வைத்து உருவாக்கியுள்ள இந்த தோற்றங்கள் கடந்து செல்வோரை ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்க வைக்கின்றன.மெர்சல் திரைப்படம் தொடங்கி அண்மையில் வெளியான பிகில் திரைப்படம் வரை விஜய் தன்னை ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராகவும், தன்னைத்தானே வாத்தியார் எனவும் அழைத்துக்கொள்ளும் சூழலில் அவரது ரசிகர்களும் விஜய்யை அப்படியே அழைத்து குஷிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: