Home /News /entertainment /

பலவீனத்தை மறைத்த கமலின் மறதி ஒரு தேசிய வியாதி வசனம்

பலவீனத்தை மறைத்த கமலின் மறதி ஒரு தேசிய வியாதி வசனம்

கமல்

கமல்

உன்னைப்போல் ஒருவன் சென்னையை மையப்படுத்திய திரைப்படம். இங்கு மும்பை போல் குண்டு வெடிப்பு நடந்ததில்லை. அதனால், எப்போதோ நடந்த, அனைவரும் மறந்துவிட்ட ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தி கமல் பேசியிருப்பார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கமலின் உன்னைப்போல் ஒருவன் 13 வருடங்களுக்கு முன், 2009, செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியானது. அதாவது நேற்று படம் 13 வருடங்களை நிறைவு செய்தது.

உன்னைப்போல் ஒருவன் 2008 இல் வெளியான ஏ வெட்னெஸ்டே இந்திப் படத்தின் தமிழ் ரீமேக். அதில் நஸ்ருதீன் ஷா நடித்த வேடத்தில் கமலும், அனுபம் கேர் நடித்த வேடத்தில் மோகன்லாலும் நடித்தனர். தெலுங்குப் பதிப்பில் கமல் அதே வேடத்தைச் செய்ய, வெங்கடேஷ் மோகன்லாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தார்.ஒரு சாதாரண நபர் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் பயங்கர குற்றவாளிகளை விடுக்க அரசுக்கு நெருக்கடி கொடுத்து, அவர்களை விடுதலை செய்ததும், அவர்களை கொலை செய்வதுதான் படத்தின் ஒன் லைன். குற்றவாளிகளை அந்த நபர் கொலை செய்வதுவரை, இவர் அவர்களை காப்பாற்றுவதைப் போலவே தோன்றும். இந்த ட்விஸ்டும், அதற்கு அந்த நபர் சொல்லும் காரணமும் இந்திப் படத்தில் அழுத்தமாகவும், பொருத்தமாகவும் இருக்கும். தமிழில் அந்த விஷயத்தை பூசி மெழுக கமல் முயற்சி செய்திருப்பார். அந்த இடத்தில்தான், மறதி ஒரு தேசிய வியாதி என்ற வசனம் வரும்.ஏ வெட்னெஸ்டே நீரஜ் பாண்டேயின் முதல் படம். 2006 செப்டம்பர் 11, புதன் கிழமை மும்பை ரயலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை மையப்படுத்தி இந்தப் படத்தை அவர் எடுத்தார். படம் வெளியானது 2008 இல். குண்டு வெடிப்பு நடந்து இரண்டு வருடங்களில் எடுக்கப்பட்ட படம் என்றதால் அந்த சம்பவம் ஏற்படுத்திய வடு அம்மக்களின் நெஞ்சில் ஆறாமல் இருந்தது. அதனால், குற்றவாளிகளை ஏன் கொலை செய்தேன் என நஸ்ருதீன் ஷா சொல்லும் போது, கண்கள் கலங்க மக்கள் ஏற்றுக் கொண்டனர்.நான் தினமும் சிலரை ரயிலில் பார்ப்பேன். அதில் ஒரு இளைஞன் புன்னகை செய்வான். ஒருநாள் தனது மோதிரத்தை உயர்த்திக் காட்டினான். அவனுக்கு திருமணம் நிச்சயமாயிருந்தது. அந்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. மறுநாள் நான் அந்த ரயிலில் போகவில்லை (அன்றுதான் குண்டு வெடித்தது). அதற்கு அடுத்த நாள் நான் சென்ற போது எனக்குத் தெரிந்த ஒருவர்கூட அந்த ரயிலில் இல்லை. முக்கியமாக நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டிய அந்த இளைஞன் இல்லை என்பார் நஸ்ருதீன் ஷா. தினசரி அவருடன் பயணித்த அனைவரும் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருப்பார்கள். இந்த சுருக்கமானப் பேச்சு, இழப்பின் வலியை பார்வையாளர்களிடம் கடத்தியதுடன், அவர் குற்றவாளிகளை  கொல்வதற்கான நியாயத்தையும் தந்தது.உன்னைப்போல் ஒருவன் சென்னையை மையப்படுத்திய திரைப்படம். இங்கு மும்பை போல் குண்டு வெடிப்பு நடந்ததில்லை. அதனால், எப்போதோ நடந்த, அனைவரும் மறந்துவிட்ட ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்தி கமல் பேசியிருப்பார். 'அது யாருக்கு நினைவுல இருக்கப் போகுது' என்று விமர்சனம் எழுதுகிறவர்களை தடுக்க, கமல் வைத்த டிபென்ஸ்தான், மறதி ஒரு தேசிய வியாதி வசனம். கூடவே குஜராத் கலவரக் காட்சிகளையும் சுட்டிக் காட்டி பேசியிருப்பார். ஆனால், இவையெல்லாம் அவர் கொலை செய்த குற்றவாளிகளுக்கோ, அவர்களின் செயல்களுக்கோ நேரடி சம்பந்தம் இல்லாததவை. ஏன், அவருக்குமேகூட நேரடி தொடர்பு இல்லாதது. அதனால், அவர் சொன்ன காரண காரியங்கள் ஒட்டாமல்  அறுந்த பட்டமாக அல்லாடியது. இந்த பலவீனத்தை  திரைக்கதை, வசனம், நடிப்பு என பிற விஷயங்களை கொண்டு கமல் மறக்கடித்து, படத்தை வணிக வெற்றியாக்கினார்.

நாம் சிறந்த வசனம் என நினைப்பது பலநேரங்களில் பலவீனத்தை மறைக்கும்  சமாளிப்பு வசனங்களாக இருக்கும். உன்னைப்போல் ஒருவன் வசனம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kamal Haasan

அடுத்த செய்தி