ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளிக்கு அதிக வெள்ளி விழா படங்கள் தந்த கமல்ஹாசன் - எந்தெந்த படம் தெரியுமா?

தீபாவளிக்கு அதிக வெள்ளி விழா படங்கள் தந்த கமல்ஹாசன் - எந்தெந்த படம் தெரியுமா?

அவ்வை சண்முகி

அவ்வை சண்முகி

சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பிறகு இணையத்தில் தீபாவளி விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தன. இந்தமுறை, தீபாவளியில் யார் அதிக வெள்ளிவிழாப் படங்கள் தந்தது என்ற விவாதம் நடந்தது. இந்த சூப்பர் சீனியர் விளையாட்டுக்களில் வழக்கம் போல் சீனியர்களான விஜய், அஜித் ரசிகர்கள் ஒதுங்கிக் கொள்ள, கமல் - ரஜினி ரசிகர்கள் களம் கண்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பட்டாசு, பலகாரம், புத்தாடையுடன் திரைப்படமும் தீபாவளிக்கு முக்கியம். புதிய திரைப்படங்கள் வெளியாகாத தீபாவளி தமிழர்களுக்கு குறை தீபாவளி. 90கள்வரை தமிழ் திரையுலகம் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. முன்னணி நட்சத்திரங்களில் குறைந்தது நான்கு பேருடைய படங்களாவது தீபாவளிக்கு வெளியாகும். இன்று இரண்டு படங்களே அதிகபட்சமாகிவிட்டன.

சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பிறகு இணையத்தில் தீபாவளி விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தன. இந்தமுறை, தீபாவளியில் யார் அதிக வெள்ளிவிழாப் படங்கள் தந்தது என்ற விவாதம் நடந்தது. இந்த சூப்பர் சீனியர் விளையாட்டுக்களில் வழக்கம் போல் சீனியர்களான விஜய், அஜித் ரசிகர்கள் ஒதுங்கிக் கொள்ள, கமல் - ரஜினி ரசிகர்கள் களம் கண்டனர்.

வெற்றி சதவீதத்தை பொறுத்தவரை இருவருமே சம பலத்துடன் உள்ளனர். ரஜினி நூலிழையில் முன்செல்வார். தீபாவளிக்கு வெளியான படங்களில் அதிக வெள்ளி விழா படங்களை தந்தது யார்? இந்த கேள்விக்கான பதிலை தேடிய போது 7 வெள்ளிவிழா படங்களுடன் கமல் முன்னிலையில் இருந்தார்.

1. சிகப்பு ரோஜாக்கள்

1978 தீபாவளியை முன்னிட்டு - தீபாவளிக்கு மூன்று நாள்கள் முன்பு அக்டோபர் 28 ஆம் தேதி சிகப்பு ரோஜாக்கள் வெளியானது. பாக்யராஜ் கதை, வசனத்தில் பாரதிராஜா இயக்கிய இந்தத் த்ரில்லர் திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றும் தமிழகத்தில் 200 நாள்களை கடந்து ஓடியது. 16 வயதினிலே படத்துக்கு முற்றிலும் மாறுபட்ட சிகப்பு ரோஜாக்களின் கதையும், அதனை படமாக்கியவிதமும் அந்தக் காலகட்டத்தில் வியந்து பாராட்டப்பட்டது.

2. தூங்காதே தம்பி தூங்காதே

1983 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 தூங்காதே தம்பி தூங்காதே வெளியானது. ஏவிஎம் தயாரிப்பில், பஞ்சு அருணாச்சலத்தின் எழுத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படம் 275 நாள்கள் ஓடி ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

3. நாயகன்

1987 அக்டோபர் 21 தீபாவளியை முன்னிட்டு நாயகன் வெளியானது. உடன் வெளியானது மனிதன். வழக்கமான ஹீரோயிச படம் என்பதால் மனிதன் பாக்ஸ் ஆபிஸில் சட்டென்று டாப்கியரில் எகிறியது. நாயகன் கல்ட் கிளாஸிக். சி சென்டர்களில் திணறிய படம் மெல்ல சூடுபிடித்து, ஒருகட்டத்துக்கு மேல் லாபத்தை சம்பாதித்ததுடன் 175 நாள்கள் ஓடி சாதனையும் படைத்தது. இந்தப் படம் கேரளாவில் 50 தினங்களுக்கு மேலும், ஆந்திரா, கர்நாடகாவில் 100 நாள்களை கடந்தும் ஓடியது.

4. மைக்கேல் மதன காம ராஜன்

இந்திய அளவில் சிறந்த 10 நகைச்சுவைப் படங்களை தேர்வு செய்தால் அதில் மைக்கேல் மதன காம ராஜன் படம் இடம்பெறும். இதன் சிறப்பு, வேறு எந்த இந்திய நடிகராலும் இந்தப் படத்தை ரீமேக் செய்து நடித்துவிட முடியாது என்பதுதான். 1990 அக்டோபர் 17 தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 175 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

5. தேவர் மகன்

1992 தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 இதே நாளில் தேவர் மகன் வெளியானது. போட்டிக்கு ரஜினியின் பாண்டியன். ரஜினி படம் சுமாராகப் போக மூன்று சென்டர்களிலும் தேவர் மகன் பட்டையை கிளப்பி 200 நாள்களுக்கு மேல் ஓடி ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

6. அவ்வை சண்முகி

நடிகர், இயக்குநர் பாலசந்திர மேனனின் அம்மையாண சத்தியம் படத்தால் ஈர்க்கப்பட்டு, அந்தப் படத்தை கண்டேன் சீதையை என்ற பெயரில் எடுக்க முயன்றார் கமல். அந்த முயற்சி ஆரம்பத்திலேயே தடைபட்டு பல வருடங்களுக்குப் பிறகு அவ்வை சண்முகியாக நிறைவேறியது. அதில் நாயகி ஆண் வேசம் போடுவார். அவ்வை சண்முகியில் நாயகன். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1996 நவம்பர் 10 தீபாவளிக்கு வெளியான படம் 175 தினங்களை கடந்து ஓடி சாதனைப் படைத்தது.

7. தெனாலி

இதுவும் கே.எஸ்.ரவிக்குமார் படம். ஈழத்தமிழர்களின் வலியை நகைச்சுவை கலந்து சொன்னவிதத்தில் தெனாலி மாபெரும் வெற்றியை பெற்றது. கமல் அளவுக்கு ஜெயராமும் நகைச்சுவையில் பின்னியிருந்தார். 2000 அக்டோபர் 27 தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் வெள்ளி விழா கண்டது.

Also read... ஸ்டைலா... கெத்தா... வேட்டி சட்டையில் கலக்கும் கமல்... வைரலாகும் போட்டோஸ்!

முன்பு ஒரு படம் 100 நாள்கள், 200 நாள்கள் ஓடுவது சாதாரணம். இன்று இன்டஸ்ட்ரி ஹிட்டாகும் படங்களே 75 நாள்களுடன் நுரைதள்ளி நின்றுவிடுகின்றன. அதனால், தீபாவளிக்கு வெளியான படங்களில் அதிக வெள்ளி விழா படங்கள் தந்தவர் என்ற சாதனையை வருங்காலத்தில் யாரும் முறியடிக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kamal Haasan