முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சம்பளமே வாங்காமல் நடித்த ரஜினி.. இடுப்பு எலும்பு உடைந்தும் ஷூட்டிங் வந்த கமல்.. சினிமா கலைஞர்களுக்காக உழைத்த நடிகர்கள்!

சம்பளமே வாங்காமல் நடித்த ரஜினி.. இடுப்பு எலும்பு உடைந்தும் ஷூட்டிங் வந்த கமல்.. சினிமா கலைஞர்களுக்காக உழைத்த நடிகர்கள்!

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

தயாரிப்பாளர் வி.ஏ.துரை சிறுநீரகம் பழுதடைந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்கு பணமில்லாமல் ரஜினியிடம் உதவி கோரியுள்ளார். ரஜினியும், நானும் 40 ஆண்டுகால நண்பர்கள் என அதில் அவர் தெரிவித்துள்ளார். வி.ஏ.துரைக்கு இதற்கு முன்பும் ரஜினி உதவியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்களுடன் பணிபுரியும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள் என பலருக்கும் பெரிய நட்சத்திரங்கள் உதவி செய்திருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் தொடங்கி இந்தப் பட்டியல் நீளமானது. அதற்கு முன் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமா சாராதவர்களுக்கும் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். வி.ஏ.துரை ரஜினியிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டது பாண்டியன் படத்தில்.

ரஜினியை வைத்து அதிக படங்கள் மற்றும் வெற்றிப் படங்கள் தந்தவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினியை வைத்து மட்டும் 25 படங்கள் இயக்கியுள்ளார். வருடத்தில் இரண்டு, மூன்று படங்கள்கூட இவரது இயக்கத்தில் ரஜினி நடித்ததுண்டு. அவர் தொடர்ச்சியாக படங்கள் இயக்கியதால், அவரது யூனிட்டில் உள்ளவர்கள் பிற யூனிட்டில் வேலை செய்வதில்லை. அப்படி 14 பேர் கொண்ட ஒரு குழு எஸ்.முத்துராமனிடம் இருந்தது. இதில் கேமராமேன் விநாயகம், எடிட்டர் விட்டல், மேக்கப்மேன் முஸ்தபா உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். இதேபோல் உதவி, இணை, துணை இயக்குனர்களும் உண்டு.

தன்னுடன் தொடர்ந்து பயணித்த இந்தக் கலைஞர்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பிய எஸ்.பி.முத்துராமன், விஷயத்தை ரஜினியிடம் சொல்லி,  தனக்காக ஒரு படம் நடித்துத்தர கேட்டார். அப்படி உருவானதுதான் பாண்டியன் திரைப்படம். அதற்கு முன் எஸ்.பி.முத்துராமன் படம் தயாரித்ததில்லை. பாண்டியனுக்காக தனது தாயார் விசாலம் பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கி பாண்டியனை தயாரித்து, இயக்கினார். தயாரிப்பில் முன்அனுபவம் இல்லாத அவருக்கு ஏவிஎம் சரவணன் உதவினார். பாண்டியனில் நடிக்க ரஜினி சம்பளம் வாங்கவில்லை.

மிகக்குறைந்த பொருட்செலவில், குறைந்த கால்ஷீட்டில் எடுக்கப்பட்ட படம் பாண்டியன். படத்தின் டைட்டிலில் ரஜினி சம்பளம் வாங்காமல் நட்பின் அடிப்படையில் நடித்ததை குறிப்பிட்டிருந்தனர். படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் ரஜினியிடம் அடிவாங்கும் நபர் கண்ணாடியின் மீது விழப்போக, ரஜினி அவரைத் தடுத்து, இங்க நான் வேலை கேட்டு வந்திருக்கேன். நீங்க கண்ணாடி, சேரெல்லாம் உடைச்சா எனக்கு வேலை கிடைக்காது. அதனால், நான் அடிப்பேன். நீங்க கண்ணாடி, சேர் எதையும் உடைக்காம போய் விழணும் என்பார். அப்படி அந்த சண்டைக் காட்சியில் ஒரு கண்ணாடி, சேர் உடையாது. பட்ஜெட் கம்மி என்பதால் எந்தப் பொருளையும் உடைக்காமல், அதற்கு ஒரு விளக்கமும் சொல்லி அந்தச் சண்டைக் காட்சியை முத்துராமன் எடுத்திருந்தார்.

எஸ்.பி.முத்துராமன் உள்பட அவரது யூனிட்டில் உள்ள முக்கியமான 14 பேர்கள் பாண்டியன் லாபத்தை பங்கிட்டு கொண்டனர். பாண்டியன் உள்பட முத்துராமனின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய வி.ஏ.துரைக்கும் பாண்டியன் லாபம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதில் அவர் ஒரு வீடு வாங்கியதாக இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

2002 இல் ரஜினி பாபா படத்தை தயாரித்த போது வி.ஏ.துரையை இணை தயாரிப்பாளராக சேர்த்துக் கொண்டார். உண்மையில் அவர் பாபா படத்தின் எக்ஸிக்யூடிவ் புரொடியூசராக பயி[ணாற்றியதாகச் சொல்கிறார்கள். ஆனால், விளம்பரங்களில் இணை தயாரிப்பு என்று வரும். பாபா படத்தின் போது சுமார் 51 லட்சங்கள் வி.ஏ.துரை ரஜினினியிடமிருந்து பெற்றுக் கொண்டதாக அவரே கூறியுள்ளார்.

பாண்டியன் வெளியானதற்கு அடுத்த வருடம், 1993 இல் ரஜினியைப் போல தனது முன்னாள் இயக்குனர் ஒருவருக்காக சம்பளம் வாங்காமல் கமல் நடித்துக் கொடுத்தார். அவர் ஜி.என்.ரங்கராஜன். பீம்சிங்கின் தீவிர விசிறியான ரங்கராஜன், கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி எடிட்டராக திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். பிறகு எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலத்துடன் இணைந்து பல படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதினார். ரஜினி நடித்த புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை, ப்ரியா போன்ற படங்களில் அசோஸியேட் இயக்குனராக பணியாற்றினார். 1979 இல் கமலை வைத்து கல்யாணராமன் படத்தை எடுத்து, இயக்குனராக அறிமுகமானார். மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்ப மயம் என கமலை வைத்து தொடர் ஹிட்கள் கொடுத்தார். அவர் தீபன் சக்ரவர்த்தியை நாயகனாக போட்டு ராணி தேனீ படத்தை தயாரித்து, இயக்கிய போது அந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து படத்தின் வியாபாரத்துக்கு கமல் உதவினார்.

ஜி.என்.ரங்கராஜன் பொருளாதாரரீதியில் கஷ்டப்பட்ட  போது, 1993 இல் மகராசன் படத்தில் கமல் சம்பளம் வாங்காமல் நடித்துத் தந்தார். நட்புக்காக கௌரவ வேடம் என்று குறிப்பிட்டிருந்தாலும், படம் நெடுக கமல் வருவார். மகராசனில் வள்ளிக்குப்பம் வடிவேலு என்ற கதாபாத்திரத்தில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியிருப்பார்.

மகராசன் படத்தில் நடிப்பதற்கு முன் படப்பிடிப்பில் விபத்தாகி கமலின் இடுப்புப் பகுதியில் உள்ள எலும்பு உடைந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரால் தட்டையான எதிலும் அமர முடியாது என்பதால் அவர் அமரக்கூடிய சேரின் நடுப்பகுதியில் வட்ட வடிவில் ஓட்டைப் போட்டு அதில் வலியைப் பொறுத்துக் கொண்டு அமர்ந்துதான் நடித்துக் கொடுத்தார். அவரை படப்பிடிப்பில் வந்து ரஜினி, அர்ஜுன் முதலான நடிகர்கள் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர்.

திரையுலகில் பரஸ்பர போட்டியும், பொறாமையும் எவ்வளவு உள்ளதோ அதேயளவுக்கு பரஸ்பர நேசமும், உதவி செய்யும் மனப்பாங்கும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் திரையுலகம் அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்தான் பரஸ்பரம் அவதூறுகளைப் பேசி இணையத்தில் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema, Kamal Haasan, Rajinikanth