ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அக்காவுக்காக காதலனை விட்டு கொடுத்த சரோஜாதேவி.. கொண்டாடப்பட்ட ஸ்ரீதரின் கல்யாண பரிசு!

அக்காவுக்காக காதலனை விட்டு கொடுத்த சரோஜாதேவி.. கொண்டாடப்பட்ட ஸ்ரீதரின் கல்யாண பரிசு!

கல்யாண பரிசு

கல்யாண பரிசு

kalyana parisu : முக்கோண காதல் கதையில் கல்யாண பரிசு ஒரு ட்ரென்ட் செட்டராக அமைந்தது. அதன் பிறகு பல வருடங்களுக்கு ரசிகர்களால் ஸ்ரீதர் கல்யாண பரிசு ஸ்ரீதர் என்றே அறியப்பட்டார்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

கல்யாண பரிசு திரைப்படம் 1959 ஏப்ரல் 9 ஆம் தேதி இதே நாளில் வெளியானது. இன்றுடன் கல்யாண பரிசு 63 வருடங்களை பூர்த்தி செய்கிறது. பல வகைகளில் இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு முக்கியமானது.

ஸ்ரீதர் கல்யாண பரிசு படத்தை இயக்கும் முன் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். முக்கியமாக 1958 இல் அவரது கதை, திரைக்கதை, வசனத்தில் வெளியான சிவாஜியின் உத்தம புத்திரன் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் தயாரிப்பிலும் ஸ்ரீதர் பங்கு கொண்டிருந்தார். உத்தம புத்திரனின் வெற்றிக்குப் பிறகு கதை, திரைக்கதை வசனத்துடன், படத்தையும் இயக்குவது என்ற முடிவில் அவர் எடுத்தப் படம்தான் கல்யாண பரிசு. ஸ்ரீதர் என்ற மகத்தான இயக்குனரின் முதல் படம்.

கல்யாண பரிசு போஸ்டர்

கல்யாண பரிசில் ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் கல்லூரி மாணவர்கள்.ஜெமினி கணேசன் சரோஜாதேவிக்கு எழுதி வைத்திருக்கும் காதல் கடிதம், தோழி ஒருத்தியின் வழியாக அனைவருக்கும் தெரிய வரும். சரோஜாதேவி வேறு வழியின்றி கல்லூரி முதல்வரிடம் முறையிட, ஜெமினி கணேசனை அவர் டிஸ்மிஸ் செய்வார். இது சரோஜாதேவிக்கு ஜெமினி கணேசன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி காதலை தோற்றுவிக்கும். வேலையில் சேரும் ஜெமினி கணேசன் சரோஜாதேவியின் வீட்டிற்கு குடிவருவார்.

சரோஜாதேவிக்கு அப்பா இல்லை. வயதான அம்மாவும், திருமணமாகாத அக்காவும் மட்டும்தான். அக்கா விஜயகுமாரியின் தையல் தொழிலில்தான் அந்த குடும்பம் வாழ்ந்து வருகிறது.

ஜெமினி கணேசன்

ஒருபுறம் ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் அறிமுகமேயில்லாதது போல் வீட்டில் நடித்து வெளியில் காதலிக்க, வீட்டிலிருக்கும் அக்கா விஜயகுமாரிக்கும் ஜெமினி கணேசன் மீது ஒருதலையாக காதல் வருகிறது. இந்த விஷயத்தை அவர் தங்கையிடம் கூற, அக்காவா இல்லை காதலா என்ற உணர்ச்சிப் போராட்டத்துக்கு சரோஜாதேவி ஆளாகிறார். கடைசியில் செஞ்சோற்றுக்கடன் வெல்ல, அவரே ஜெமினி கணேசனிடம் பேசி, தனது அக்காவை மணக்க வைக்கிறார். ஜெமினி கணேசனும், விஜயகுமாரியும் தனிக்குடித்தனம் செல்கிறார்கள். தாம்பத்தியத்தில் நாட்டமில்லாமல் இருக்கும் ஜெமினி கணேசனை சரோஜாதேவி அறிவுரை சொல்லி திருத்துகிறார்.

கே.ஏ.தங்கவேலு காமெடி

இதனிடையில் வேலைக்கு செல்லும் சரோஜாதேவியை மேனேஜராக இருக்கும் நாகேஸ்வர ராவ் காதலிக்கிறார். சரோஜாதேவி அந்த காதலை மறுதலிக்க, அவர் அந்த ட்ரான்ஸ்பர் வாங்கி செல்கிறார். இங்கே ஜெமினி கணேசன், விஜயகுமாரி தம்பதிக்கு குழந்தை பிறக்கிறது.. இந்த நேரத்தில் சரோஜாதேவியின் அம்மா இறந்துவிட அவர் தனது அக்கா வீட்டில் வசிக்க நேர்கிறது. விஜயகுமாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது சரோஜாதேவி ஜெயமினி கணேசனை கவனித்துக் கொள்கிறார். இது அக்காவுக்கு பொறாமையை கிளப்ப, அவளது சொல் அம்பை தாங்காமல் சரோஜாதேவி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதன் பிறகு ஜெமினி கணேசன் வழியாக தங்கையின் தியாகத்தை அறிந்து கொள்ளும் அக்கா, தன்னுடைய அனைத்தையும் சரோஜாதேவிக்கு அளிப்பதாகவும், அவள் திரும்பி வரும்படியும் விளம்பரம் செய்கிறார்.

இதனிடையில் வீட்டை விட்டு வெளியேறிய சரோஜாதேவிக்கு பணக்காரரான நம்பியார் அடைக்கலம் தருகிறார். அவரது மகன்தான் சரோஜாதேவியிடம் முன்பு காதலைச் சொன்ன நாகேஸ்வரராவ். அக்காவின் விளம்பரத்தைப் பார்க்கும் சரோஜாதேவி, அவளது வாழ்க்கைக்காக தான் திருமணம் செய்வது என்று முடிவெடுக்கிறாள். நாகேஸ்வரராவை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். அக்காவின் வாழ்க்கைக்கு தான் இடையூறாக ருக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுக்கிறார்.

கல்யாண பரிசு இடைவேளை காட்சி

ஜெமினிகணேசன் ஒருவழியாக தேடி சரேஜாதேவியை கண்டுபிடிக்கிறார். அவர் குழந்தையுடன் போகையில் திருமணம் முடிந்துவிட்டிருக்கிறது. தனது மகனை சரோஜாதேவியிடம் கல்யாண பரிசாக தந்துவிட்டு வெளியேறுகிறார். ஜெயமினி கணேசன் விட்டுச் செல்லும் கடிதத்தைப் படித்துதான், தனது அக்கா இறந்து போனதை சரோஜாதேவி தெரிந்து கொள்கிறார். கொஞ்சம் பொறுமையுடன் இருந்திருந்தால், தனது முன்னாள் காதலனையே அவர் கைப்பிடித்திருக்க முடியும். ஜெமினி கணேசன் தன்னந்தனியே நடைபிணமாக நடந்து செல்ல, காதலில் தோல்வியுற்றான் காளை ஒருவன் பாடலுடன் படத்தை முடித்து வைத்திருப்பார் ஸ்ரீதர்.

குழப்பம் இல்லாத தெளிவான கதை, திரைக்கதை கல்யாண பரிசின் முதல் பலம். இரண்டாவது கதையோடு இணைந்து வரும் கே.ஏ.தங்கவேலுவின் நகைச்சுவை. மன்னார் அண்ட்  கம்பெனியில் மேனேஜராக இருப்பதாக பொய் சொல்லி கல்யாணம் செய்து, அந்த பொய்யை தொடர்வதற்காக காலையில் வீட்டைவிட்டு கிளம்பி பூங்காவில் சீட்டு விளையாடும் கதாபாத்திரம். ஒருநாள் அவரது குட்டு வெளிப்பட, தான்தான் பிரபல எழுத்தாளர் பைரவன் என்று இன்னொரு பொய்க்குள் புகுந்து கொண்டு காலத்தை ஓட்டுவார். அவரது மன்னார் அண்ட் கம்பெனியும், பைரவன் எழுத்தாளர் காமெடியும் இன்றும் பிரபலம்.

அன்றைய காலகட்டத்தில்  தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள், பராணநாதா என்ற தினுசில் சங்கத் தமிழில் இருக்கும். ஸ்ரீதர் அதனை உடைத்து இயல்பான பேச்சுத் தமிழில் காதல் காட்சிகளையும், பிற காட்சிகளையும் அமைத்தது அன்றைய பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்தது. குறிப்பாக இளைஞர்கள் சாரைசாரையாக வந்து படத்தைப் பார்த்தனர். படம் 25 வாரங்களை கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது. படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஏ.எம்.ராஜாவின் இசையும், பாடல்களும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார். புரட்சிகரமான பாடல்களில் புகுந்து விளையாடுகிறவர் என பெயர் பெற்றிருந்தவர் இந்த காதல், சென்டிமெண்ட் படத்துக்கு எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.

கல்யாண பரிசு கிளைமேக்ஸ்

ஜெயமினி கணேசன், சரோஜாதேவியின் டூயட் பாடலான, 'வாடிக்கை மறந்ததும் ஏனோ...' தமிழ் சினிமாவில் முக்கியமான பாடல். வாடிக்கை என்ற வார்த்தையில் அதற்கு முன்பும் பின்பும்  எந்தப் பாடலும் தொடங்கியதில்லை. அதேபோல் இந்த காதல் பாடலில், காதலினின் குறும்பு அதிகரிக்கையில் காதலி, 'பொறுமையை இழந்திடலாமோ... பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ...' என்று பாடுவார். காதல் பாடலில் புரட்சி என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியதும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். இன்னொரு காதல் பாடலான, 'உன்னைக்கண்டு நானாட...' வித்தியாசமா டியூனில் பட்டுக்கோட்டையாரின் அற்புத வரிகளில் அமைந்திருக்கும். விஜயகுமாரி பாடுகிற, 'துள்ளாத மனமும் துள்ளும்..' இன்னொரு சிறந்த பாடல்.

முக்கோண காதல் கதையில் கல்யாண பரிசு ஒரு ட்ரென்ட் செட்டராக அமைந்தது. அதன் பிறகு பல வருடங்களுக்கு ரசிகர்களால் ஸ்ரீதர் கல்யாண பரிசு ஸ்ரீதர் என்றே அறியப்பட்டார். அந்தளவுக்கு படத்தை உணர்ச்சிகளால் இழைத்திருந்தார். தன்னால்தான் ஜெமினி கணேசனுக்கு படிப்பு போனது என்ற சரோஜாதேவியின் குற்றவுணர்வு, அது ஜெமினி மீது ஏற்படுத்திய காதல், தான் காதலிக்கும் அதே நபரை தன்னை வாழ வைக்கும் அக்காவும் காதலிக்கிறாள் என அறிந்து வேறு வழியின்றி அவளுக்கு தனது காதலனை விட்டுத் தருவது, காதலன் நினைவில், தன்னை உண்மையாக நேசிக்கும் மேனேஜரின் காதலை நிராகரிப்பது, அதனை ஏற்றுக் கொள்ளலாம் என நினைக்கையில் அவர் மாற்றலாகி சென்றிருப்பது, நோய் காரணமாக மனைவியை தொந்தரவு செய்யக் கூடாது என நினைக்கும் ஜெமினி கணேசனின் நோக்கம் மனைவிக்குள் சந்தேகத்தை உருவாக்கி, சகோதரியை வீட்டைவிட்டு போக வைப்பது, உண்மை அறிந்து குற்றவுணர்வு கொள்வது, பழைய காதலர்கள் இணைய கிடைத்த சந்தாப்பம் இறுதியில் சரோஜாதேவியின் திருமண முடிவால் நடக்காமல் போவது என படம் நெடுக உணர்ச்சிகளால் நெய்திருந்தார் ஸ்ரீதர்.

சரோஜா தேவி

ஆனால், இன்று இந்த அதீத உணர்ச்சிகரத்தை நினைக்கையில் அபத்தமாகவும்படுகிறது. 'இங்க பாரு அக்கா, நானும், அவரும் காதலிக்கிறோம், நான்தான் அவரை நம்ம வீட்ல குடியிருக்க அழைச்சிட்டு வந்தேன்' என்று கூறியிருந்தால் அத்தோடு மொத்தப் பிரச்சனையும் முடிந்திருக்கும். தியாகம் செய்வதாக நினைத்து கடைசியில் அக்கா இறக்க, தங்கை சம்பந்தமில்லாத ஒருவரை மணக்க, அவர்கள் விரும்பிய காதலன் இரண்டு பேரும் கிடைக்காமல் அனாதையாக சோகப்பாட்டுப்பாடி தனியாக செல்ல வேண்டியதாகிறது.

ஆனாலும், சினிமா என்று வருகையில் இந்த சென்டிமென்ட்கள்தானே சினிமாவை காப்பாற்றுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Kollywood, Tamil Cinema