ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொதுவுடமை, பெரியாரிய கருத்துக்களை முன்வைத்த கலைவாணரின் நல்லதம்பி பாடல்கள்

பொதுவுடமை, பெரியாரிய கருத்துக்களை முன்வைத்த கலைவாணரின் நல்லதம்பி பாடல்கள்

கலைவாணர்

கலைவாணர்

73 வருடங்களுக்கு முன்பே நமது கலைஞர்கள் திரைப்படத்தில் முற்போக்குக் கருத்துக்களை நையாண்டியுடன் யார் மனதும் புண்படாமல் வைத்திருக்கிறார்கள் என நினைக்கையில் வியப்பு ஏற்படுகிறது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று பெரியாரின் நினைவுதினம். அவரது கடவுள் மறுப்பு, சாதி, மத மறுப்பு கொள்கைகளை நாற்பதுகள் மற்றும் ஐம்பதுகளில் பல திரைப்படங்கள் வலுவாக பேசின. முக்கியமான சில கலைஞர்கள் இந்த பகுத்தறிவு கருத்துக்களை பொதுவுடமை சிந்தனையுடன் முன் வைத்தனர். அவர்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் முக்கியமானவர்கள்.

இவர்களது காலத்தில் திரைத்துறைக்குள் நுழைந்த அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தங்களது கதை, வசனங்கள் மூலம் சமூகத்தில் சாதி, மத அடிமைத்தனத்துக்கு எதிரான சிந்தனைகளை ஏற்படுத்தினர். இவர்களை என்.எஸ்.கிருஷ்ணன் தனது படங்களில் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் படங்களில் முக்கியமானது 1949 இல் வெளியான நல்லதம்பி திரைப்படம். இதில் இன்னொரு திராவிட, பொதுவுடமை சிந்தனைக்காரரான உடுமலை நாராயண கவி அட்டகாசமான பாடல்கள் எழுதி மக்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நல்லதம்பி திரைப்படம் உருவானதே தனிக்கதை. அறிஞர் அண்ணாவின் நண்பர் எம்.நல்லதம்பி சென்னையில் அப்போது ஓடிக் கொண்டிருந்த ஃப்ராங்க் காப்ராவின், மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டூ டவுன் என்ற படத்தைப் பார்க்கிறார். படம் அவருக்குப் பிடித்துப் போகிறது. இதனை தமிழில் எடுக்கலாமே என்று எண்ணியவர், அண்ணாவை அந்தப் படத்தைப் பார்க்க வைக்கிறார். மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை தமிழுக்கேற்ப மாறுதல்களுடன் எழுதுவது என முடிவாகிறது. படத்தை எடுக்க என்.எஸ்.கே. முன் வருகிறார். அண்ணா திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், என்.எஸ்.கே. நாயகனாக நடிக்க படம் தயாரானது.

பொதுவுடமை மற்றும் பெரியாரிய சிந்தனைகளை இயல்பாகவே தன்னுள் கொண்டிருந்த கலைவாணர் படத்தின் கதையை பெரிதும் மாற்றினார். நாயகி பானுமதியின் முக்கியத்துவத்தை குறைத்து, டி.ஏ.மதுரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். விழிப்புணர்வு பாடல்களை படத்தில் இணைத்துக் கொண்டார். கூத்துக் கலைஞரான அவர், விநாயகர் வேடத்தில் இருப்பவர், அந்தக் காலம் எனத் தொடங்கும் போது, அந்தக் காலத்தை விடுமய்யா, இந்தக் காலத்தைப் பற்றி பேசுவோம் என பழம்பெருமை பேசுகிறவர்களுக்கு கவுண்டர் கொடுத்திருப்பார். அதையொட்டி உடுமலை நாராயண கவி எழுதியிருந்த பாடல் சிறப்பான ஒன்று.

அந்த காலத்தில்...

அந்த காலத்தை பற்றி பேசாதேரும்...

சரி இந்த காலத்தில்

எங்கு பார்த்தாலும் பொய்யும் பொரட்டும்...

நிறுத்தும்...

பொய்யும் பொரட்டும் பேசுவது அந்த காலம்

சரி இந்த காலத்தைப் பற்றி

சொல்கிறேன் கேளும்...

அன்னியர் நம்மை

ஆண்டது அந்த காலம்

அது அந்த காலம்

நம்மை நாமே

ஆண்டுகொள்வது

இந்த காலம்

பேசுவதற்கு உரிமை அற்றது

அந்த காலம்

சிறகினாலே பெருமை

உள்ளது இந்த காலம்

மனுஷனை மனுஷன்

ஏச்சிப் பிழைத்தது

அந்த.காலம்

மடமை நீக்கி நமதுடமை

போடுவது இந்த காலம்

எழுதி வைப்பது அந்த காலம்

எதுவும் நேரில் பார்த்து

நிச்சையிப்பது

இந்த காலம்

மழை வேண்டுமென்றே

மந்திரம் ஜபிப்பது அந்த

காலம்

மழை பொழிய வைக்க

எந்திரம் வந்தது

இந்த காலம்

ஈழ் குலம் என்ற

இனத்தை கொடுத்தது

அந்த காலம்

மக்களை இணைத்து

அழைக்க முயன்றது

இந்த காலம்

துரோபதை தன்னை

துயில் உரிந்தது

அந்த காலம்

பெண்ணை தொட்டு

பார்த்தால் சுட்டு

போடுவான் இந்த காலம்

சாஸ்திரம் பார்ப்பது

அந்த காலம்

சரித்திரம் பார்ப்பது

இந்த காலம்

கோத்திரம் பார்ப்பது

அந்த காலம்

பெண்ணின் குணத்தை

அறிவது இந்த காலம்

கத்தி தீட்டுவது அந்த காலம்

புத்தி தீட்டுவது இந்த காலம்

பெண்ணை பேசினார் பேசி

யாரைத்தான் அந்த காலம்

படிபெண்ணின் ஒன்றாம்

எண்ணி நடப்பது

இந்த காலம்

கோவிலுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்ட நந்தனாருக்கு, கடவுளே காட்சி தந்தார் என்பது நந்தனார் கதை. அதனை கிந்தனார் என மாற்றி புரட்சியாளர் அம்பேத்கரின் கதையை படத்தில் பாடலாக வைத்திருந்தார் கலைவாணர். விஞ்ஞானத்தைப் போற்றி அவர் வைத்திருந்த பாடல் இன்னொரு கிளாசிக்.

'பொஞ்சாதி புருஷன் இல்லாம

புள்ளயும் குட்டியும்  பொறக்குறாப்புல

விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி..' என்று அதில் ஒரு வரி வரும். அன்று இல்லாத அந்த மருத்துவ தொழில்நுட்பம் இன்று சாத்தியமாகியுள்ளது. அதேபோல்,

'பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போகாம

படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..' என்று அந்தப் பாட்டில் உடுமலை நாராயண கவி ஒரு வரி எழுதியிருப்பார். கொரோனா காலத்தில் நமது பிள்ளைகள் பள்ளிக் கூடம் போகாமல் ஆன்லைன் வகுப்பில் படித்தார்கள். அன்று கலைவாணரும், நாராயண கவியும் கனவு கண்டது நமது காலத்தில் உண்மையாகியிருக்கிறது. அந்த முழுப்பாடல்....

விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி - மேனாட்டாரை

விருந்துக்கழைச்சு காட்டப்போறேண்டி

விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி - மேனாட்டாரை

விருந்துக்கழைச்சு காட்டப்போறேண்டி

தஞ்சாவூரு ஏட்டப் பிரிச்சு

தலைகீழா பாடம் படிச்சு

பொஞ்சாதி புருஷன் இல்லாம

புள்ளயும் குட்டியும்  பொறக்குறாப்புல

விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி - மேனாட்டாரை

விருந்துக்கழைச்சு காட்டப்போறேண்டி

அஞ்ஞானத்தை அழிக்கப்போறேண்டி - அணுசக்தியால

ஆயுள் விருத்தி பண்ணப் போறேண்டி

அஞ்ஞானத்தை அழிக்கப்போறேண்டி - அணுசக்தியால

ஆயுள் விருத்தி பண்ணப் போறேண்டி

அடுத்த நாட்டுக்காரன் போல ஆளைக்கொல்லாம

ஊர பாழு பண்ணாம - தீமை

அஞ்ஞானத்தை அழிக்கப்போறேண்டி - அணுசக்தியால

ஆயுள் விருத்தி பண்ணப் போறேண்டி

அது மட்டுமா..

புஞ்சை நிலத்தில் பருத்திச் செடியில்

புடவை ரவிக்கை வேட்டி காய்க்க

பஞ்சைக் கிழவர் தன்னை

பால பருவமாக்கி நாட்டைக்காக்க

கைத்திறமைய காட்டப்போறேண்டி ஒரு

கவியைப்பாடி காத்து மழை

உண்டாக்கப் போறேண்டி

மாட்டுவண்டிக்கு சூட்சத்தை வச்சு - என்

மாமியாருக்கு ஒட்டி ஒட்டி காட்டப்போறேண்டி

அதுல உன்னையும் ஏத்திட்டு

மாட்டுவண்டிக்கு சூட்சத்தை  வச்சு

மாமியாருக்கு ஒட்டி ஒட்டி காட்டப்போறேண்டி

வீட்டுக்கென்ன செய்யப் போறீங்க

அதையும் கொஞ்சம்

வெவெரமாக வெளக்கிப் போடுங்க

வீட்டுக்கென்ன செய்யப் போறீங்க

அதையும் கொஞ்சம்

வெவெரமாக வெளக்கிப் போடுங்க

வீட்டுக்கா...

ஆமா...

என்ன வேணும் கேட்டுக்கோ..

நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு

அல்லும்,பகலும் ஆக்கி  அடுக்க அதுக்கொரு மிஷினு

கொல்ல புரத்தில குழாய் வைக்கணும்

குளிரு மிஷினும் கூட வைக்கணும்

பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போகாம

படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..

முடிஞ்சுதா?.

ஒன்ன  மறந்துட்டேன்..

என்னாம்மா?

பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே

இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்

கட்டிலுக்கு மேலே ஃபேனு  காத்து சுத்தோணும்

காலம் காட்டும் கருவியும் வேணும்

அடி பைத்தியம் !

நம்ம நாட்டிலே...

வீட்டு வேலை செஞ்ச பொம்மனாட்டிய பாரு

மேனாட்டு நாகரீகம் கொண்ட மேனியைப் பாரு

அவ காட்டுக்கு போவா

களை எடுப்பா

காரியம் பாப்பா

கஞ்சி குடிப்பா

இவ கார்ல போவா

ஊரைச் சுத்துவா

கண்ணாடி பாப்பா

காப்பி குடிப்பா !!

73 வருடங்களுக்கு முன்பே நமது கலைஞர்கள் திரைப்படத்தில் முற்போக்குக் கருத்துக்களை நையாண்டியுடன் யார் மனதும் புண்படாமல் வைத்திருக்கிறார்கள் என நினைக்கையில் வியப்பு ஏற்படுகிறது. பாடல்கள் மட்டுமின்றி காட்சிகள், வசனங்கள் ஒவ்வொன்றையும் இதுபோல் தனித்தனியாக பேச முடியும். இந்தக் காலத்தில் பலரும் நல்லதம்பி போன்ற படங்கள் குறித்து பேசவும், அவை போல் படங்கள் எடுக்கவும் தேவை உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: NSK, Periyar