ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Kalaga Thalaivan Review: எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன்?

Kalaga Thalaivan Review: எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன்?

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஒட்டுமொத்தமாக கலகத் தலைவன் படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உதயநிதி நடித்திருக்கும் கலகத் தலைவன் திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இந்த படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன தொடர்பு படம் சொல்லும் விஷயம் என்ன என்பதை பார்க்கலாம்.

தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, கலகத் தலைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக் பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தியாவின் மிக முக்கிய தொழில் நிறுவனத்தின் ரகசியம் வெளியாகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைகிறது. அந்த ரகசியத்தை வெளியிட்டது யார்? எதற்காக வெளியிட்டார்கள்? அதனால் அவர்கள் சந்தித்த பாதிப்பு என்ன? என்பதே கலகத் தலைவன்.

இந்த கதைக்கு பின் இருக்கும் அரசியல், அதனால் ஏற்படுன் பாதிப்பு ஆகியவற்றை ஆக்சன் பின்னணியில் திரைக்கதையாகியுள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. மேலும் தான் எடுத்துக்கொண்ட கதையை நேர்கோட்டில் சொல்ல தன்னுடைய வழக்கமான பாணியையே அவர் பின்பற்றி இருக்கிறார். எந்த ஒரு கமர்சியல் சமரசமும் அதில் செய்து கொள்ளவில்லை.

படத்தின் முதல் பாதி முழுவதும் Pen Drive-வை மையமாக வைத்தே செல்கிறது. இடையிடையே காதல் காட்சிகள் வந்தாலும் கார்ப்பரேட் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ஆரவ், தன்னுடைய இலக்கை அடைந்து விடுவாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. மேலும் முதல் பாதி நாயகன் வெற்றியடைவது போலவே காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நடிப்பில் ஸ்கோர் செய்தாரா உதயநிதி? கலகத் தலைவன் விமர்சனம்!

இரண்டாம் பாதி நாயகனின் முயற்சிகளை முறியடித்துக் கொண்டே வருகிறார் எதிர் நாயகன். இதன் மூலம் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் தொடக்கத்திருந்தே, தன் இலக்கை அடைய ஒரே ஒரே பார்முலாவை எதிர் நாயகன் பின்பற்றுகிறார். இதனால் அடுத்தது இதைதான் செய்யப் போகிறார் என்ற எண்ணத்தை பார்வையாளர்களிடம் உருவாக்கிவிடுகிறது. எதிர் நாயகனின் செயல் சாமர்த்தியமானது என்று காட்ட முயற்சித்தாலும், ஒரே பார்முலா என்பதால் ஒருவித சலிப்பை உருவாக்குகிறது.

ஆக்சன் திரில்லர், காதல் இதையெல்லாம் தவிர்த்து கார்ப்பரேட் அரசியல் நிகழ்த்தும் பாதிப்புதான் படத்தின் அடிநாத கதை. ஒரு நிறுவனம் செய்யும் செயலால் யார் யாரெல்லாம்? எங்கெல்லாம்? எப்படி எல்லாம்? பாதிக்கப்படுகிறார்கள் என்பதை திரைக்கதை ஓட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு கடத்த நினைத்து இருக்கிறார் இயக்குனர். மேலும் உதயநிதி நடித்துள்ள இந்த படத்தில், கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பணம் கொடுக்கும் வசனமும் இடம் பெறுகிறது.

இதில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி, எதிர் நாயகனாக வரும் ஆரவ், சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலையரசன் மற்றும் நாயகி நிதி அகர்வால் என அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். உதயநிதிக்கு வசனங்கள் குறைவு, ஆனால் கதாபாத்திரத்துடன் பொருந்தியே காட்சியளிக்கிறார். அதேபோல் ஆரவ் தன்னுடைய கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்துள்ளார். இதற்குப் பின் அதிகம் இதுபோன்ற கதாபாத்திரங்கள் அவருக்கு வர வாய்ப்புள்ளது. நிதி அகர்வால் ஆங்காங்கே வந்து சென்றாலும் மோசம் இல்லை என்றே சொல்ல வைக்கிறார்.

பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் விஜய் இந்த உலகில் சிறந்தவன் - எஸ்.ஏ.சந்திரசேகர்

கலகத் தலைவன் திரைப்படத்திற்கு காதல் காட்சிகள் மற்றும் நாயகி கதாபாத்திரம் தேவையில்லை. இருந்தாலும் ரோலிங் டைட்டிலில் வரும் ஒரு காட்சிக்காக அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டதோ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. அந்த காதல் காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தால் படத்தின் நேரம் குறைந்திருக்கும். அதேசமயம் அந்த காதல் காட்சிகள் தனியாக பார்த்தால் ரசிக்க வைக்கும். இந்தப் படத்திற்கு காதல் தேவையா என்பதே கேள்வி.

ஒட்டுமொத்தமாக கலகத் தலைவன் படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். அதேசமயம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேர்காணலில், கலகத் தலைவன் திரைப்படம் பார்த்துவிட்டேன். இப்போதும் சொல்கிறேன் மகிழ் திருமேனி படங்களில் தடம் சிறப்பானது என்று கூறினார் உதயநிதி. அதுபோலவே நமக்கும் தோன்ற வைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema, Udhayanidhi Stalin