• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kala Review: வன்முறையில் அழகியலை காட்டும் களா மலையாளப்படம்!

Kala Review: வன்முறையில் அழகியலை காட்டும் களா மலையாளப்படம்!

களா படம்

களா படம்

முக்கால்வாசி படம் ஷாஜியும், அந்த இளைஞனும் சண்டையிடுகிறார்கள். விதவிதமான தாக்குதல்கள். கையில் கிடைத்ததை எடுத்து அடிக்கிறார்கள்.

  • Share this:
டொவினோ தாமஸ் நடிப்பில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் களா. தமிழில் களை என்று பொருள். வழக்கம் போல சின்ன கதையை வைத்து கதகளி ஆடியிருக்கிறார்கள் சேட்டன்கள்.

ஷாஜி ஒரு குடும்பஸ்தன். மனைவி, ஒரு மகன் உண்டு. வயதான அப்பாவுடன் உரசலுடனான உறவு. அந்த வீட்டில் வசிக்கும் இன்னொரு உயிர், பிளாக்கி என்ற நாய். "அம்மாவையும், நாயையும் குளிப்பாட்டுற, என்னை ஏன் குளிப்பாட்டிவிட மாட்டேங்கிற" என்று மகன் கேட்குமளவுக்கு ஷாஜிக்கு பிளாக்கி மேல் உயிர்.

மனைவி, மகன், அப்பா மூவரும் வெளியே கிளம்பிய ஒரு நாளில், பாக்கு பறிக்கும் தொழிலாளிகள் வருகிறார்கள். அவர்கள் வருகையில் ஏதோ அபஸ்வரம் தெரிகிறது. அவர்களில் ஒருவன் ஷாஜியை தாக்குகிறான். அவனை அடித்து தனியிடத்தில் பூட்டி வைக்கிறான் ஷாஜி. தாக்கியவனை அவனுக்கு அடையாளம் தெரிகிறது. ரொம்ப நாள் முன்பு ஷாஜி குடி போதையில் அந்த தமிழ் இளைஞனின் நாயை கொன்றுவிட, அதற்கு யார் காரணம் என்பதை தேடி கண்டுபிடித்து பழிவாங்க ஷாஜியின் வீட்டிற்கு வந்திருக்கிறான். ஷாஜியின் நாயை கொல்லப் போவதாகச் சொல்கிறான். 'அவனை நான் பார்த்துக்கிறேன்' என்று அசட்டையாக ஷாஜி சொன்னாலும், அடுத்தடுத்த நிமிடங்களில் நிலைமை மோசமாகிறது. ஒருபக்கம் தொழிலாளிகள் பாக்கு பறிக்க, இங்கே இருவரும் கட்டி புரள்கிறார்கள். இறுதியில் என்னானது என்பது கிளைமாக்ஸ்.

முக்கால்வாசி படம் ஷாஜியும், அந்த இளைஞனும் சண்டையிடுகிறார்கள். விதவிதமான தாக்குதல்கள். கையில் கிடைத்ததை எடுத்து அடிக்கிறார்கள். எதுக்கு இந்த ரத்தக்களரி என்று யோசிக்கையில் வெளியே சென்ற குடும்பம் திரும்பி வருகிறது. அவர்கள் முன்னிலையில் மீண்டும் சண்டை. இறுதிக்காட்சியில் அடிபட்டு ரத்தச் சகதியாக ஷாஜி கழிவறையில் ஓடி ஒளிய, அந்த இளைஞன் சாவகாசமாக அவன் முன் அமர்ந்து பீடி பிடித்தபடி 'என்ன, அவ்வளவுதானா' என்று கேட்கிறான். இந்த இடத்தில் படம் இன்னொரு தளத்துக்கு செல்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், தனது நாயை கொன்றவனை தேடி வந்து பழிவாங்கும் படம். கதையில் உள்சரடாக வைத்திருப்பது அடர்த்தியான மானுட விஷயங்கள். ஆம்பளைங்க அழக்கூடாது என்கிறான் ஷாஜி தனது மகனிடம். மீதிமிருந்த ஹார்லிக்ஸை ஷாஜி குடித்துவிட்டான் என்று அவனது மகன் அழும்போது, உனக்கு வேணும்னா அடிச்சு வாங்கியிருக்கணும் என்கிறான். ஆம்பளைத்தனம் என்பது உடல் சார்ந்தது, அடுத்தவன் மீது அதிகாரம் செலுத்துவது எனற விஷயங்கள் ஷாஜியினுள் ஊறிப்போயிருக்கிறது. மனைவிடம் அதீத ப்ரியம் தான். எனினும் அம்மா வீட்டிற்குப் போகவே ஷாஜியை நயந்து தான் மனைவியால் விருப்பத்தை சாதிக்க முடிகிறது. அப்பா இன்னொரு விதம். மகன் மனைவி வீட்டாரின் பேச்சைக் கேட்டு நிலம் வாங்கியதால் மகன் ஷாஜி மீதும் அவன் மனைவி மீதும் கோபம். இறுதியில் அப்பா, மகன் இருவரது ஆம்பளைத்தனமும் நொறுங்கிப் போகிறது.

நுட்பமான காட்சிகள் வழியாக இன்னொரு கதையை சொல்கிறார்கள் கதாசிரியர் யது புஷ்பாகரனும், இயக்குனர் ரோஹித்தும். சதை பிரண்ட காலில் தைலம் தேய்க்க வரும் மருமகளின் கரத்தை அப்பா தட்டிவிடுகிறார். கடைசியில் அவரே, மருமகளின் தோளை தொட்டு, அவனுக்கு என்னாச்சின்னு போய் பார் என்று சொல்கிறார். அதுவரை மாமனாருக்கும், கணவனுக்கும் அனுசரித்தே பழகிய அவள், எழுந்து செல்லாமல் அப்படியே அமர்ந்திருக்கிறாள். படத்தின் ஆரம்பத்தில் ஷாஜி மனைவி, மகனிடம் காட்டும் அன்புக்கு அடியில் அவனது அதிகாரம் ஒளிந்திருப்பதை பார்வையாளர்கள் துலக்கமாக அறிந்து கொள்ளும் இடம் இது. தமிழ் இளைஞனின் பார்வைக்கு ஷாஜி விளைநிலங்களை பாழ்செய்யும் பன்றியைப் போலவே தெரிகிறான். நுட்பமான ஒப்பீடு.

அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக கடந்து போகிற விஷயங்கள் உண்மையில் சாதாரணமானவையல்ல. "என்ன, நாயை கொன்னுட்டான், அவ்வளவுதானே" என்கிறோம். ஆனால், நாயை கொல்லும் அதே மனநிலைதானே மற்றவர்களுடன் பழகும் போதும் வெளிப்படும். பொது இடத்தில் சிக்னலை மதிக்காதவர்கள், அதே மனநிலையுடன்தானே சக மனிதர்களிடமும் பழகுவார்கள். வெறும் நாய்தானே, வெறும் சிக்னல்தானே என்று கடந்து செல்லும் மனோநிலையை விளாசித்தள்ளி, அது மட்டும் இல்லை நீ, அதற்கும் மேலே என்று உணர வைக்கிறது படம். பொதுவாக படத்தின் ஆரம்பத்தில், இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று காட்டுவார்கள். இதில் முக்கால்வாசி படம் முடிந்த பிறகு உச்சக்கட்ட வன்முறைக் காட்சியில் அந்த டிஸ்கிளைமரை போடுகிறார்கள். அதேபோல், படத்தின் ஆரம்பத்தில் வரும் ஆஸ்கர் ஒயில்டின், 'சுயநலம் என்பது ஒருவன் தான் விரும்பியபடி வாழ்வதல்ல, தனது விருப்பத்தின்படி மற்றவர்கள் வாழ வேண்டும் என நினைப்பது' என்ற வரியின் வழியாக படத்தின் நோக்கத்தை குறிப்புணர்த்துகிறார்கள்.

ஷாஜியாக டொவினோ தாமஸ். அவரே படத்தை தயாரித்திருக்கிறார். ஹீரோயிசம் இல்லாமல் சுயபரிசோதனை செய்யும் கதாபாத்திரம். பெரிய மனசு வேண்டும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க. மனைவியாக வரும் திவ்யா பிள்ளை, ஷாஜியின் தந்தையாக வரும் லால் என அனைவரும் சிறப்பு. தமிழ் இளைஞனாக வரும் சுமேஷ் மூரின் மூர்க்கம் முதுகை சில்லிட வைக்கிறது.

படத்தின் முக்கியமான அம்சம், கேமராவும், எடிட்டிங்கும். ஸ்லோமோஷன் மற்றும் அண்மைக்காட்சிகள் வழியாக முதல் ப்ரேமிலிருந்து ஒரு பதட்டத்தை கொண்டு வருகிறார்கள். எப்போது யாரால் என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத பதட்டம். அதற்கு இசை பெருமளவு துணை செய்கிறது. படம் நெடுக இரண்டு பேர் கட்டிப் புரள்கிறார்கள். ஆனால், எந்த இடத்திலும் நெருடலோ, பார்த்ததை மறுபடியும் பார்க்கிற சலிப்போ இல்லை. வில்லனாக அறிமுகமாகி, 'இவனை கொன்றால்தான் என்ன' என்று வெறுப்பை சம்பாதித்து, கடைசியில் புன்னகையுடன் ஷாஜியின் வீட்டைவிட்டு கிளம்புகையில் ஹீரோவாக மனதில் அந்த தமிழ் இளைஞன் இடம்பிடிப்பதுதான் களை படத்தின் வெற்றி.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: