அண்மைக் காலங்களில் பிறமொழிப் படத்தை உரிமை வாங்கியும் வாங்காமலும் தழுவுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது. இந்த 'அண்மைக் காலம்' என்பது எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பொருத்திப் பார்த்துக் கொள்கிற சமாச்சாரம். அதாவது இரண்டாயிரத்தில் நீங்கள் இதே அண்மைக் காலங்களில் என்று எழுதியிருந்தாலும் அந்த காலகட்டத்திற்கு இது பொருந்தி போயிருக்கும். இதன் பொருள் எல்லா காலங்களிலும் பிறமொழிப் படத்தை உரிமை வாங்கியும் வாங்காமலும் தழுவி படங்கள் எடுக்கும் நடைமுறை இருந்து வந்தது என்பதுதான்.
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏவிஎம்மின் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் கூட ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. அந்தக் காலத்தில் ஆங்கிலப் படங்களை பார்ப்பதற்கும், பார்த்து அதன் கதையை விவரிப்பதற்கும் என்றே ஆங்கில புலமை வாய்ந்த நபர்களை இயக்குனர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் சம்பளம் தந்து வைத்திருந்தார்கள் என்பது இன்னொரு தகவல்.
அந்தக் காலத்தில் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் இருந்த நியூ எல்பின்ஸ்டன்ட் திரையரங்கில் ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும். அப்படி திரையிடப்பட்ட 'நோபடிஸ் சைல்ட்' என்ற ஆங்கில திரைப்படத்தை நிறைய பேர் பார்த்தனர்: ரசித்தனர். அதில் இருவர் சினிமா சம்பந்தப்பட்டவர்கள். ஒருவர் இயக்குனரும் கதாசிரியருமான தாதா மிராசி. அவர் நோபடிஸ் சைல்ட் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்ப தட்டியும் ஒட்டியும் கடவுளின் குழந்தை என்ற ஒரு புதிய கதையை உருவாக்கி, அதனை சின்ன அண்ணாமலையிடம் கூறினார். இவர் இந்தக்கால அண்ணாமலை போலன்றி மிக்க திறமையும் தமிழ் ஆர்வமும் கொண்டவர். தேசப்பற்றாளர். சுதந்திரத்துக்காக சிறை சென்ற தியாகி. பல தமிழாய்வு நூல்களை எழுதியவர். ராஜாஜியின் விசுவாசி. அவரது தூண்டுதலால் சென்னை வந்து, தமிழ்ப் பண்ணை என்ற பதிப்பகத்தை தொடங்கி, பல அரிய தமிழ் நூல்களை பதிப்பித்தவர். சிவாஜி கணேசனின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர். சிவாஜியை வைத்து படங்கள் தயாரித்தவர். கடவுளின் குழந்தை கதையை கேட்டவர் அதனை படமாக்க தீர்மானித்தார். தாதா மிராசி படத்தை இயக்குவது எனவும் தீர்மானமானது.
அதே நேரம் நோபடிஸ் சைல்டு திரைப்படத்தை பார்த்த நடிகரும் கதாசிரியமான ஜாவர் சீதாராமன், அந்தக் கதையை தனது புத்திக்கேற்ப தட்டியும் ஒட்டியும் களத்தூர் கண்ணம்மா என்ற கதையாக்கி ஏவிஎம் மிடம் கூறினார். அவர்களுக்கு கதைப் பிடித்துப் போக, ஜெமினி - சாவித்திரி நடிப்பில் படமாக்க முடிவு செய்தனர். ஒரே நேரத்தில் நோபடிஸ் சைல்டு கடவுளின் குழந்தையாகவும், களத்தூர் கண்ணம்மாவாகவும் இரண்டு இடங்களில் வளரத் தொடங்கியது.
இந்த, ஒரு கொடியில் இரு மலர்கள் சம்பவத்தை தாமதமாக அறிந்து கொண்ட சின்ன அண்ணாமலை பதறிப்போனார். படத் தயாரிப்பிலும் விநியோகத்திலும் அவர் கட்டுமரம் என்றால், ஏவிஎம் டைட்டானிக் கப்பல். அவர்களுடன் மோதினால் சின்னாபின்னமாகி விடுவோம் என்பதை அறிந்தவர் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி கடவுளின் குழந்தையை 1960 ஜூலையில் மவெளியிட்டார். படம் முதலுக்கு மோசம் இல்லாமல் சின்ன அண்ணமலையின் கட்டு மரத்தை காப்பாற்றியது.
கடவுளின் குழந்தைக்குப் பிறகு களத்தூர் கண்ணம்மா பீம்சிங் இயக்கத்தில் 1960 ஆகஸ்டில் வெளியாகி அதுவும் 100 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியை பெற்றது. ஆக, இந்தக் காலத்தில் தான் ஹாலிவுட் திரைப்படங்களையும் பிற மொழி படங்களையும் காப்பியடித்து படம் எடுக்கிறார்கள் என்று அவதூறு செய்கிறவர்கள் சற்று நிதானிக்க வேண்டும். இந்த காப்பியடித்தல் தொழில் காலங்காலமாக தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் ஒன்று என்பதை உணர்ந்து, தங்களுடைய அறச்சிட்டத்தை கட்டுப்படுத்த பழக வேண்டும்.
Also read... சாவித்திரியின் சௌபாக்கியவதி படத்தின் சுவாரசிய பின்னணி கதை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment