Home /News /entertainment /

தமிழின் முதல் கிரவுட் பண்டிங் திரைப்படமான குடிசை உருவான விதம்!

தமிழின் முதல் கிரவுட் பண்டிங் திரைப்படமான குடிசை உருவான விதம்!

குடிசை

குடிசை

ஜெயபாரதியின் தந்தை ராமமூர்த்தியும், தாய் சரோஜாவும் நல்ல எழுத்தாளர்கள். ராமமூர்த்தி சிறுகதையாசிரியராக பெயர் பெற்றிருந்தார்.

கிரவுட் பண்டிங் என்பது இப்போது அதிகமாக அடிபடும் வார்த்தை. மக்களிடமிருந்து பணம் வாங்கி படம் எடுப்பது. மலையாளத்தில் இயக்குனர் ஜான் ஆபிரஹாம் இதனை முயற்சி செய்திருக்கிறார். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வளைந்து போகாமல், வழக்கமான வணிக சினிமா சட்டகங்களுக்குள் சிக்காமல் தான் சொல்ல விரும்பியதை எந்த சமரசமும் இன்றி சொல்ல கிரவுட் பண்டிங் முறையே சிறந்தது. அதனால் தான் மக்கள் கலைஞர்களாக இருந்தவர்கள் கிரவுட் பண்டிங் முறையை அதிகளவில் சார்ந்திருந்தனர்.

1979-ல் வெளியான ஜெயபாரதியின் குடிசை திரைப்படம் தான் தமிழின் முதல் கிரவுட் பண்டிங் திரைப்படம். குடிசை தான் கிரவுட் பண்டிங் முறையில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்கிறார் ஜெயபாரதி . இவர் சினிமாவுக்கு வரும்முன் தினமணியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். சுமார் 75 சிறுகதைகள் எழுதியுள்ளார். அத்துடன் சினிமா விமர்சனங்களும் எழுதுவார். பாலசந்தர் படத்தையும் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார். இதுவே ஒரு ஈர்ப்பாக மாற, பாலசந்தர் இவருடன் நட்பு பாராட்ட ஆரம்பித்துள்ளார். ஜெயபாரதியை நடிக்க வைக்க வேண்டும் என்பது பாலசந்தரின் ஆசை. மூன்று முடிச்சு திரைப்படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் ஜெயபாரதி தான் முதலில் நடிப்பதாக இருந்தது. நான் படம் இயக்கப் போறேன். என்னை நடிகனாக்கலாம்னு பார்க்கிறீங்களா என்று விலகி வந்திருக்கிறார். இது நடந்தது 1976. அந்த வருடமே ஜெயபாரதி குடிசை படத்தை ஆரம்பித்துவிட்டார். இதற்குப் பின்னால் இருந்த உந்துதல் முக்கியமானது.

நல்ல சினிமா மீது கொண்ட காதலால் சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கை வாடகைக்கு எடுத்து காலைக் காட்சியில் மட்டும் சத்யஜித் ரே, மிருணாள்சென் போன்ற மேதைகளின் படங்களை திரையிட்டு வந்தார் ஜெயபாரதி. மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற பிரபலங்கள் இந்தப் படங்களை வந்து பார்த்திருக்கிறார்கள். குடிசையை இவர் ஆரம்பிக்க இருக்கையில் இவருடன் நடிகர் மனோபாலாவும் வந்து சேர்ந்து கொண்டார். அத்துடன் ஜெயபாரதியின் நெருங்கிய நண்பரான பிரபல இயக்குனர் ராபர்ட் ராஜசேகரும்  குடிசையின் ஆரம்பத்தில் அவரும் உடன் இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில், மனோபாலா எதேச்சையாக பாலசந்தரை சென்று சந்திக்க, தற்போது தான் ஜெயபாரதியுடன் இருக்கும் விஷயத்தை அவரிடம் கூறியுள்ளார்.

எரிச்சலான அவர், அந்த பைத்தியக்காரன் நான் எடுக்கிறது படமே இல்லைங்கிறான். அவன் ஏதோ படம் எடுக்கப் போறதா சொல்றான்.  சினிமா எடுக்கிறது சாதாரணம்னு நினைச்சிருக்கானா. பணம் இல்லாம எப்படி படம் எடுக்கிறான்னு பார்க்கிறேன் என்றிருக்கிறார். இந்த விஷயத்தை மனோபாலா கூறிய போது ஜெயபாரதியுடன் ராபர்ட் ராஜசேகரும் இருந்திருக்கிறார். அப்போதே படம் எடுப்பது என்று முடிவு செய்து, இன்னும் பத்து நாள்களில் ஷுட்டிங் என்று ஜெயபாரதி சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சி. கையில் நையா பைசா இல்லை. எப்படி படம் எடுப்பது? ஜெயபாரதி அசரவில்லை. பத்து பேர் ஆளுக்கு 500 ரூபாய் தந்தால் பத்தாயிரம் அடிக்கு பிலிம் வாங்க முடியும் என்று தனக்குத் தெரிந்த 10 பேரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் தந்திருக்கிறார்கள். கடனில் படப்பிடிப்பு யூனிட் மற்றும் கேமராவை ஏற்பாடு செய்து தந்துள்ளார் ராஜசேகர்.

பாடி குப்பத்தில் இருந்த பண்ணையார் ஒருவர் படப்பிடிப்பின் போதான சாப்பாட்டு செலவை ஏற்றுள்ளார். என்றாலும், தினசரி படப்பிடிப்பு செலவு என்ற ஒன்று உள்ளதே. இதற்காக குடிசை என்ற படத்தை தயாரிக்கிறோம் என்று கல்லூரிகளில் கலை நிகழ்ச்சி நடத்தி நன்கொடை வசூலித்தனர். அப்போதைய பிரபல பாடகரும் ஜெயபாரதியின் நண்பருமான சிலோன் மனோகர் நிகழ்ச்சி நடத்தி பணம் வசூலித்து தந்துள்ளார். இந்த பணத்துடன் மிருணாள் சென் அறிமுகப்படுத்திய மலையாள தயாரிப்பாளர் கடனாக அளித்த இருபத்தைந்தாயிரம் ரூபாய் என பலவகைகளில் பணத்தைப் புரட்டி படத்தை முடித்தனர். 1976-ல் தொடங்கிய படம் 1979-ல் வெளியானது.

எதிர் நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தை கண்டித்து புகைப்பட கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயபாரதியின் தந்தை ராமமூர்த்தியும், தாய் சரோஜாவும் நல்ல எழுத்தாளர்கள். ராமமூர்த்தி சிறுகதையாசிரியராக பெயர் பெற்றிருந்தார். கணையாழியில் அவர் எழுதிய குடிசை என்ற கதையையே ஜெயபாரதி படமாக்கினார். டெல்லி கணேஷ், கமலா காமேஷ் என புதுமுகங்கள் அதில் நடித்தனர். இவர்கள் இருவருக்கும் குடிசைதான் முதல் படம். கமலா காமேஷின் கணவர் காமேஷ் குடிசைக்கு இசையமைத்தார். படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. தென்னிந்தியாவில் அப்போது நடைபெற்ற அனைத்து திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. முக்கியமான படம் என்பதால் தகவல் தொழில்நுட்பத்துறையால் குடிசை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!

குடிசை 1979 மார்ச் 30 ஆம் தேதி இதே நாளில் வெளியானது. இன்றுடன் 43 வருடங்களை படம் நிறைவு செய்கிறது. ஜெயபாரதியை படம் எடுக்க தூண்டியது நல்ல சினிமா மீதான காதல். அது தந்த உத்வேகமே பலரிடம் பணம் திரட்டி கிரவுட் பண்டிங் மூலம் படம் எடுக்க வைத்தது. இன்று பலரும் கிரவுட் பண்டிங் என நன்கொடைக்கு அலைகின்றனர். ஜெயபாரதியிடம் இருந்த நல்ல சினிமாவுக்கான தாகமும், முயற்சியும் இவர்களிடம் இல்லை. இந்த இரண்டும் இல்லாத கிரவுட் பண்டிங் வெறும் ஏமாற்று முயற்சியாகவே திரிபடையும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி