• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Joji Review: கலைநயத்துடன் கூடிய சிற்பம் - ஜோஜி விமர்சனம்!

Joji Review: கலைநயத்துடன் கூடிய சிற்பம் - ஜோஜி விமர்சனம்!

ஜோஜி விமர்சனம்

ஜோஜி விமர்சனம்

தில்லீஷ் போத்தனின் மகேஷின்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் த்ரிஷாட்சியும் அட்டகாசமான சினிமாக்கள். கேரளா தாண்டி தமிழகத்திலும் போத்தனுக்கு நிறைய ரசிகர்கள். அவரது மூன்றாவது படம் ஜோஜி நேற்று அமெசான் ப்ரைமில் வெளியானது.

 • Share this:
  தில்லீஷ் போத்தனின் மகேஷின்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் த்ரிஷாட்சியும் அட்டகாசமான சினிமாக்கள். கேரளா தாண்டி தமிழகத்திலும் போத்தனுக்கு நிறைய ரசிகர்கள். அவரது மூன்றாவது படம் ஜோஜி நேற்று அமெசான் ப்ரைமில் வெளியானது.

  ரப்பர் தோட்டத்தின் நடுவில் இருக்கும் பிரமாண்ட பங்களா, அதில் வசிக்கும் குடும்பம் என்று கதையை சாவகாசமாக ஆரம்பிக்கிறார் இயக்குநர். குடும்பத்தின் இளைய மகன் ஜோஜி. அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் அப்பாவின் நிழலிலிருந்து ஒதுங்கி பணக்காரனாக விரும்புகிறான். அப்பாவை மீறி எதையும் செய்ய முடியாத சூழலில் தனது சிக்கல்களிலிருந்து மீள ஜோஜி எடுக்கும் முடிவு, அந்த குடும்பத்தையும், அவனையும் புரட்டிப் போடுகிறது.

  விடலையான உடல்மொழியுடன் ஜோஜியாக பகத் பாசில். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஜோஜி கதாபாத்திரத்தை தனது நடிப்பால் உருவாக்கி காட்டியிருக்கிறார். அவரது மூத்த அண்ணனாக வரும் பாபுராஜ் வழியாக மதங்களின் மூட நம்பிக்கையை இடித்துரைத்திருப்பது சிறப்பு. அப்பாவாக வரும் சன்னி, பாதிரியாக வரும் பேசில் ஜோசப், மருமகள் பென்சியாக வரும் உன்னிமாயா பிரசாத், சிறுவன் பாப்பி, உறவுக்கார டாக்டராக வரும் ஷம்மி திலகன் என அனைவரும் கதையோட்டத்துக்கு தகுந்த நடிப்பை தந்திருக்கிறார்கள்.
  நிறுத்தி நிதானமாக இந்த கதையை சொன்னா போதும் என்று முடிவு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. படத்தில் சம்பவங்களும் அதிகமில்லை. ஆன் லைனில் ஏர் கன் வாங்குவது, அப்பாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, மீனில்லாத குளத்தில் தூண்டில் போடுவது என எல்லாமே சாதாரண சம்பவங்கள். படத்தில் வரும் ஒரேயொரு அசாதாரண நிகழ்வையும், எந்த பில்டப்பும் இல்லாமல் காட்டியிருக்கிறார்கள். சின்னச் சின்ன உரையாடல்கள், கதையை நகர்த்துவது நடிகர்களின் அசாதாரணமான நடிப்பும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் இசையுமே. தனது இருப்பை காட்டிக் கொள்ளாத கேமரா, உறுத்தாத எடிட்டிங் என்று டெக்னிகல் சைடில் எந்த சேதாரமும் இல்லை.

  ஊரில் அந்த குடும்பத்தைக் குறித்து என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை வீட்டிற்குள் நடக்கும் உரையாடல் மூலமே காட்டுகிறார் கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன். ஒருவகையில் கதாசிரியரும், இயக்குநரும் இணைந்து எடுத்துக் கொண்ட சவால் இது. அதிக சம்பவங்களோ, திருப்புமுனை காட்சிகளோ இல்லாமல் கதாபாத்திரத்தின் வழியாக முன்னகர்ந்து ஒரு உலகை சிருஷ்டிப்பது. மாத்திரை டப்பாவுடன் அப்பாவின் அறைக்கு சொல்லும் ஜோஜி, பென்சியை கண்டதும் டப்பாவை மறைக்கிறான். ஆனால், அடுத்த நாள் அவளுக்கு முன்பாகவே டப்பாவை எடுத்துச் செல்கிறான். இரண்டே ஷாட். உரையாடல் இல்லாமல் ஜோஜியின் குற்றத்தில் பென்சியின் பங்கு சொல்லப்பட்டு விடுகிறது. இதேபோல் பல காட்சிகள்.

  கொஞ்சம் அசந்தாலும் நாடகமாகக் கூடிய திரைக்கதையில் தெரிந்தே பயணத்திருக்கிறார்கள். தனது முதலிரண்டு படங்களை பெரிய கேன்வாஸில் வரைந்த தில்லீஷ் போத்தன் இந்தமுறை பென்சில் முனையில் சிற்பம் செதுக்க முயற்சித்திருக்கிறார்.

  சிற்பம் சிறியது, ஆனால் கலைநயம் உண்டு.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: