• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • John Wick 4: வருகிறார் ஜான் விக் - சேப்டர் 4 படப்பிடிப்பு தொடங்கியது!

John Wick 4: வருகிறார் ஜான் விக் - சேப்டர் 4 படப்பிடிப்பு தொடங்கியது!

ஜான் விக் 4

ஜான் விக் 4

30 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுத்தப் படம் உலக அளவில் 86 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

  • Share this:
விமர்சகர் ராஜன், குறை கதாநாயகனின் மரணம் என்றொரு கட்டுரை எழுதினார். கதாநாயகனின் காலம் முடிந்து விட்டதாக. ஹாலிவுட்டிலேயே அதன் பிறகுதான் விதவிதமான நாயக மையப்படங்கள் வெளிவந்தன. கதை, கதை மாந்தர்கள் எல்லாம் பிறகு. முதலில் நாயகன், அவனது சாகஸங்கள். 2014-ல் அப்படி வெளிவந்த படம் ஜான் விக்.

ஜான் விக் (கியானு ரீவ்ஸ்) ஒரு ரிட்டையர்ட் ஹிட்மேன். ஆள்களைப் போட்டுத் தள்ளுவது தான் தொழில். ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்ததும், இந்த தாதா தொழில் வேண்டாம் என்று விலகி வந்துவிடுகிறார். துரதிர்ஷ்டவசமாக காதலி கேன்சரில் இறந்து போக, தனிமையில் தள்ளப்படும் ஜான் விக், காதலி பரிசளித்த நாயுடனும் தனக்குப் பிடித்த 1969 மாடல் Ford Mustang Boss 429 காருடனும் பொழுதை கழிக்கிறார். ஜான் விக்கிற்கு அவரது கார் என்றால் உயிர். ஆனால், அதுக்கு உயிர் கிடையாது. அதனால, இதை நீ வச்சுக்க என்று ஒரு நாயை பரிசளித்துவிட்டு சாகிறார் காதலி. அவருடன் இருப்பது அந்த நாய்தான்.

ஜான் விக் மாதிரியானவர்கள் தரையில் அறுந்துகிடக்கும் கரண்ட் கம்பியை போன்றவர்கள். கீழே தானே கிடக்கு என்று கையில் எடுத்தால் அவ்வளவு தான், ஆள் குளோஸ். அந்த ஊரின் மிகப்பெரிய தாதாவின் மகன் கம்பியை பிடித்துவிடுகிறான். அதாவது, ஜான் விக்கின் நாயை கொன்று, காரை திருடி விடுகிறான். தாதாவிற்கு விஷயம் தெரிய வருகிறது. ஒரேயொரு ஆள்தானே, நானே தேடிப்பிடிச்சி போட்டுடறேன் என்கிறான் பையன். பளுக்கென்று மகனுக்கு ஒரு குத்துவிட்டு, ஜான் விக்கின் கதையை தாதா சொல்கிறார்.

ஜான் விக் ரிட்டையர்ட் ஆகிறேன் என்றதும் அந்த தாதா யாராலும் செய்து முடிக்க முடியாத பெரிய வேலை ஒன்றை தருகிறார். ஜான் விக் அந்த வேலையை முடித்துக் கொடுக்கிறார். வேலை என்றால் வேறென்ன, ஆள்களை போட்டுத் தள்ளுவது தான். அப்படி ஒரே இரவில் ஜான் விக் போட்டுத் தள்ளிய ஆள்களின் மீது கட்டப்பட்டது தான்டா உன் நைனாவின் இந்த சாம்ராஜ்யம் என்கிறார் தாதா. ஒத்தை பென்சிலை வச்சு மூணு பேரை போட்டுத் தள்ளியவன் அவன், நீ அவனை தேடிச் செல்ல வேண்டாம் அவனே உன்னை தேடி வருவான் என்று அவர் சொல்லும் ஜான் விக்கின் அறிமுகம் நிஜமான ஹூஸ்பம்ப் காட்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜான் விக்கை Chad Stahelski இயக்கியிருந்தார். இவர் அடிப்படையில் ஒரு ஸ்டண்ட் இயக்குனர். கியானு ரீவ்ஸ் நடித்த தி மேட்ரிக்ஸ் சீரிஸ் உள்பட ஏராளமான படங்களில் பணிபுரிந்திருக்கிறார். புரூஸ் லீயின் மகன் பிரான்டன் லீயின் தி க்ரோ படத்தில் அவருக்கு டூப்பாகவும் சண்டைப் போட்டிருக்கிறார். ஜான் விக் இயக்குனராக அவருக்கு முதல் படம். 30 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுத்தப் படம் உலக அளவில் 86 மில்லியன் டாலர்களை வசூலித்தது. அடடா இந்த ஜான் விக்கில் எதோ இருக்கே என்று ஜான் விக் - சேப்டர் 2 எடுத்து 2017 இல் வெளியிட்டனர். முதல் பாகம் போல முன்னுரை விளக்கவுரை இல்லாமல் எடுத்ததுமே ஆக்ஷனில் அதகளப்படுத்தினார்கள். வசூல் 171.50 மில்லியன் டாலர்கள். 2019-ல் ஜான் விக் - சேப்டர் 3 - பேரபெல்லம் வெளியானது. இரண்டாவது பாகத்தைவிட இது டாப். வசூல் சுமார் 326 மில்லியன் டாலர்கள். நமது ரூபாயில் இரண்டாயிரம் கோடிகளுக்கும் மேல்.

சேப்டருக்கு சேப்டர் வசூல் எகிற, இதோ சேப்டர் 4-ஐ தொடங்கியிருக்கிறார்கள். மே 27, 2022 படம் வெளியாகும் என்று ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இந்தமுறை பிரான்ஸ், ஜெர்மனி, நியூயார்க், ஜப்பான் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இந்த சேப்டரின் அட்ராக்ஷன் டோனி யென். Ip Man படத்தின் ஹீரோ. மார்ஷியல் ஆர்ட்ஸில் தாதாவான இவர்தான் நான்காம் பாகத்தில் ஜான் விக்குடன் மோதப் போகிறார்.

ஜான் விக் வெளியான அதே 2014-ல் தான் ஈகுவலைசர் படம் வெளியானது. டென்சல் வாஷிங்டன் நடித்தது. ஜான் விக் போலவே ஹிட்மேன் கதாபாத்திரம். ஆனால், சட்டத்துக்கு உட்பட்ட முன்னாள் உளவாளி. ஒப்பீட்டளவில் ஜான் விக்கைவிட ஈகுவலைசர் தரமான படம். இரண்டாம் பாகம்கூட வந்தது. ஆனால், ஜான் விக் அளவுக்கு ஈகுவலைசர் அடுத்தடுத்த பாகங்கள் வராமல் போனதற்கு டென்சல் வாஷிங்டன்னின் கேரக்டரை பிராண்டிங் செய்யாதது முக்கிய காரணம். ஜான் விக் போல ஒரு பெயரை அவருக்கு அளித்து (ஈகுவலைசரில் அவர் பெயர் ராபர்ட் பாப் மெக்கல்) அதையே படத்தின் பெயராக்கி வெளியிட்டிருந்தால் படம் இன்னும் ரீச்சாகியிருக்கும். மிஸ் செய்து விட்டார்கள்.

ஜான் விக் நான்காவது பாகம் ஆரம்பிக்கும் முன்பே, நான்காம் பாகம் முடிந்த கையோடு ஐந்தாம் பாகம் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். சரி, கதை...? இதுபோன்ற படத்துக்கு நாலு டஜன் ஆள்களும், இரண்டு லாரி துப்பாக்கியும் இருந்தால் போதாது?உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: