தமிழ் சினிமாவில் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு திரைப்படங்கள் வெளியாவது நின்ற பின்னர், OTT தளங்கள் விஸ்வரூபம் எடுத்தன. ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு தமிழ் சினிமாவின் பெரும் பேசு பொருளாக மாறியது.
இதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான 'பென்குயின்', வரலட்சுமி நடிப்பில் உருவான 'டேனி', காக்டெய்ல் உள்ளிட்ட திரைப்படங்கள் இணையதளத்தில் அணிவகுத்தன.
இந்தத் திரைப் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்காத நிலையில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு தமிழ் சினிமாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ.ரணசிங்கம்’, அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிசப்தம்’ ஆகிய திரைப்படங்கள் அக்டோபர் இரண்டாம் தேதி இணையதளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. தொடர்ச்சியாக இணையதளங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் ஜெயம் ரவியும் இணைந்துள்ளார்.
ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 25-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘பூமி’ திரைப்படம் இணையதளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஹாட் ஸ்டார் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் பலரும் தற்போது திரையரங்கை தாண்டி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் என்ற நிலைக்கு வந்துள்ளதால் இனி திரையரங்குகளின் நிலை என்னவாகும் என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.