‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, எழுத்தாளர் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற நாவல். இதே பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதன் தயாரிப்பு, இயக்கம் எல்லாம் வேறு நபர்கள். படத்தின் பர்ஸ்ட், லுக், ட்ரெய்லரை கமல் வெளியிட்டதால், சில நேரங்களில் சில மனிதர்கள் பெயரை பயன்படுத்தாதீர்கள் எனக் கேட்டு கமலுக்கு ஜெயகாந்தன் குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
மதிப்புக்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு,ஜெயகாந்தனின் புதல்வர்கள் ஜெ. காதம்பரி, ஜெ. ஜெயசிம்மன், ஜெ. தீபலட்சுமி ஆகியோர் எழுதுவது.தமிழ் இலக்கிய உலகில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஒரு மைல்கல். சனாதனம் அதுவரை எழுதி வைத்திருந்த விதியை, பழக்கி வைத்திருந்த சமூகத்தை கேள்வி கேட்டு புதிய பார்வையையும், வெளிச்சத்தையும் தந்த ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையின் தொடராக எழுந்த நாவல் அது. தமிழ் சமூகத்தில் பெரும் விவாதங்களையும், உரையாடல்களையும் எழுப்பிய கதை அது.
அதன் தனித்துவத்தைப் போற்றுவதும், காப்பாற்றுவதும் தமிழ் இலக்கிய உலகின் பொறுப்பும், கடமையும் ஆகும் என நினைக்கிறோம். எழுத்தாளர் ஜெயகாந்தனையும், அவரது எழுத்துக்களையும் உண்மையாக மதிப்பவர்களும், நேசிப்பவர்களும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்.
மேலும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்பது ஒரு பழைய திரைப்படத்தின் தலைப்பு மட்டுமல்ல. இலக்கிய வாசகர்களாக இல்லாதவர்களுக்கும் கூட ஜெயகாந்தன் என்ற பெயரும் அதன் தொடர்ச்சியாய் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற சொற்றொடரும் பிரிக்க இயலாதபடி நினைவில் பதிந்து போனவை. அதனாலும் வேறு எந்தப் படைப்புக்கும் அத்தலைப்பைப் பொருத்திப் பார்க்க மனம் ஒப்பவில்லை.
“இல்லாதவர்கள் பாவம், எடுத்துக் கொள்கிறார்கள்”அவர் கதையையோ, பாத்திரப்படைப்பையோ யாராவது அவர் அனுமதியின்றித் திரைப்படங்களில் பயன்படுத்தி விட்டதாகத் தெரியவரும் போது அப்பா இப்படித் தான் பெருந்தன்மையோடு சொல்வார். அவரே சம்மதித்தாலும் நாம் அதை செய்யலாமா என்பது தான் இங்கு தார்மீக ரீதியாக எழும் கேள்வி.2009இல் அப்பாவின் சம்மதத்தைப் பெற்றுத் தான் “உன்னைப் போல் ஒருவன்” தலைப்பை எடுத்துக் கொண்டீர்கள் என்பதை அறிவோம்.
also read : சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்..
ஆனால் அதன் விளைவாக இன்று இணையதளத்தில் 1965ல் வெளியாகி தேசிய விருது, பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் பாராட்டு, அன்றைய சோவியத் யூனியனில் திரையிடல் போன்ற பல சிறப்புகளைப் பெற்ற ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ குறித்த அனைத்துத் தடயங்களும் 2009 திரைப்படத்தின் டிஜிட்டல் சுவடுகளால் மறைக்கப்பட்டு விட்டன என்பதை நீங்கள் அறிவீர்களா?அதே நிலை சாகித்ய அகாதெமியின் விருது பெற்ற, நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது பெற்றுத் தந்த, இன்றளவும் பலரால் பேசப்பட்டு விரும்பி ரசிக்கப்படுகிற ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலுக்கும் திரைப்படத்துக்கும் ஏற்படக் கூடாது என்று நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.
காப்புரிமை என்பது பொருள் ஈட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட உரிமை அல்ல. சொல்லப் போனால் அது இரண்டாம் பட்சமானது. காப்புரிமை என்பது படைப்பாளியின் படைப்புகளையோ அதன் தலைப்புகளையோ வேறொருவர் எடுத்துத் திரித்து வெளியிடுவதைத் தடுத்துக் காப்பது.
also read : கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு.. வைரலாகும் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..
ஜெயகாந்தனின் மக்களான எங்களிடம் அந்த உரிமை இருக்கும் வரை இம்மாதிரியான செயல்களைச் சுட்டிக்காட்டி அவை நடைபெறா வண்ணம் தடுப்பதும் எங்கள் கடமையாகிறது.
ஆகவே, தங்கள் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்துக்கு “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றி வேறு தலைப்பு வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
also read : சினிமாவில் 19 வருடத்தை நிறைவு செய்த த்ரிஷா-வைரல் புகைப்படம்
ஜூலை மாதம் அதன் அறிவிப்பு வந்தவுடனேயே இதற்கான எதிர்ப்பை எழுத்தாளர்கள் பிரபு தர்மராஜ், மலர்வண்ணன், பத்திரிகையாளர் கவின்மலர் உட்படப் பலரும் தெரிவித்திருந்தனர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
அப்பாவின் நல்ல நண்பர் என்பது மட்டுமல்லாது உலகநாயகன் என்று புகழப்படுகிற சிறந்த கலைஞர் என்ற முறையிலும் நீங்கள் எங்களது இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema, Kamal Haasan