ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹாலிவுட் தழுவல் - நல்லவனாகவும், வில்லனாகவும் ஜெய்சங்கர் அசத்திய பஞ்சவர்ணக் கிளி!

ஹாலிவுட் தழுவல் - நல்லவனாகவும், வில்லனாகவும் ஜெய்சங்கர் அசத்திய பஞ்சவர்ணக் கிளி!

பஞ்சவர்ணக் கிளி படத்திலிருந்து ஒரு காட்சி

பஞ்சவர்ணக் கிளி படத்திலிருந்து ஒரு காட்சி

இதனை தழுவி 1981 இல் நெஞ்சில் ஒரு முள் தமிழ்ப் படம் எடுக்கப்பட்டது. தமிழின் முக்கிய திரைப்படங்களின் நதிமூலத்தைப் பார்த்தால் அது ஏதாவது ஒரு மேற்கத்திய நாவலின் தழுவலாக இருக்கும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

1965 இல், இரவும் பகலும் படத்தில் ஜெய்சங்கர் அறிமுகமானார். அதேவருடம் அவரது நடிப்பில் பஞ்சவர்ணக் கிளி என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. பஞ்சவர்ணக் கிளியை கே.சங்கர் இயக்கினார். முத்துராமன், ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோரமா பிரதான வேடங்களில் நடித்தனர். சீனியர் நாயகன் என்பதால் முத்துராமனின் பெயர்தான் படத்தில்  முதலில் வரும். எனினும், நல்லவன், வில்லன் என இரு வேடங்களில் நடித்த ஜெய்சங்கரே படத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்.

பஞ்சவர்ணக் கிளி ஆள்மாறாட்டக் கதை. சொக்கலிங்கம், மீனாட்சி தம்பதியின் மூத்த மகன் சங்கர். ராணுவ அதிகாரி. இளையவன் கண்ணன். தனது தங்கையின் மகள் மேகலாவை சங்கருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, மேகலையை தனது வீட்டோடு வைத்திருப்பார் சொக்கலிங்கம். அவருக்கு தனது மனைவி மீனாட்சியின் தம்பி குமரப்பா மீது தீராப்பகை. தனது தங்கையை மனைவியின் தம்பி குமரப்பாவுக்கு திருமணம் செய்ய நினைத்திருப்பார் சொக்கலிங்கம். குமரப்பா அதனை மறுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆகியிருப்பார். சொக்கலிங்கத்தின் தங்கைக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும். ஒரு குழந்தை - மேகலா- பிறந்த பிறகு இருவரும் விபத்தில் பலியாகிவிடுவார்கள். குமரப்பா தனது தங்கையை திருமணம் செய்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என்பது சொக்கலிங்கத்தின் நம்பிக்கை. அதுவே குமரப்பாவை வெறுக்க காரணமாக இருந்திருக்கும். தனது மகன் சங்கர் ராணுவத்திலிருந்து திரும்பியதும் அவனுக்கு மேகலாவை திருமணம் செய்து வைக்க காத்திருப்பார்.

அங்கே டெல்லியில் சங்கருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும். சங்கரின் உயிரை காப்பாற்றி கர்னல், தனது மரணப் படுக்கையில் தனது மகள் சித்ராவை திருமணம் செய்து கொள்ளும்படி சத்தியம் வாங்கிவிட்டு செத்துப்போவார். அதை தட்ட முடியாமல் சித்ராவை சங்கர் திருமணம் செய்திருப்பார். அதன் பிறகுதான், கர்னல் குமரப்பா தனது தாய்மாமன் குமரப்பா என்பதும், அவளது மூத்த மகள்தான் சித்ரா என்பதும் சங்கருக்கு தெரிய வரும். இதன் காரணமாக தனக்கு திருமணம் ஆனதை குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்திருப்பார்.

இங்கே சொக்கலிங்கத்தின் இரண்டாவது மகன் கண்ணன் வானொலி பாடகி வாணியை அவளது குரலைக் கேட்டு காதலிப்பான். வாணியை சந்திக்கப் போகையில், வாணியிடம் இருக்கும்  கவரில் சித்ரா என்றிருப்பதைப் பார்த்து வாணியை சித்ரா என்று நினைத்துக் கொள்வான். இந்த வாணிதான் குமரப்பாவின் இரண்டாவது மகள்.

இதனிடையில், சங்கர் தனக்கு திருமணம் ஆனதை தெரிவிக்க, மேகலா உடைந்து போவாள். கண்ணனுக்கு திருமணம் செய்ய பெண் பார்ப்பார்கள். அவன் விரும்பிய வாணியை, அவளைப் பார்க்காமலே பேசி முடிப்பார்கள். இந்த நேரத்தில் பர்மாவிலிருந்து திரும்பும் சங்கரைப் போலிருக்கும் பாலு வாணியை திருமணம் செய்ய முயற்சிப்பான். அவளைப் பற்றி அவதூறு பரப்பி, திருமணத்தை நிறுத்துவான். அவனும், வாணியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து, வாணிதான் சங்காpன் மனைவி சித்ரா என்று சொக்கலிங்கமும் மற்றவர்களும் நினைத்துக் கொள்வார்கள்.

ஆள்மாறாட்டம் உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கையில் சங்கர் போரில் இறந்ததாக தகவல் வரும். இதனைக் கேட்டு சித்ராவும் உயிர் துறப்பாள். அக்கா சித்ராவின் குழந்தையுடன் வாணி சங்கர் வீட்டிற்குவர, அவளை சங்கரின் மனைவி என அக்குடும்பம் நினைத்துக் கொள்ளும். வாணிக்கு மட்டும்தான் கண்ணன் தன்னை மணக்க இருந்தவன் என்பது தெரியும். இந்த நேரத்தில் பாலு இறந்து போன சங்கராக வீட்டிற்குள் நுழைவான். அதேநேரம், வாணி என்று வேறொரு பெண்ணை கண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வான். இந்த நேரத்தில் உண்மையான சங்கர் உயிரோடு வர, பாலுவின் குட்டு வெளிப்பட்டு கண்ணனும், வாணியும் ஒன்றிணைவார்கள்.

அந்தக்காலத்தில் இப்படியொரு ஆள்மாறட்டக் கதை தமிழில் வெளியானது ஆச்சரியம்தான். ஹாலிவுட்டில் வெளியான நோ மேன் ஆஃப் ஹெர் ஓன் படத்தை மேலோட்டமாகத் தழுவி இந்தக் கதையை வலம்புரி சோமநாதன் எழுதியிருந்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக பாரதிதாசனின் தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. படமும் நல்ல வரவேற்பை பெற்று லாபம் சம்பாதித்தது.

ஆங்கிலப் படம் நோ மேன் ஆஃப் ஹெர் ஓன் 1948 இல் வெளியான ஐ மேரீட் ஏ டெட் மேன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த நாவல் ஜப்பான், பிரெஞ்ச் உள்பட பல மொழிகளில் திரைப்படமாகவும், தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டது. இந்தியிலும் இதனை படமாக எடுத்தனர். இதனை தழுவி 1981 இல் நெஞ்சில் ஒரு முள் தமிழ்ப் படம் எடுக்கப்பட்டது. தமிழின் முக்கிய திரைப்படங்களின் நதிமூலத்தைப் பார்த்தால் அது ஏதாவது ஒரு மேற்கத்திய நாவலின் தழுவலாக இருக்கும்.

எல்லாப் புகழும் நம்முன்னோர்களுக்கே!

First published:

Tags: Classic Tamil Cinema