• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெய் பீம் - வன்னியர் தொடர்பான உண்மையும், பொய்யும்

ஜெய் பீம் - வன்னியர் தொடர்பான உண்மையும், பொய்யும்

ஜெய் பீம்

ஜெய் பீம்

தோழர் கோவிந்தன் இந்த வழக்குக்காக 13 வருடங்கள் போராடியிருக்கிறார்.

  • Share this:
ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற ஒரு காலண்டர் காட்சி ஒட்டுமொத்த வன்னியரை இழிவுப்படுத்திவிட்டதாக பலரும் கொந்தளிக்கிறார்கள். இயக்குனர் வ.கௌதமன் போன்றவர்கள், இது திட்டமிட்ட வன்மம் என்று பெரிய வார்த்தைகளில் கண்டித்திருக்கிறார்கள். ஜெய் பீம் பேசிய அரசியலில் இருப்பது உண்மையா இல்லை பொய்களா?

ஜெய் பீமில் இருளர் சமூக இளைஞனை அடித்தே கொல்லும் எஸ்ஐ கதாபாத்திரத்தின் வீட்டில் வன்னியர் சங்க காலண்டர் இருப்பதாக காட்டப்பட்டது. உண்மையாக நடந்த நிகழ்வில் இருளர் இளைஞரை கொலை செய்தவர் வன்னியர் அல்ல. உண்மைச் சம்பவத்தை எடுப்பதாக கூறிவிட்டு பொய்யாக சம்பவத்தை திரிப்பதா என வன்னியர் சங்கங்கள், வ.கௌதமன் போன்றவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்தக் காட்சியில் இடம்பெறும் காலண்டரின் படம் மாற்றப்பட்டது.

இந்த சர்ச்சையை தொடர்ந்து, ஜெய் பீம் உண்மையை பேசுகிறதா இல்லை பொய்யை முன் வைக்கிறதா என்று ஒரு கோஷ்டி விவாதத்தில் இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட, இந்த வழக்கை பதினொரு வருடங்களுக்குமேல் நீர்த்துப்போகாமல் நடத்தியவர் கம்யூனிஸ்டான தோழர் கோவிந்தன். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த பேட்டியை அப்படியே தருகிறோம்.

"ராஜாகண்ணுக்கு நீயென்ன அக்கா மவனா, இல்ல தங்கச்சி மவனா... இந்த வழக்கை நான் விட்டுட்டு போகணுங்கிற அளவுக்கு எனக்கு தொல்லை குடுத்தாங்க. அதாவது என்னைய மிரட்டுறது, அதைப் பண்ணுவோம், ஆளைக் கடத்துவோம், கார் ஏத்தி கொல்லுவோம், வெட்டி துண்டு துண்டாகப் போட்டுருவோம். இல்ல காசு வாங்கிக்க, வாங்கிட்டு ஒதுங்கிக்க. அந்த மக்களுக்காக நீ என்ன போராடுறது? வன்னியராக இருந்திட்டு நீ என்ன போராடுறது? அந்த மக்களுக்கு அவங்க இல்ல போராடணும். குறிப்பாக இந்த மாவட்டமே வன்னியர் மாவட்டம். வன்னியர் மாவட்டத்துல நீ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு, ஆதிவாசி மக்களுக்கு எப்படி போராட முடியும்? உன்னை விடவே மாட்டோம். தீர்த்து கட்டுவோம். அரசியல் கட்சி மூலமாக, ரவுடிகள் மூலமாக, காவல்துறை மூலமாக தொடர்ந்து மிரட்டல் இருந்து கொண்டிருந்தது.

பிறகு நான் பார்த்தேன். இந்த காலகட்டத்துல நம்மளையே மிரட்டுறாங்க. நாம ஒரு திருமணம் செய்து கொண்டால் இந்த விஷயத்தில் நமக்கு ஈஸியா நெருக்கடி குடுப்பாங்க. சரி, நாம திருமணம் செய்து கொள்ள வேண்டாம். எதுவா இருந்தாலும் நம்மளோடவே போகட்டும். அவன் கார் ஏத்தினாலும் நம்மளை கொல்லட்டும் வெட்டிப் போட்டா நம்மளை வெட்டிப் போடட்டும், கடத்தினா நம்மளையே கடத்தட்டும், நம்மளோடவே போகட்டும். தேவையில்லாம எதுக்கு இன்னொரு புதுசா பிரச்சனையை உருவாக்கிட்டுன்னு, இந்த வழக்கு முடிஞ்சா திருமணம் பண்ணிக்கிறது. இல்லை திருமணம் பண்ணாமலே விட்டுப் போறதுன்னு முடிவு பண்ணுனேன். கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் நான் தனியாவே இருக்க மாட்டேன். இரவு நேரங்களிலும் சரி, பகல்லயும் சரி எப்பவும் எங்க கூட இரண்டு பேர் இருந்திட்டே தான் இருப்பாங்க. இரவு நேரம் நான் படுத்து தூங்கிறப்பவும் இரண்டு பேர் எங்கூட இருந்துகிட்டு தான் இருப்பாங்க. ஒத்த ஆளா எப்பவும் இருக்க மாட்டேன், எங்கேயும் போக மாட்டேன்…

தோழர் கோவிந்தன் இந்த வழக்குக்காக 13 வருடங்கள் போராடியிருக்கிறார். வன்னியர் சங்கமும், வ.கௌதமனும் சொல்வது போல் அந்த எஸ்ஐ வன்னியர் அல்ல. அவரை வன்னியராக சித்தரித்தது தவறுதான். அதேபோல், வன்னியர் சம்பந்தப்படாத ஒரு வழக்குக்காக அதை நடத்தியவர் 13 வருடங்கள் மிரட்டப்பட்டிருக்கிறார். மிரட்டியவர்கள் யார் என தனது பேட்டியில் தெளிவாக குறிப்பிடுகிறார். இந்த உண்மையை ஜெய் பீம் படத்தில் வைத்திருக்க வேண்டும்.

ஜெய் பீம் படத்தை வன்னியர் சங்க காலண்டருக்காக விமர்சிப்பவர்கள், தோழர் கோவிந்தன் சொல்லும் தகவல்களை படத்தில் வைக்காமல் விட்டதற்காக மனநிம்மதி கொள்ளுங்கள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: