Jagame Thandhiram Review: ஜகமே தந்திரம் - ஒரு துன்பியல் அனுபவம்

ஜகமே தந்திரம்

மாரி கதாபாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் ரஜினி மேனரிஸத்தை விட்டால் அதுதான் சுருளி.

  • Share this:
தனுஷின் ஜகமே தந்திரம் இன்று நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. மதியம் முதலே ரசிகர்கள் படத்தை ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.

மதுரையில் கொலை, ரவுடிசம் என்று வாழ்ந்து வரும் பரோட்டாக்கடை சுருளி லண்டனில் நடக்கும் கேங்வாரில் எதிரிகளை போட்டுத் தள்ளி உலக அகதிகளில் ஆபத்பாந்தவனாவதே ஜகமே தந்திரத்தின் பூர்வாங்க கதை.

ஈழப்படுகொலையை வைத்து இன்னும் எத்தனை கிளெஸ்டர் பாம்களை தயாரிப்பார்களோ தெரியவில்லை. கமல் ஒரு படத்தில், "பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது" என்று சொல்வாரில்லையா, இந்தப் படத்தில் எதையாவது ஆராய முற்பட்டால் அவ்வளவுதான். ஒவ்வொரு காட்சியுமே ஒரு அனுபவம். பெரும்பாலும் ஹாரர் ரகம்.

மாரி கதாபாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் ரஜினி மேனரிஸத்தை விட்டால் அதுதான் சுருளி. முதல் காட்சியே பட்டையை கிளப்புகிறது. தண்டாவாளத்தின் குறுக்கே காரை விட்டு, ரயிலை நிறுத்துகிறார் தனுஷ். ரயிலை ஓட்டி வருகிறவர் பவ்யமாக இறங்கி வந்து, அண்ணே சீக்கிரம் முடிங்க என்கிறார். தனுஷ் சாவகாசமாகப் போய் ரயிலில் ஒருத்தனை போட்டுவிட்டு வருகிறார். சென்ட்ரல் கவர்மெண்ட் ப்ராப்பார்ட்டியை நடுவழியில் நிறுத்தி ஆளைப் போடுகிறாரே, இன்டர்நேஷனல் டெரரிஸ்டாக இருப்பாரோ என்று பார்த்தால், மதுரை முட்டுச் சந்தில் பரோட்டா கடை வைத்திருப்பவராம். வாவ்!

படம் லண்டனுக்கு டேக்ஆஃப் ஆன பிறகு கதை தலைகால் புரியாமல் செல்கிறது. பிரிட்டனில் புதிய சட்டம் கொண்டு வர முடிகிற அளவுக்கு பெரிய புள்ளி ஜான் காஸ்மோஸ். அண்டர்கிரவுண்டில் கடத்தல்காரர். ஒரு ரேசிஸ்டாக கொடுத்த வேலையை செய்திருக்கிறார். அவரது எதிரி ஜோஜூ ஜார்ஜ். தலையைச் சிலுப்பி இரண்டு மூன்றுமுறை ஸ்லோமோஷனில் நடந்து பரிதாபமாக இறந்து போகிறார். இன்னொரு ஐயோ பாவம் ஐஸ்வர்யா லட்சுமி. காதல் காட்சியில், தனுஷ் எக்ஸ்ட்ரா மேனரிஸத்துடன் ஒருதளத்தில் நடிக்க, மலையாள யதார்த்தத்துடன் இவர் நாணத்தில் தயங்க... பயங்கரம்!

தனுஷ் செய்த வேலைக்கு பரிசாக லண்டன் வில்லன் ஒரு தெருவையே அவருக்கு தருகிறார். ஆம், லண்டனில்தான். அடுத்தக் காட்சியில் அங்கு பாதி மதுரையை கொண்டு வந்து இறக்கி சுருளி பரோட்டா கடை, பட்டாசுக் கடையெல்லாம் திறந்து, லிட்டில் மதுரை என போர்ட் மாட்டுகிறார் தனுஷ். மதுரைக்காரனா கொக்கா!

ஈழத்தமிழர்களின் வலி இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு தெரியாது என்ற உண்மைக்குப்புறம்பான விமர்சனம் சோமித்ரன் (இதில் ஐஸ்வர்யா லட்சுமியின் சகோதரராக வருகிறவர்) போன்ற ஈழத்தமிழர்களுக்கு உண்டு. பாதி படத்துக்கு மேல் இந்த பொய் பிரச்சாத்தை படம் நெடுக தூவியிருக்கிறார்கள். வலி தெரியாமலா அத்தனை தமிழர்கள் தீக்குளித்தார்கள்? தனுஷை தமிழர்களின் பிரதிநிதியாக்கி ஈழத்தமிழர்களுக்காக சுயகழிவரக்கம் கொள்ள வைப்பதெல்லாம் மாபெரும் அரசியல் பிழை. இன்னும் எத்தனைக் காலம் இங்குள்ள தமிழர்களை ஈழத்துரோகிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோஜூ ஜார்ஜ் கொல்லப்படும் போதே கதை விழுந்துவிடுகிறது. கடத்தல்காரராக சித்தரித்த அவரை, திடீரென போராளியாக்குவது ட்விஸ்டாக இருக்குமென்று நினைத்திருந்தால் தவறு. எந்த உணர்வையும் தராமல் அது கடந்து போகிறது. மேலும், புலம்பெயர் நாடுகளில் கடத்தலிலும், கொலை கொள்ளையிலும் ஈழத்தமிழர்கள் ஈடுபடுகிறார்கள் என்று காட்சி வைப்பது எந்தவிதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கு துணைபுரியப் போகிறது?

பரோட்டாவுக்கு சால்னா தொட்டுக் கொள்வது போல் அத்தனை அசால்டாக சீனுக்கு அம்பது பேரை போடுவதை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஐஸ்வர்யா லட்சுமியின் அரை நிமிட லெக்சரில் மனம் திருந்தி, "நானெல்லாம் சாதாரண ஆளு, சம்பாதிச்சமா, சந்தோஷமா வாழ்ந்தமான்னு இருக்கிறவன்"னு அடித்தொண்டையில் தனுஷ் தழுதழுக்கிறபோது ஷாக்காகிறது. அவ்ளோ அப்பாவியா பாஸ் நீங்க? ஹீரோவே திருந்திய பிறகு அவருடைய அம்மா திருந்தாவிட்டால் எப்படி? வடிவுக்கரசிக்கும் இதே போல் ஒரு ஷாக்கிங் டயலாக்.

ஹீரோவும், வில்லனும் பரஸ்பரம் சவால்விடும் கடைசி அரை மணிநேரம் பழைய ஹாலிவுட் படத்தை ஸ்பூஃப் செய்கிறார்களா இல்லை சீரியஸாகத்தான் எடுக்கிறார்களா என தடுமாற வைக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் முதல் பாடல் திரையரங்கில் என்றால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும். பின்னணி இசையிலும் மனிதர் கலக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று அனைத்து உழைப்பும் காலாவதியான கதை, காட்சிகளில் வீணாடிக்கப்பட்டிருக்கிறது. கதை, காட்சி, கதாபாத்திரங்கள் என எதிலும் குறைந்தபட்ச லாஜிக்கில்லாத படத்தை இரண்டரை மணிநேரம் பார்ப்பதே ஒரு சாதனைதான்.

ஜகமே தந்திரம் - துன்பியல் அனுபவம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: