தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாவதாக டீசருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. அதோடு அந்தப் படம் ஓடிடி-யில் வெளியாகும் என்ற தகவல் வெளியானதும், அதற்கு தனுஷ் ரசிகர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. ஜகமே தந்திரம் படத்தை கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளருக்கு கோரிக்கை விடுத்து, ரசிகர்கள் போஸ்டர்களையும் ஒட்டினர்.
இதற்கிடையே ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களைப் போல தானும் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் திரையரங்கு வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருப்பதாக கடந்த 2-ம் தேதி ட்வீட் செய்திருந்தார் தனுஷ். இந்நிலையில் தற்போது அந்தப்படம் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வெளியாகிறது என்பது குறித்த தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 2021-ம் ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய முக்கிய படமாகும். தனுஷுடன் இணைந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்