Dhanush: நெட்பிளிக்ஸில் ஜகமே தந்திரம் - ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்!

தனுஷ்

'சிறப்பான திரை அனுபவமாக இருக்க வேண்டியது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இருந்தாலும் ஜகமே தந்திரத்தையும், சுருளியையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்' என் ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.

  • Share this:
    தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வரும் 18-ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இன்று காலை படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். ட்ரெய்லர் பரவலான கவனத்தை பெற்றிருக்கும் நிலையில், படம் ஓடிடி தளத்தில் வெளியாவதால் உண்டான ஏமாற்றத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் தனுஷ்.

    முன்னணி நடிகர்கள் தங்களின் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகின்றனர். கட் அவுட், பாலாபிஷேகம், பட்டாசு, வான வேடிக்கை, வாழ்த்து கோஷம், கூட்ட நெரிசல் என்று அதுவொரு திருவிழா. தங்களின் மாஸ் இமேஜை நேரில் பார்க்க அதுவொரு வாய்ப்பு. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி கைத்தட்டியும், விசிலடித்தும் கொண்டாடும் பெருவிழா. இவை எதுவும் ஓடிடியில் இல்லை.

    படத்தில் நாயகனுக்கு வைக்கப்படும் மாஸ் ஓபனிங், பன்ச் டயலாக், பிரமாண்ட சண்டைக் காட்சிகள் எதுவும் நாற்பது இன்ச் தொலைக்காட்சி பெட்டியில் கவருவதில்லை. ஜகமே தந்திரம் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் படம். அகன்ற திரையில் அதன் சண்டைக் காட்சிகளை பார்த்தால் அது பிரமிப்பு. தொலைக்காட்சியில் வெறும் சுண்டைக்காய். வருத்தமும் ஏமாற்றமும் இருக்கத்தான் செய்யும்.



    'சிறப்பான திரை அனுபவமாக இருக்க வேண்டியது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இருந்தாலும் ஜகமே தந்திரத்தையும், சுருளியையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்' என் ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.

    ஜகமே தந்திரம், கார்த்திக் சுப்பராஜ் பல வருடங்கள் முன்பு எடுக்க நினைத்த படம். தனுஷும் நடிக்க ஒப்புக் கொண்ட நிலையில், தனுஷின் சந்தை மதிப்பைவிட படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தனுஷ் மாஸ் நடிகராக உருவெடுக்க, ஜகமே தந்திரத்தை தொடங்கினர். படம் திரையரங்கில் வெளியாகாதது தனுஷுக்கு மட்டுமில்லை, அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: