முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Ilayaraja: தமிழர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த இசைஞானி இளையராஜா!

Ilayaraja: தமிழர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த இசைஞானி இளையராஜா!

இளையராஜா

இளையராஜா

உறவுகளின் இழப்பை நெஞ்சுக்குள் அடைத்து பொய்யாக சிரித்து நின்ற பலரை இளையராஜாவின் பாடல் அழ வைத்திருக்கிறது.

  • Last Updated :

மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படுகிறார். ஆனால் அவருக்கும் தமிழர்களுக்குமான உறவு புள்ளிவிவரங்களை கடந்தது, உணர்வோடும், உயிரோடும் கலந்தது.

நடிப்பு, ஓவியம், சிற்பம், எழுத்து என பல கலைகளில் மனிதனை எளிதில் சென்றடைவதும், அவனை உணர்ச்சியமாக்குவதும் இசை. பிற கலைகள் கடவுளின் கொடை என்றால் இசையே ஒரு கடவுள். கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், சலீல் சௌத்ரி, ரவீந்திரன் மாஸ்டர், அவுசேப்பச்சன் என்று பல மாஸ்டர்கள் இசையுலகில் இருந்திருக்கிறார்கள். எம்.எஸ்.வி.யின் எச்சிலே நான் என்று கூறியிருக்கிறார் இளையராஜா. எனில் அவர்களைத் தாண்டிய சாதனையாளர் இளையராஜா. அனாயாசமான கலைஞன். இசையின் ஊற்று. அவரளவுக்கு விதவிதமான மெட்டுகள் (டியூன்) தந்தவர் யாருமில்லை. அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் வருடத்துக்கு 53 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒரு படத்துக்கு ஐந்து பாடல்கள் என்று வைத்துக் கொண்டாலும் 265 பாடல்கள். அதாவது 265 மெட்டுகள். இன்று ஒரு மெட்டமைக்க ஆறுமாதம் எடுக்கிறார்கள். நாடு நாடாக பறக்கிறார்கள். அப்படியும் 'கட்டில் சரியாகாததை பூச்சில் மறைப்பது போல்' பலவீனமான மெட்டை இசையால் நிரப்புகிறார்கள்.

எம்.எஸ்.வி. ஆலவிருட்சம். அவரது ஆளுமையின் சாயலின்றி வெளிப்படுவது எளிதல்ல. அதற்கு பல யுக்திகளை கைக்கொண்டதாக இளையராஜா கூறியிருக்கிறார்.

'காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்...'

என எம்.எஸ்.வியின் பல்லவிகள் பெரும்பாலும் துண்டாடப்படுவதில்லை, ஒரே விசையுடன் மேலெழும். பல்லவியை துண்டு துண்டாக்கினேன் என்று ஒரு பேட்டியில் இளையராஜா குறிப்பிடுகிறார்.

'பூங்கதவே தாழ் திறவாய்...'

இந்த ஒரு வரியில் மட்டும் எத்தனை ஏற்ற இறக்கங்கள்.

தர்ம யுத்தத்தில் வரும், 'ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி...'

பாடலின், ஆ என்ற முதல் எழுத்தில் அவர் காட்டும் அழுத்தம்... ஒரு வரிக்குள் எழும் பல்வேறு பாவங்கள்... இவையனைத்தும், அதுவரை இருந்த இசையிலிருந்து மாறுபட்டு, இளையராஜா அறிந்தே எடுத்த முயற்சிகள்.

இளையராஜாவின் முன்னோடிகள் பலரும் மெட்டுகள் அமைப்பதில் வித்தகர்கள். அவர்களை இளையராஜா கடந்து செல்லும் இடம், அவரது மேற்கத்திய இசையறிவு. பல்லவிக்கும் சரணத்துக்கும் நடுவில் வரும் இடைவெளியை இளையராஜா இசையால் நிரப்புவது அலாதியானது. மெட்டுக்கு சம்பந்தமில்லாமல் இந்த இசைத்துணுக்கு ஆரம்பித்து மின்னெலென சொடுக்கும், அருவியாக எழும், ஆறாக பாய்ந்து எதிர்பாராத கணத்தில் மெட்டுக்கு இயைந்து அதனுடன் ஒன்றிணையும். அந்த சிலநொடி இடைவெளியில் இளையராஜா நடத்தும் இசையரங்கத்தை இன்றுவரை யாரும் நிகழ்த்தி காட்டியதில்லை.

இன்று இசைக்கருவிகள் பெருகிவிட்டன. மனிதர்களைவிட கணினிகள் துல்லியமான இசையை தருகின்றன. ஆனால், பாட்டிசையில் உயிர் தருவது மெட்டுக்களே. இளையராஜாவின் மெட்டுக்களை வார்த்தைகளின்றி முணுமுணுக்கும் போதே அது காதல் பாடலா, சோகப் பாடலா, சோகம் என்றால் தாயின் வலியா, காதலின் பிரிவா, கொண்டாட்டம் என்றால் ஆணின் கள்வெறியா, காதல் கைகூடிய மகிழ்ச்சியா, காலையின் புலர்ச்சியா, மழலையின் சிரிப்பா... அனைத்தையும் மெட்டுக்களே சொல்லிவிடும். எனவேதான் இளையராஜாவின் ஓர் இசைத்துணுக்கை கேட்கும் போதே, ஒரு கோரஸை செவி அறியும் போதே நமது உள்ளங்கள் இசையுடன் இயைந்து தாளமிட ஆரம்பிக்கின்றன.

கமலின் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் பான் - இந்தியா கனவை நிறைவேற்றுமா?

தமிழ் சினிமா இதுவரை தந்த கலைஞர்களில் முக்கியமான பத்து கலைஞர்களை தேர்வு செய்தால் அதில் இளையராஜா இருப்பார். ஐந்துகலைஞர்களை தேர்வு செய்தால் அப்போதும் இளையராஜா இருப்பார். ஒரேயொரு கலைஞனை தேர்வு செய்யச் சொன்னால் தமிழ் சமூகம் தயங்காமல இளையராஜாவையே தேர்வு செய்யும். அவர் வெறும் கலைஞனில்லை. தமிழர்களின் ஆன்மிக வறுமையை போக்கியதில் அவரது பங்கு முக்கியமானது. ஆன்மிகம் என்றால் கடவுள் பக்தி அல்ல, இது வேறு. அன்பே அனைத்துக்கும் மேல் என்ற புத்தரின் ஆன்மிகம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் ஆன்மிகம், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஆன்மிகம், உனக்கு ஒருவன் எதை செய்யக் கூடாது என்று எண்ணுகிறாயோ, அதை நீ அடுத்தவனுக்கு செய்யாதிருப்பதே ஒழுக்கம் என்ற பெரியாரின் ஆன்மிகம், மனிதன் தன்னைப் பற்றி தானே அதிருப்தி கொள்கிறானோ, இன்றிருப்பதைவிட இன்னும் மேலானவனாக இருக்க முயல்கிறானோ அது ஒன்றுதான் புனிதமானது என்பேன் என்ற மாக்சிம் கார்க்கியின் ஆன்மிகம்.

அருண் விஜய் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ட்வீட்!

உறவுகளின் இழப்பை நெஞ்சுக்குள் அடைத்து பொய்யாக சிரித்து நின்ற பலரை இளையராஜாவின் பாடல் அழ வைத்திருக்கிறது. காதலின் நுனிக்கரும்பை சுவைத்தவர்களுக்கு அதன் முழு சுவையை அறிய வைத்தது அவரது பாடல்கள். காலையில் உதயமாகவும், பயணங்களில் வழித்துணையாகவும், கவலைகளில் தோழனாகவும், மகிழ்ச்சிகளில் கொண்டாட்டமாகவும், இரவுகளில் தாலாட்டாகவும் தமிழர்களின் வாழ்வோடு கலந்திருக்கிறது அவரது இசை. கிராமப்பேருந்துகளில் இன்னும் இளையராஜாவே நமது சகப்பயணி. அவரில்லாமல் எந்த பேருந்துமில்லை, பயணங்களுமில்லை.

Naga Chaitanya: இரண்டாவது திருமணத்துக்கு தயாரான நாக சைத்தன்யா? மணப்பெண் இவராமே...

கொரோனா பெருந்தொற்றால் மரணமடைந்த இளைஞனின் இறுதி விருப்பதை நிறைவேற்ற, அவனது சடலத்தை சுற்றி நின்று அவனது நண்பர்கள் இளையராஜாவின் பாடலை பாடி வழியனுப்பிய காணொலி வைரலானது நினைவுக்கு வரலாம். இதுபோல் ஒரு வழியனுப்பலையே மனம் விரும்புகிறது என்று அந்த வீடியோவுக்கு கீழே பதிவிட்டிருந்தார் ஓர் இளம் எழுத்தாளர். அவருக்கு மட்டுமில்லை பலரது விருப்பமும் அதுவே. தமிழர்களுக்கு இசையோடு வாழ்தல் என்பது இளையராஜாவோடு வாழ்தல்.

நீருக்குள் இருக்கும் வரை மீனுக்கு கடல் தெரிவதில்லை என்பார்கள். தமிழ் சமூகம் இளையராஜா எனும் சாகரத்துக்குள் இருக்கிறது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Ilayaraja